Published:Updated:

`மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது!’- சிஏஏ விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடிய முதல் மாநிலம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ளது கேரளா. தற்போது இந்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து நாடு முழுவதும் அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதோடு தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) - தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

கேரளா, மேற்கு வங்கம் போன்ற சில பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் என்.ஆர்.சி - சி.ஏ.ஏ - என்.பி.ஆர் அமல்படுத்தப்போவதில்லை என அறிவித்து வருகின்றன. ஆனால் பா.ஜ.க இதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 10-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

என்.ஆர்.சி - என்.பி.ஆர் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகளின் ஒத்துழைப்பில்லாமல் மேற்கொள்ள முடியாது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், சி.ஏ.ஏ - என்.ஆர்.சியை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் எனத் தன்னுடைய அதிகாரபூர்வ நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆரை அமல்படுத்தாது என்று தெரிகிறது. இந்த நிலையில் சி.ஏ.ஏ-வை எதிர்ப்பதில் கேரள முன்னணியில் இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையிலும் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கேரள அரசு
கேரள அரசு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இவை இந்த மாத இறுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த நிலையில் கேரள அரசும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லும் முதல் மாநில அரசாக கேரளா உள்ளது.

இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறியிருப்பதாகவும், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளது.