Published:Updated:

“உம்மன்சண்டி நியமனத்துக்கும் முதலமைச்சர் வேட்பாளருக்கும் சம்பந்தம் இல்லை!”

ரமேஷ் சென்னிதலா
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ் சென்னிதலா

ரமேஷ் சென்னிதலா ‘பளிச்’

“உம்மன்சண்டி நியமனத்துக்கும் முதலமைச்சர் வேட்பாளருக்கும் சம்பந்தம் இல்லை!”

ரமேஷ் சென்னிதலா ‘பளிச்’

Published:Updated:
ரமேஷ் சென்னிதலா
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ் சென்னிதலா

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் அதே சமயத்தில், கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக, கேரள மாநில காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் முன்தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது. இந்தநிலையில்தான், தேர்தல் கமிட்டி ஒன்றை அமைத்து, அதற்குத் தலைவராக முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை நியமித்திருக்கிறது டெல்லி காங்கிரஸ் தலைமை. இது, அடுத்த முதல்வர் கனவிலிருந்த சட்டசபை காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்துப் பேசும் கேரளாவின் அரசியல் பார்வையாளர்கள், “கடந்த ஐந்தாண்டுகளாக பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்தவர் ரமேஷ் சென்னிதலா. ஆனால், ஐந்து ஆண்டுகளாக அமைதியாக இருந்த உம்மன் சாண்டிக்குத் தேர்தல் கமிட்டி சேர்மன் பதவி கொடுத்திருப்பது, ரமேஷ் சென்னிதலா ஆதரவாளர்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது” என்கிறார்கள். இந்தநிலையில், ரமேஷ் சென்னிதலாவை திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசினோம்...

‘‘கட்சிக்கு உங்கள்மீது நம்பிக்கை இல்லாததால்தான், டெல்லி கண்காணிப்பில் தேர்தல் குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்களே?”

‘‘அனைவரும் சேர்ந்து செயல்படுவதற்காக, தேர்தல் குழு ஏற்படுத்தியிருக்கிறோம். நானும் சில மாநிலங்களில் இது போன்ற கமிட்டிகளுக்குப் பார்வையாளராகச் சென்றிருக்கிறேன். இது அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஓர் ஏற்பாடு... அவ்வளவுதான்!’’

ரமேஷ் சென்னிதலா
ரமேஷ் சென்னிதலா

‘‘முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பதில் என்ன குழப்பம்?’’

‘‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்துவது காங்கிரஸுக்கு வழக்கம் இல்லை. இதற்கு முன்பு நானும் உம்மன் சாண்டியும் போட்டியிட்டோம். அப்போதும் முதலமைச்சர் யார் என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தது. தேர்தலுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஆலோசனை நடத்தி, உம்மன் சாண்டியைத் தேர்ந்தெடுத்தோம். கடந்த முறை எதிர்கட்சித் தலைவராக என் பெயரை ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். அதுபோல தேர்தல் முடிந்த பிறகு அது குறித்து முடிவெடுப்போம்.’’

‘‘தேர்தல் கமிட்டித் தலைவராக உம்மன் சாண்டி நியமிக்கப்பட்டிருப்பது பற்றி...’’

‘‘அவர் ஒரு சீனியர் லீடர் என்பதால் நியமித்திருக்கிறார்கள். நாங்களெல்லாம் ஒரே அணியில் செல்வதற்கான ஏற்பாடுதான் இது. அதற்கும் முதலமைச்சர் வேட்பாளருக்கும் சம்பந்தம் இல்லை.’’

‘‘சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாரா?’’

‘‘சட்டசபைத் தேர்தலில் யு.டி.எஃப் கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகள் எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சி என்றால், ஐந்து ஆண்டுகள் யு.டி.எஃப் ஆட்சி அமையும் என்பது வழக்கம். உயர்மட்டக்குழு வழிகாட்டுதல்படி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறோம். ஐந்தாண்டுகள் கேரளத்தை ஆண்டு முடித்த அரசுக்கு, கொள்ளையும் ஊழலும்தான் முகவரியாக இருக்கிறது. இந்த ஆட்சியை வெளியேற்றுவதுதான் மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதற்காக யு.டி.எஃப் கூட்டணி தயாராகிவருகிறது.’’

‘‘ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் எல்.டி.எஃப் அதிக சீட் பெற்றிருக்கிறதே?’’

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் 19-ஐ நாங்கள் கைப்பற்றினோம். உள்ளாட்சித் தேர்தலில் எல்லா காலத்திலும் எல்.டி.எஃப் கூட்டணிக்குத்தான் அதிக சீட்டுகள் கிடைக்கும். காங்கிரஸ் அதிக ஜனநாயகம்கொண்ட கட்சி என்பதால், போட்டி வேட்பாளர்கள் அதிக அளவில் நிற்பார்கள். அதிலும், உள்ளாட்சித் தேர்தல் என்பது அரசியல்ரீதியான தேர்தல் அல்ல. தனிப்பட்ட செல்வாக்கு, குடும்பச் செல்வாக்கு, உள்ளூருக்கான தனிப்பட்ட விஷயங்கள் உள்ளடக்கிய தேர்தல். அதை அரசியலாகப் பார்க்க முடியாது. அதிலும், அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலிக்கவில்லை. அது சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும். ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தல் வழக்கெல்லாம் எதிரொலிக்கப்போவது சட்டசபைத் தேர்தலில்தான். பஞ்சாயத்துத் தேர்தலில் உள்ளூர் பிரச்னைகள் மட்டுமே விவாதிக்கப்படும்.’’

‘‘அமித் ஷா வியூகத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?’’

‘‘அமித் ஷாவால் கேரளாவில் பெரிதாக எதுவும் நடந்துவிடாது. அவருக்கு இங்கே பெரிய ஆதரவு இல்லை. பி.ஜே.பி ஓர் இடத்தில்கூட வெற்றிபெறாது. சபரிமலை விவகாரம் இந்தத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும், அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். பக்தர்களுக்கு எதிராகச் செயல்பட்ட மார்க்சிஸ்ட் அரசு மாற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.’’

‘‘காங்கிரஸின் வியூகம் என்ன?’’

‘‘இந்தத் தேர்தலில் ‘ஐஸ்வர்ய கேரளம்’ என்ற பிரசாரத்தை முன்வைக்கிறோம். தூய்மையான ஆட்சியைக் கொண்டுவருவோம் என்பதற்காக, கேரளா முழுவதும் ஒரு யாத்திரையை நடத்துகிறோம். 22 நாள்கள் வரை நடக்கும் யாத்திரையை காசர்கோட்டிலிருந்து தொடங்குகிறோம். யாத்திரை முடியும்போது கேரளத்தின் தோற்றமே மாறும்.’’