Published:Updated:

நடிகர் வீட்டுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள் வழங்கிய உணவுத்துறை அமைச்சர்! - கேரளாவில் சர்ச்சை

நடிகர் மணியன்பிள்ளை ராஜூவிடம் ரேஷன் கிட் வழங்கிய அமைச்சர்
நடிகர் மணியன்பிள்ளை ராஜூவிடம் ரேஷன் கிட் வழங்கிய அமைச்சர்

நடிகர் வீட்டுக்குச் சென்று அமைச்சர் ரேஷன் பொருள்கள் கொடுத்தது, அனைவரின் வீட்டுக்கும் ரேஷன் பொருள்களைக் கொண்டுபோய்க் கொடுப்பார்களா எனக் கேரளத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய விழாவான ஓணம் பண்டிகை இந்த மாதம் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு ரேஷன் கடைகளில் துணிப்பையில் 16 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பை கடந்த 31-ம் தேதி முதல் வழங்கிவருகிறது. ஒரு கிலோ சீனி தொடங்கி தேயிலை, உப்பு, நெய் உள்ளிட்டவை அந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டைப் போன்று கேரள மாநிலத்திலும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து குடும்ப அட்டை விவரங்களைச் சரிபார்த்த பிறகே ஓணம் பண்டிகை தொகுப்பு வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதிக்குள் இந்தத் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஏழைகள் பயன்படும் வகையில் இந்தத் தொகுப்பு வழங்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.

கேரள உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில்
கேரள உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில்

இந்தநிலையில் சினிமா நடிகரும், இயக்குநருமான மணியன்பிள்ளை ராஜூவின் வீட்டுக்குக் கடந்த 3-ம் தேதி காலையில் கேரள உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் சென்றிருக்கிறார். அங்கு நடிகர் மணியன்பிள்ளை ராஜூவிடம் ஓணம் பண்டிகைக்கு அரசு வழங்கும் தொகுப்பை வழங்கியிருக்கிறார். அமைச்சர் ஜி.ஆர்.அனிலுடன் அரசு அதிகாரிகளும் சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படத்தை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் தொகுப்பைத் தனிப்பட்ட முறையில் நடிகரின் வீட்டுக்கு நேரில் சென்று கொடுத்த உணவுத்துறை அமைச்சரின் செயல் விவாதத்துக்கு உள்ளானது. நான்பிரியாரிட்டி (NPHH) வகை ரேஷன் கார்டு நடிகர் மணியன்பிள்ளை ராஜூவின் மனைவி பெயரில் இருப்பதாகவும், அவர்களுக்கு ரேஷன் கடையில் இப்போது இந்தத் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் நான்பிரியாரிட்டி வகை வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 13-ம் தேதி முதல் ஓணம் பண்டிகை தொகுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் சகிதம் நடிகர் வீட்டுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கிய அமைச்சர் ஜி.ஆர்.அனில்
அதிகாரிகள் சகிதம் நடிகர் வீட்டுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கிய அமைச்சர் ஜி.ஆர்.அனில்

இது குறித்து உணவுத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறும்போது, ``நடிகர் மணியன்பிள்ளை ராஜூ கடந்த லாக்டெளன் காலத்தில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று அரிசி வாங்கிய நிகழ்வு செய்தியானது. அது பற்றி மணியன்பிள்ளை ராஜூ ரேஷன் பொருள்கள் தரமற்றதாக இருப்பதாகக் கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. ரேஷன் கடை அரிசியை வீட்டில் கொண்டுவந்து சமைத்தபோது தரமானதாக இருந்தது எனக் கூறியிருந்தார். இதையடுத்து அன்றைய உணவுத்துறை அமைச்சர் பி.திலோத்தமன் நடிகர் ராஜூவின் வீட்டுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்திருந்தார். அந்த வகையில்தான் அமைச்சர் ஜி.ஆர்.அனிலும் நடிகர் மணியன்பிள்ளை ராஜூவைச் சந்தித்தார்" என தெரிவித்துள்ளனர்.

இப்படி அனைவரின் வீடுகளுக்கும் ரேஷன் பொருள்களைக் கொண்டுபோய்க் கொடுப்பார்களா என கேரளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.

கேரளா: குறையாத கொரோனா... 16 நாள்களில் 50-ஐ கடந்த ஜிகா வைரஸ் பாதிப்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு