Published:Updated:

`யோகி ஆதித்யநாத்தும் பினராயி விஜயனும் ஒன்றுதான்!' - கொதிக்கும் கேரள காங்கிரஸ் தலைவர்

`கேரளாவில் இப்போது இருப்பது பயங்கரவாத ஆட்சி. யோகி ஆதித்ய நாத்துக்கும் எடியூரப்பாவுக்கும் பினராயி விஜயனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை'.

முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முதல்வர் பினராயி விஜயன்
முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முதல்வர் பினராயி விஜயன்

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சி.பி.எம் கட்சியினரும், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும் ஒன்றாகப் போராட்டம் நடத்தினர். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக திருவனந்தபுரத்தில் நடத்திய இந்தப் போராட்டம், தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. காலையிலிருந்து மதியம் வரை நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் இருந்த சி.பி.எம்., காங்கிரஸ் ஒற்றுமை, அன்று மாலைக்குள் தகர்ந்துபோனது.

பினராயி விஜயன், ரமேஷ் சென்னிதலா
பினராயி விஜயன், ரமேஷ் சென்னிதலா

அந்தப் போராட்டம் சம்பந்தமாக காங்கிரஸைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தனியாக முடிவெடுத்தாகக் கூறி மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதில் கலந்துகொள்ளவில்லை. மேலும், இதுகுறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளே வேறுபட்ட கருத்துகள் எழுந்தன. எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவிற்கு ஆதரவாகச் சிலரும், மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு ஆதரவாகச் சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.

முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியதாவது, ``குடியுரிமைச் சட்ட மசோதா விஷயத்தில் சி.பி.எம் கட்சியுடன் சேர்ந்து போராட்டம் நடத்த நாங்கள் விரும்பவில்லை. பாசிஸ்ட் எதிர்ப்பு போராட்டத்தில் சி.பி.எம் உண்மைத் தன்மையுடன் இல்லை. கேரளாவில் இப்போது இருப்பது பயங்கரவாத ஆட்சி. யோகி ஆதித்ய நாத்துக்கும், எடியூரப்பாவுக்கும், பினராயி விஜயனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காங்கிரஸ் நிர்வாகிகளை சிறையில் அடைத்து பி.ஜே.பிகாரர்களை சந்தோஷப்படுத்த முயற்சி செய்கிறார் பினராயி விஜயன்.

`இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்!' - கைகோத்த கேரள கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் #CAA

சி.பி.எம் கட்சியுடன் இணைந்து போராட்டம் நடத்தமாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும். காங்கிரஸ் மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் எடுப்பதுதான் கட்சியின் முடிவு. ரமேஷ் சென்னிதலா இதற்கு முன்பு எடுத்த முடிவு குறித்து நான் கேள்வி கேட்கப்போவதில்லை. பினராயி விஜயனுக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை. அவர் எனக்கு நல்ல நண்பர்" என்றார்.