`நான் கேரள கவர்னராக இருந்தபோது எல்லாம் சரியாகதான் நடந்தது!’- பி.சதாசிவம் #CAA

கவர்னர் மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் எல்லா விஷயங்களையும் அவருக்கு அறிவிக்க வேண்டும். சட்ட அமைச்சரோ, தலைமைச் செயலரோ விவரம் தெரிவிக்க வேண்டும். நான் கேரளத்தில் கவர்னராக இருந்த சமயத்தில் இப்படிதான் எல்லா விஷயங்களும் நடந்தன.
தேசிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய `குடியுரிமைச் சட்டத்தை கேரளத்தில் அமல்படுத்தமாட்டோம்’ என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். அத்துடன் நிற்காமல் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சட்டபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். எல்லாவற்றும் மேலாக குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மத்திய பி.ஜே.பி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

கேரள அரசு தனக்குத் தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்கு அம்மாநில கவர்னர் ஆரிஃப் முகமது கான் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், கேரள தலைமைச் செயலர் டாம் ஜோசிடம் கவர்னர் விளக்கமும் கேட்டார். தலைமைச் செயலர் கவர்னரிடம் சென்று விளக்கம் அளித்தார். ஆனால், அந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என கவர்னர் தெரிவித்தார். மேலும், ``அரசியலமைப்புச் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். இது தனிப்பட்ட சண்டை அல்ல. இந்த விவகாரத்தில் அமைதியாக நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். சட்டம் சரியாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பதை நான் உறுதி செய்வேன்” என கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கேரள அரசுக்கும் கவர்னருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த நிலையில், கேரள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் பி.சதாசிவம் இது குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர், ``மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக மாநில அரசு நீதிமன்றத்தை நாடும்போது கவர்னரின் அனுமதி பெற வேண்டியது இல்லை. ஆனால், மரியாதை நிமித்தமாக அது குறித்த விவரங்கள் பரஸ்பரம் அறிவிப்பதுடன், விவாதிக்கவும் வேண்டும்.

கவர்னர் மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் எல்லா விஷயங்களையும் அவருக்கு அறிவிக்க வேண்டும். சட்ட அமைச்சரோ, தலைமைச் செயலரோ விவரம் தெரிவிக்க வேண்டும். நான் கேரளத்தில் கவர்னராக இருந்த சமயத்தில் இப்படிதான் எல்லா விஷயங்களும் நடந்தன” என்றார்.