Published:Updated:

`பினராயி விஜயனுடன் போராட்டம்!' - ரமேஷ் சென்னிதலாவைக் கைவிட்ட கேரள காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த சலசலப்பைத் தொடர்ந்து சி.பி.எம் தனியாகவும், காங்கிரஸ் கட்சி தனியாகவும் போராட்டம் அறிவித்துள்ளன.

முதல்வர் பினராயி, ரமேஷ் சென்னிதலா
முதல்வர் பினராயி, ரமேஷ் சென்னிதலா

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒன்றாகப் போராட்டம் நடத்த காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் சி.பி.எம் கட்சியினர் சேர்ந்து முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் கடந்த திங்கள்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சி.பி.எம் கட்சியினரும், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்ட சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது.

திருவனந்தபுரம் போராட்ட மேடையில்
திருவனந்தபுரம் போராட்ட மேடையில்

திருவனந்தபுரம் பாளையம் ரக்தசக்ஷி மண்டபத்தில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் அருகருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கக் கேரளத்தில் ஆளும் சி.பி.எம், எதிர்க்கட்சியான காங்கிரசும் கைகோத்த போராட்டம் தேசிய அளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதேசமயம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளைக் கலந்து ஆலோசிக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தன்னிச்சையாக முடிவெடுத்து சி.பி.எம் கட்சியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் தனியாகப் போராட்டம் நடத்தியிருக்கலாம். அதை விட்டுவிட்டு ரமேஷ் சென்னிதலா தன்னிச்சையாக முடிவு எடுத்துவிட்டார். அதனால்தான் அந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கலந்துகொள்ளவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் மட்டுமல்லாது காங்கிரஸ் கூட்டணி கட்சியினரும் ரமேஷ் சென்னிதலா மீது அதிருப்தியில் உள்ளனர். ``இந்தப் போராட்ட முடிவு அவசரமாகத் தீர்மானிக்கப்பட்டது. கட்சி மற்றும் கூட்டணித் தலைவர்களிடம் கலந்துபேசுவதற்கான நேரம் கிடைக்கவில்லை" என்று விளக்கமளித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா.

கேரளக் காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
கேரளக் காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில்,``இடதுசாரிகளுடன் கைகோத்து போராட்டம் நடத்த காங்கிரஸ் தயாராக இல்லை. மத்தியில் பாசிச ஆட்சியைக் கடுமையாக எதிர்த்துப் போராடுவது காங்கிரஸ் மட்டும்தான். பாசிச ஆட்சியை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோதெல்லாம் ஓடி ஒளிந்தவர்கள்தான் இடதுசாரிகள்" எனக் கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த சலசலப்பைத் தொடர்ந்து சி.பி.எம் தனியாகவும், காங்கிரஸ் கட்சி தனியாகவும் போராட்டம் அறிவித்துள்ளன. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாகப் போராட்டம் அறிவித்துள்ளன. சி.பி.எம் கூட்டணி ஜனவரி 26-ம் தேதி மஞ்சேஷ்வரம் முதல் திருவனந்தபுரம் வரை தனியாக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதுபோன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனவரி 6-ம் தேதி கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளத்தில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.