Published:Updated:

`கேரள அரசின் நிவாரணம் போதுமானதாக இல்லை!’ - கொரோனா விவகாரத்தில் அரசை விமர்சித்த கே.கே.ஷைலஜா

கே.கே.ஷைலஜா எம்.எல்.ஏ
கே.கே.ஷைலஜா எம்.எல்.ஏ

கடந்த சில நாள்களாக எதிர்கட்சிகள் கூறிவந்த கருத்தை ஆளும் சி.பி.எம் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.கே.ஷைலஜா பேசியிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலத்தில் கடந்த 2016-2021 சி.பி.எம் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் கே.கே.ஷைலஜா. மழை வெள்ளப் பிரளயம், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் ஆகியவற்றுக்கு எதிராகச் சிறப்பாக செயல்பட்டதாக புகழப்பட்டவர். 2021-ல் சி.பி.எம் மீண்டும் ஆட்சி அமைத்த சமயத்தில் கே.கே.ஷைலஜா மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் பினராயி விஜயன் தவிர பழைய அமைச்சர்கள் யாருக்கும் மீண்டும் வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தமுறை புதியவர்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இது பற்றி அப்போது கருத்து தெரிவித்த கே.கே.ஷைலஜா, ``கட்சி கடந்தமுறை அமைச்சராகப் பணி செய்ய வாய்ப்பு வழங்கியது. இந்த முறை எம்.எல்.ஏ-வாகப் பணிசெய்யும்படி கூறியுள்ளது, அவ்வளவுதான். இப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தகுதிவாய்ந்தவர்கள்தான்” எனக் கூறியிருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாள்களாக கேரள சட்டசபைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. சட்டசபையில் கே.கே.ஷைலஜா எம்.எல்.ஏ-வுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் கொரோனா நிவாரணப் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அரசை விமர்சித்துப் பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கேரள சட்டசபையில் பேசும் கே.கே.ஷைலஜா எம்.எல்.ஏ
கேரள சட்டசபையில் பேசும் கே.கே.ஷைலஜா எம்.எல்.ஏ

சட்டசபையில் பேசிய கே.கே.ஷைலஜா, ``கொரோனாவால் மிகவும் மோசமான பிரச்னைகளை மக்கள் அனுபவித்துவருகிறார்கள். ஆயிரம் ரூபாய் இப்போது வழங்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நடத்த முடியாது. மேலும் அவர்களுக்கு உதவ வேண்டும். கேரள அரசு பல பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. அதேசமயம், இது மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பிரச்னை. சிறு, குறு மற்றும் பாரம்பர்யத் தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

வங்கிக் கடனை செலுத்த முடியாமலும், குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமலும் இன்னும் பிற செலவுகளைச் சமாளிக்க முடியாமலும் இருக்கின்றனர். இதையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு அவர்களின் செலவைச் சமாளிக்க முடிவதில்லை. எனவே சிறு, குறு மற்றும் பாரம்பர்ய தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.

கேரள சட்டசபைக் கூட்டம்
கேரள சட்டசபைக் கூட்டம்

ஓணம் பண்டிகை சமயத்தில் கிடைக்க வேண்டிய வருவாய் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, அரசு இந்தத் தொழிலாளர்களுக்காக சிறப்பு பேக்கேஜ் உருவாக்க வேண்டும்" எனப் பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவ், `கே.கே.ஷைலஜா கூறிய விஷயங்கள் பரிசீலிக்கப்படும்’ எனக் கூறினார். கடந்த சில நாள்களாக எதிர்க்கட்சிகள் கூறிவந்த கருத்தை ஆளும் சி.பி.எம் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.கே.ஷைலஜா பேசியிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

கேரளா: சைலஜா டீச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை அமைச்சராக மீண்டும் ஒரு பெண்? யார் இந்த வீணா ஜார்ஜ்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு