Published:Updated:

`ராகுலை நான் அழைக்கவில்லை, அவராகவே வந்தார்!'- நிதி கிடைக்காமல் தவிக்கும் கேரள குடிசைவாசி

பி.ஆண்டனிராஜ்

கேரள வெள்ளத்தின்போது வேதனையில் தவித்த குடிசைவாசியை ராகுல் காந்தி தேடிச்சென்று நலம் விசாரித்ததால், அவருக்கான உதவிகளை அம்மாநில அரசு நிறுத்திவைத்ததாகக் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட ரகுநாதன்
பாதிக்கப்பட்ட ரகுநாதன்

கேரளாவில், 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பருவமழை அளவுக்கு அதிகமாய் கொட்டித் தீர்த்தது. ஒரே நாளிலேயே 330 மி.மீ மழை பெய்ததால், மாநிலத்தின் 42 அணைகளில் 35 அணைகள் நிரம்பின. அந்த அணைகள் திறந்துவிடப்பட்டதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் 373 பேர் இறந்தனர். 3,14,391 பேர் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த ராகுல்காந்தி
பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த ராகுல்காந்தி

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் ஆறன்முள்ளா பகுதியையும் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள எழிக்காடு காலனி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ரகுநாதன் என்பவர், பாதிக்கப்பட்ட மக்களைத் தனது படகின் மூலமாகக் காப்பாற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்றார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரகுநாதன், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டது அப்போதே பெரிதாகப் பேசப்பட்டது.

வெள்ளச் சேதத்தைப் பார்வையிடுவதற்காக, ஆகஸ்ட் 28-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது, உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் ரகுநாதனின் சேவை குறித்து தெரிவித்துள்ளனர். ரகுநாதனின் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால், அவரது வீட்டின் ஒருபகுதி நிலத்தில் புதைந்தது. அதனால், சுவரில் பெரும் கீறல் விழுந்துள்ளது பற்றியும் ராகுலிடம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தியை நானாக எனது வீட்டுக்கு அழைக்கவில்லை. அவராகவே எனது வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் வந்தவரை வரவேற்காமல் வெளியேறுங்கள் என்றா சொல்ல முடியும்?
-மார்க்சிஸ்ட் ரகுநாதன்

அதனால் ரகுநாதனைச் சந்திக்க விரும்பிய ராகுல், அவரது வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டியுள்ளார். இந்த நிலையில், ரகுநாதன் தனது வீட்டைப் புதுப்பிப்பதற்கான உதவி கேட்டு ஆறன்முள்ளா பஞ்சாயத்து அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியரிடமும் மூன்று முறை விண்ணப்பித்துள்ளார். அனால் அவருக்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. இதுபற்றி அவர் விசாரித்தபோது, ராகுல் காந்தி அவருடைய வீட்டுக்கு வந்ததன் காரணமாகவே உதவி மறுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.