Published:Updated:

கடிதம், வீடியோ வெளியிட்ட கவர்னர்... காட்டமான பினராயி விஜயன்! - கேரளாவில் நடப்பது என்ன?

கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

``கம்யூனிஸ்டுக்கு எதிராக பேச அரசியல் கட்சியினர் உள்ளனர். அவர்கள் அதை செய்துகொள்வார்கள். கவர்னர் பதவியில் இருந்து அதை செய்யவேண்டாம்” என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கடிதம், வீடியோ வெளியிட்ட கவர்னர்... காட்டமான பினராயி விஜயன்! - கேரளாவில் நடப்பது என்ன?

``கம்யூனிஸ்டுக்கு எதிராக பேச அரசியல் கட்சியினர் உள்ளனர். அவர்கள் அதை செய்துகொள்வார்கள். கவர்னர் பதவியில் இருந்து அதை செய்யவேண்டாம்” என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Published:Updated:
கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் மோதல் முற்றியுள்ளது. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நியமிக்கப்படுவதாக கவர்னர் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் பல்கலைக்கழக நியமனங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் விதமாக கேரள சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதையடுத்து கேரளா அரசு மற்றும் முதல்வர் குறித்து வெளிப்படையாகவே விமர்சித்துவந்தார் கவர்னர் ஆரிப் முகமது கான். கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி சென்ற கவர்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் 2019-ம் ஆண்டு நடந்த வரலாற்று மாநாட்டில் தன்னை தாக்குவதற்கு துணை வேந்தர் கோபிநாத் ரவீந்திரன் தலைமையில் சிலர் திட்டமிட்டதாகவும், குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான கருத்துக்களை தான் பேசியபோது வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் தனது பேச்சுகுறித்து கேள்வி எழுப்ப முயன்றதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை தாக்க திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்காக டெல்லியை மையமாகக்கொண்டு நடந்த சதித்திட்டத்தில் துணை வேந்தரும் அங்கமாக இருந்தார் எனவும், அதுபற்றி போலீஸின் கவனத்துக்கு கொண்டுசென்ற பிறகும், விசாரணைக்கு துணை வேந்தர் ஒத்துழைக்கவில்லை எனவும் கவர்னர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியிருந்தார்.

பினராயி விஜயன், ஆரிப் முகமது கான்
பினராயி விஜயன், ஆரிப் முகமது கான்

இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான ஆவணங்களை வெளியிடுவதாக கவர்னர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். நேற்று கவர்னர் ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன்பாக கண்ணூர் பல்கலைகழக வரலாற்று மாநாட்டில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவை கவர்னர் மாளிகை தயாரிக்கவில்லை என்றும் மாநில அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பல்வேறு செய்தி ஊடகங்களில் வெளியான வீடியோ என்ற குறிப்பும் தெரிவிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கண்ணூர் பல்கலைக்கழக வரலாற்று மாநாட்டில் நடந்த பிரச்னை ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் குற்றமாகும். போலீஸின் முன்பு வைத்து அந்த சம்பவம் நடந்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு எதிரான தாக்குதல் நடந்த சமயத்தில் அதை தடுக்கமுயன்ற போலீஸாரை ஒரு அரசியல் தலைவர் தடுத்து நிறுத்தினார். அவர் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்தை மையமாகக்கொண்டு செயல்படுபவர். எனக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்க முயன்ற சமயத்தில் மேடையில் இருந்த கே.கே.ராகேஷ் எழுந்து போலீஸை தடுத்தார். கவர்னரை தாக்குவதும், தடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். தாமாக முன்வந்து போலீஸ் இதில் வழக்கு எடுக்க முடியும். போராட்டகாரர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பதாகைகளுடன் வந்திருந்தனர். கண்ணூர் பல்கலைகழகத்தில் விதியை மீறி நியமனங்களுக்காக பினராயி விஜயன் என்னை அணுகினார். விதிமுறைகளை மீறி பல நியமனங்கள் நடந்துள்ளன" என்றார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இதில் கே.கே.ராகேஷ் என்பவர் முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளராக செயல்படுபவர். கவர்னரின் குற்றச்சாட்டுகள் ஆளும் சி.பி.எம் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கண்ணூர் பல்கலைகழகத்தில் மறு நியமனம் வேண்டும் என முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய மூன்று கடிதங்களையும் கவர்னர் ஆரிப் முஹமது கான் வெளியிட்டார்.

கவர்னரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பினராயி விஜயன், ``அரிப் முகமது கான் கம்யூனிஸ்டுக்கு எதிராக பிரசாரம் செய்துவருகிறார். கவர்னர் பதவியில் இருந்து உங்களை தரம்தாழ்த்திக்கொள்ளாதீர்கள். பதவிக்கு தகுந்தாற்போல் செயல்படுங்கள். கம்யூனிஸ்டுக்கு எதிராக பேச அரசியல் கட்சியினர் உள்ளனர். அவர்கள் அதை செய்துகொள்வார்கள். கவர்னர் பதவியில் இருந்து அதை செய்யவேண்டாம்" என்றார் காட்டமாக.