Published:Updated:

`மத்திய அரசு மீது விமர்சனம்; மாநில அரசுக்குப் பாராட்டு’- கேரள அரசின் உரையை முழுமையாகப் படித்த ஆளுநர்

கேரள சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் ஆரிப் முகமதுகான்

காஷ்மீர் சென்று திரும்பிய ஆளுநர் ஆரிப் முகமதுகான் குங்குமப்பூ, சாக்லேட் ஆகியவற்றை முதல்வர் பினராயி விஜயனுக்கு வழங்கினார். எனவே ஆளுநரும், முதல்வரும் இணக்கமாகிவிட்டதாகக் கருத்துகள் எழுந்திருக்கின்றன.

`மத்திய அரசு மீது விமர்சனம்; மாநில அரசுக்குப் பாராட்டு’- கேரள அரசின் உரையை முழுமையாகப் படித்த ஆளுநர்

காஷ்மீர் சென்று திரும்பிய ஆளுநர் ஆரிப் முகமதுகான் குங்குமப்பூ, சாக்லேட் ஆகியவற்றை முதல்வர் பினராயி விஜயனுக்கு வழங்கினார். எனவே ஆளுநரும், முதல்வரும் இணக்கமாகிவிட்டதாகக் கருத்துகள் எழுந்திருக்கின்றன.

Published:Updated:
கேரள சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் ஆரிப் முகமதுகான்

பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்களில், ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்குமான உரசல் தொடர்ந்துவருகிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ஆளுநர்கள் மாநில அரசுக்கு எதிராக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். `தமிழ்நாடு’, `தமிழகம்’ என்ற விவாதத்தைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது 'தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர்' உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். இதனால் சட்டசபையில் முதல்வர், `அரசு கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும்’ எனத் தீர்மானம் கொண்டுவர, ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் `தமிழ்நாடு’ என்ற பெயரை மாற்றும் எண்ணம் தனக்கு இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை மூலம் விளக்கமளித்தார். கேரளாவிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் உரசல் இருந்துவருகிறது. பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களில் இன்னும் ஆளுநர் கையெழுத்து போடாமல் இருக்கிறார். மேலும், 2020-ல் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான உரையை ஆளுநர் ஆரிப் முகமதுகான் வாசிக்காமல் தவிர்த்தார்.

பினராயி விஜயன் - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்
பினராயி விஜயன் - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

அதுமட்டுமல்லாது ஒரு பல்கலைக்கழக விழாவில் சிலர் தன்னை தாக்க முயன்றதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பைக் கிளப்பினார் ஆளுநர் ஆரிப் முகமதுகான். இந்த நிலையில், நேற்று தொடங்கிய கேரள சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆரிப் முகமதுகான் ஆளுநர் உரையில் ஒரு எழுத்தைக்கூட விடாமல் வாசித்தார்.

அதில் 'எனது அரசு' என்ற வார்த்தையை 67 முறையும், 'அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு' என 15 முறையும் வாசித்தார். மாநிலங்களின் கடன் வரம்பை மத்திய அரசு குறைக்கிறது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்புத் துறைகளில் மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று ஆளுநர் கூறினார். பொருளாதார சீர்திருத்தத்தில் ​​மாநில அரசுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்பது போன்ற மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளையும் ஆளுநர் வாசித்தார்.

ஆளுநர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் வாசித்தது பா.ஜ.க-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், "ஆளுநர் உரையில் உண்மையை மறைக்கும் வழக்கமான நாடகம் அரங்கேறியிருக்கிறது. ஆளுநர் மூலம் பொய் பேசவைத்து மக்களை வஞ்சிக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். 3.90 லட்சம் பொதுக் கடன் கேரள மாநிலத்துக்கு இருக்கிறது. சம்பளமும், பென்சனும் கொடுக்க முடியாத நிலை கேரளத்தில் இருக்கிறது. இதை மாநில அரசு முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றார்.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்
கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து உரையாற்றினார். அது போன்று காஷ்மீர் சென்று திரும்பிய ஆளுநர் ஆரிப் முகமதுகான் குங்குமப்பூ, சாக்லேட் ஆகியவற்றை முதல்வர் பினராயி விஜயனுக்கு வழங்கினார். எனவே ஆளுநரும், முதல்வரும் இணக்கமாகிவிட்டதாக கருத்துகள் எழுந்திருக்கின்றன.