Published:Updated:

இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தை நடத்துவதில் ஆர்வமே இல்லை!

ஜான் பிரிட்டாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான் பிரிட்டாஸ்

- கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் வேதனை!

ஜான் பிரிட்டாஸ்! கேரளாவின் மிக முக்கியமான பத்திரிகையாளர். 1988-லிருந்து நாடாளுமன்றச் செயல்பாடு களை கவர் செய்துவருபவர். பாபர் மசூதி இடிப்புச் சம்பவம், அமெரிக்கா - இராக் போர் ஆகியவற்றை நேரில் ரிப்போர்ட் செய்தவர். கேரளாவின் ‘தேசாபிமானி’ பத்திரிகை நிருபராகவும் ‘கைரளி’ தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். பிறகு அரசியலில் இறங்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி ஆனார். தனது முதல் நாடாளுமன்ற உரையில் மத்திய அரசு மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக அவர் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், ஜான் பிரிட்டாஸிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“கம்யூனிஸ்ட் கட்சியைச் சேந்தவரான உங்கள் உரையை, துணை ஜனாதிபதியும் அவைத் தலைவருமான வெங்கைய நாயுடு பாராட்டியிருக்கிறாரே... எதிர்பார்த்தீர்களா?”

“நிச்சயமாக இல்லை. 1987 முதல் 1992 வரை மாநிலங்களவைத் தலைவராக சங்கர் தயாள் சர்மா இருந்தபோது, சில உறுப்பினர்களின் கடுமையான நடத்தை காரணமாக, அவர் கண்ணீர்விட்டு அழுதார். ஆனால், உறுப்பினர்கள் அவ்வளவு கடுமையாக நடந்துகொண்டிருந்தாலும், அதற்காக ஒரு உறுப்பினர்கூட சஸ்பென்ட் செய்யப்படவில்லை. அந்தச் சம்பவங்களை ஒரு பத்திரிகையாளராக இதே அவையில் அமர்ந்திருந்து நேரில் பார்த்தவன் நான். ஆனால், தற்போதைய அவைத் தலைவர் வெங்கைய நாயுடு 12 எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்திருப்பதை என் உரையில் விமர்சித்திருந்தேன்.

அடுத்த நாள் காலையில், துணை ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. ‘உங்களுடைய முழு உரையையும் கேட்டேன். அதில் என்னை விமர்சனம் செய்திருந்தீர்கள். சரிதான். ஆனால், உங்கள் பேச்சு மிகவும் அருமை யாக இருந்தது. என்ன வருத்தம் என்றால், அதில் ஒரு வரியைக்கூட தேசிய ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ வெளியிடவில்லை’ என்றார். அவர் என்னை அழைத்துப் பாராட்டியதை நான் யாரிடமும் சொல்லவில்லை. பிறகு, மூன்று நாள்கள் கழித்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், வெளிப்படையாக என் பேச்சை வெங்கைய நாயுடு பாராட்டினார். அதுதான் சமூக ஊடகங்களில் பரவியது. அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி உட்பட பலரும் நேரில் பாராட்டினார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவ னானாலும் பாராட்டும் அந்தக் குணத்துக்கு உங்கள் மூலமாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!”

இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தை நடத்துவதில் ஆர்வமே இல்லை!

“ஒரு பத்திரிகையாளராக நாடாளுமன்றம் சென்று மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை நேரில் கண்டு செய்தி எழுதியிருக்கிறீர்கள். இப்போது, ஒரு எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?”

“1988-லிருந்து நாடாளுமன்றத்தைக் கவனித்து வருகிறேன். அப்போது செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களில் மிகவும் இளையவன் நான்தான். நாடாளுமன்றத்தில் நான்கில் மூன்று பங்கு பலத்துடன் காங்கிரஸ் இருந்தது. அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு பேரரசரைப்போல நாடாளுமன்றத்துக்கு வருவார். அதே ராஜீவ் காந்தி, 1989-ல் பீடத்திலிருந்து கீழே விழுந்தார். அந்தக் காட்சிகளையெல்லாம் ஒரு பத்திரிகை யாளராக நேரில் கண்டிருக்கிறேன். ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சோம்நாத் சாட்டர்ஜி, இந்திரஜித் குப்தா, சந்திரசேகர், ஜார்ஜ் பெர்ணான்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, மது தண்டவதே, ஏ.பி.உன்னிகிருஷ்ணன், முரசொலி மாறன் போன்ற ஜாம்பவான்களின் நாடாளுமன்ற விவாதங்களை நேரில் கண்டிருக்கிறேன். கே.ஆர்.நாராயணன், சங்கர் தயாள் சர்மா, ஐ.கே.குஜ்ரால் போன்ற பெரும் ஆளுமைகள் மாநிலங்களவைத் தலைவர்களாகச் செயல்பட்டதையும் பார்த்திருக் கிறேன். அப்போது கருத்தாழம் மிகுந்த, தரமான விவாதங்கள் மிகவும் கண்ணியமாக நடக்கும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமரும் அமைச்சர்களும் பதில் சொல்வார்கள்.

இன்றைய நாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை மிகவும் வேதனையுடன் பார்க்கிறேன். பிரதமர், நாடாளு மன்றத்துக்கு வருவதே இல்லை. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஒழுங்காகப் பதில் சொல்வதில்லை. மிகச் சாதாரண பிரச்னைகளுக்குக்கூட அவை ஒத்திவைக்கப்படுகிறது. உறுப்பினர் களின் நியாயமான கோரிக்கைகளை அரசு காதுகொடுத்து கேட்பதில்லை. இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தை நடத்துவதில் ஆர்வமே இல்லை!”

“நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது செய்தி சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு எந்த அளவுக்கு அனுமதி வழங்கப் படுகிறது?”

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களுடன் அவர் உரையாடுவார், விவாதிப்பார். ஒரு பத்திரிகையாளராக அவருடன் நான் பயணம் சென்றிருக்கிறேன். ஆனால், இன்றைக்கு நாடாளுமன்றத்துக்குள் சொற்பப் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள். ஊடகங்களுக்கு அனுமதி இல்லை!”

“ஏப்ரல் மாதம் எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்ட நீங்கள், டிசம்பர் மாதம்தான் அவையில் முதல் பேச்சை நிகழ்த்தி யிருக்கிறீர்கள். ஏன் இவ்வளவு தாமதம்?”

“ஆகஸ்ட் மாத மழைக்காலக் கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்கள், பெகாசஸ் விவகாரம் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அவை இரண்டும் விவாதத்துக்குப் பொருத்தமில்லாத பிரச்னைகள் என்று கூறிய அரசு, அதை வைத்தே ஒட்டுமொத்தக் கூட்டத் தொடரையும் வீணடித்துவிட்டது. எனவே, முதல் உரையை நிகழ்த்த எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. இப்போதுதான் கிடைத்தது.”

“நீதிபதிகள் ஊதியம் தொடர்பான மசோதா தொடர்பாகப் பேசியபோது, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று விமர்சித்தீர்கள். அப்படி விமர்சித்தது சரியா?”

“நான் சாதி குறித்துப் பேசவில்லை. யதார்த்த நிலையைச் சொன்னேன். புள்ளிவிவரங்களைச் சொன்னேன். சுமார் 5 சதவிகித மக்கள் தொகையைக்கொண்ட ஒரு சமூகத்தினர் நீதித்துறையின் 50 சதவிகித இடங்களை வகிக்கிறார்கள் என்கிற யதார்த்தத்தைச் சொன்னேன். 1980-ம் ஆண்டு வரையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர்கூட தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைச் சொன்னேன். இது உண்மை. ஆனால், உண்மையைப் பேசுவதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. மூடநம்பிக்கைகளையும் புரளிகளையும் பரப்புவதைத்தான் ஊக்குவிக் கிறார்கள்!”