Published:Updated:

மேக்கேதாட்டு, முல்லை பெரியாறு விவகாரங்களில் மென்மை, நட்பு! - தமிழக உரிமையை பறிகொடுக்கிறாரா ஸ்டாலின்?

மேக்கேதாட்டு - முல்லை பெரியாறு - ஸ்டாலின்

கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வரான சில மாதங்களில் கேரளாவிலிருந்து முல்லைப் பெரியாறு பிரச்னையும், தற்போது கர்நாடகாவிலிருந்து மேக்கேதாட்டு பிரச்னையும் தீவிரமாக கிளப்பப்பட்டு வருகிறது.

மேக்கேதாட்டு, முல்லை பெரியாறு விவகாரங்களில் மென்மை, நட்பு! - தமிழக உரிமையை பறிகொடுக்கிறாரா ஸ்டாலின்?

கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வரான சில மாதங்களில் கேரளாவிலிருந்து முல்லைப் பெரியாறு பிரச்னையும், தற்போது கர்நாடகாவிலிருந்து மேக்கேதாட்டு பிரச்னையும் தீவிரமாக கிளப்பப்பட்டு வருகிறது.

Published:Updated:
மேக்கேதாட்டு - முல்லை பெரியாறு - ஸ்டாலின்

`தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களிலிருந்து அணைகள் சார்ந்த பிரச்னைகள் எழும்பும்' என்பது பொதுவாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு. அந்தவகையில் கடந்த ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கேரளாவிலிருந்து முல்லைப் பெரியாறு பிரச்னையும், தற்போது கர்நாடகாவிலிருந்து மேக்கேதாட்டு பிரச்னையும் தீவிரமாக கிளப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இருமாநிலங்களின் அணைகள் சார்ந்த விவகாரங்களில் தமிழக அரசு மென்மையான போக்குடன் செயல்பட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கேரள முல்லைப் பெரியாறு அணை:

கடந்த ஆண்டு அக்டோபரில், தீவிரமான மழைப்பொழிவு கேரளாவில் ஏற்பட்ட சமயம், `முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவேண்டும்; புதிதாக அணை கட்டவேண்டும்" என கேரள திரைத்துறையினர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டனர். #Decommission_mullaperiyar_dam என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 142 அடி வரைக்கும் முல்லைப்பெரியாறு அணையில் நீரை தேக்கிவைக்கலாம் என்ற சூழ்நிலையில், கொள்ளளவு 138 அடி எட்டிய உடனேயே அணையைத் திறந்துவிடவேண்டும் என கேரளா முரண்டு பிடித்தது. தமிழக விவசாயிகள் 142 அடி வரைக்கும் நீரைத்தேக்கி வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், தமிழக அரசு நீரைத் திறந்துவிடுவதாகக் கேரளாவிடம் ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து, வழக்கமாக தேனி ஆட்சியர், தமிழக அமைச்சர்களே காலங்காலமாக நீரைத்திறந்துவிட்டு வந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் உள்ளிட்ட கேரள அதிகாரிகள் அத்துமீறி முல்லைப்பெரியாறு அணைக்குள் நுழைந்து மதகுகளைத் திறந்துவிட்டனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

`அணை பராபரிப்பு, நிர்வாகம், நீர்திறப்பு உள்ளிட்ட உரிமைகள் தமிழகத்திற்கே உள்ள நிலையில், கேரள அதிகாரிகள் தன்னிச்சையான செயல்பாட்டை தடுத்துநிறுத்தி, எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் தி.மு.க அரசு கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. கேரளாவிடம் தமிழகத்தின் உரிமையை அடமானம் வைத்துவிட்டது' என அ.தி.மு.க, அ.ம.மு.க, நா.த.க, பா.ஜ.க உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து, கண்டனம் தெரிவித்தன.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

இதுகுறித்து அப்போது பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ``தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணையை கேரள அமைச்சர்கள் திறப்பதே தவறு. இது மாநில இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். தேனி ஆட்சியரோ, தமிழக அமைச்சர்களோ பங்கேற்று இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய செயல். தமிழகஅரசு தனது உரிமையை விட்டுக் கொடுத்துள்ளது. மாநில இறையாண்மை மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை இவ்வாறு நடந்தது இல்லை. இதை தவறான முன்னுதாரணமாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் கேரளா இதுபோன்ற செயல்களை மேற்கொள்ளும்!" என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்பின்னர், முல்லைப்பெரியாறு அணையை நேரடியாக வந்து பார்வையிட்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``தமிழக நீர்வளத்துறை அலுவலர்களால்தான் அணையின் மதகுகள் திறந்துவிடப்பட்டன. அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சரும் அம்மாநில அலுவலர்களும் அணையை பார்வையிட்டனர்" என பதிலளித்தார்.

முல்லை பெரியாறு அணையில் அமைச்சர் துரைமுருகன்
முல்லை பெரியாறு அணையில் அமைச்சர் துரைமுருகன்

அதைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் நடந்த கேரள சட்டமன்றக் கூட்டத்தில், `முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும்' என கேரள காங்கிரஸ் கோரியது. அதற்கு பதிலத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், `முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. தற்போது அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் மாற்றாக புதிய அணை கட்டப்படும் என்ற கேரளா அரசின் முடிவில் சமரசமில்லை' என உறுதியாகக் கூறியது தமிழக விவசாயிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை எற்படுத்தியது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, `முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், காலவாரியான நீர்மட்டம் (Rule Curve) நீர்ப்பாசன முறையைக் கொண்டுவரவேண்டும்' என கடந்த 2020, 2021 ஆண்டுகளில் கேரளாவைச்சேர்ந்த நான்கு தனிநபர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசால் கேரளாவுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி, கேரள அரசாங்கம் வரைவுத் திட்ட அறிக்கையைத் தயார்செய்து, அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 15-ம் தேதி மதுரையில், ஆறு மாவட்ட விவசாயிகளின் சார்பில், முல்லை பெரியாறு அணையின் நீர் கொள்ளளவை 142 அடியாக உயர்த்த வேண்டும், அணையின் நிர்வாக அதிகாரங்களை தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும், கேரளாவுக்கு புதிய அணைக்கட்டும் திட்ட அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும், ரூல் கர்வ் முறையை அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

பி.ஆர் பாண்டியன்
பி.ஆர் பாண்டியன்

இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், ``ஏற்கெனவே, 2018-ல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாகப் புதிய அணை கட்டுவதற்கு வரைவுத் திட்ட அறிக்கையைத் தயார்செய்ய கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனை இதுவரையிலும் மத்திய அரசு திரும்பப் பெறவில்லை. திரும்பப் பெறுவதற்கான அரசியல் அழுத்தத்தைத் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கொடுக்க முன்வராத நிலையேத் தொடர்கிறது" என குற்றம்சாட்டியிருக்கிறார்.

முல்லை பெரியாறு அணையில் மூவர்குழு ஆய்வு !
முல்லை பெரியாறு அணையில் மூவர்குழு ஆய்வு !

மேலும், ``தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் கேரள, கர்நாடக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் ஒத்த கருத்தோடு செயல்படுகின்றன. கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசும்கூட, தமிழக உரிமையைப் பறிக்கும் வகையிலேயே செயல்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை சீரமைத்தால், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டியதிருக்கும் என்பதால், சீரமைக்கும் பணிக்குத் தடை மேல் தடை போடுகிறது. எனவே, இந்த விஷயத்தில் அரசியல் அணி என்பது வேறு, நீர்ப்பாசன உரிமை என்பது வேறு என்பதை தமிழகத்தை ஆளும் தி.மு.க புரிந்துகொள்ள வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கர்நாடக மேக்கேதாட்டு அணை:

கடந்த மார்ச் 4-ம் தேதி, கர்நாடக அரசு சட்டமன்றத்தில் தாக்கல்செய்த 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைகட்ட ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது. அறிக்கை குறித்து சட்டமன்றத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, `தமிழக அரசு எதிர்த்தாலும், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று நிச்சயம் அணை கட்டுவோம்' என உறுதியாகக் கூறினார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

மேலும், ``மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க விரைவில் சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும். இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரை டெல்லி சென்று நேரில் சந்தித்து வலியுறுத்தவிருக்கிறேன். மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான விவரங்களை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அனுப்பியிருக்கிறேன். அதற்கான ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தபிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் அணையை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்" எனவும் அதிரடியாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தராமையா
சித்தராமையா
Twitter/@siddaramaiah

அதேபோல, மேக்கேதாட்டு அணை கட்டவேண்டும் என பாதயாத்திரை நடத்திய கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, ``கர்நாடகாவின் காவிரிப்படுகையிலிருந்து தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 60-70 டி.எம்.சி நீர் வீணாகச் செல்கிறது. இவற்றை சேமித்துவைக்க கர்நாடக அரசுக்கு தார்மீக உரிமை உள்ளது. எனவே, மேக்கேதாட்டு திட்டத்துக்கான அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு விரைவில் வழங்கவேண்டும்" என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, ``எந்தச் சூழ்நிலையிலும் மேக்கேதாட்டு அணை கட்டப்படுவது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அணை தொடர்பான கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்" என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

துரைமுருகன்
துரைமுருகன்

தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினரின் கோரிக்கை குறித்து பதிலளித்துப் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்குண்டான சட்டப்படியான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளும். தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என நியாயமான கோரிக்கை வைத்திருக்கிறார்கள். விரைவில், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணைக்கட்ட முயற்சிப்பதைத் தடுக்க, சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்றவாறு பரிசீலித்து முடிவெடுக்கப்படும்" எனக் கூறினார்.

மணியரசன், காவிரி உரிமை மீட்புக்குழு
மணியரசன், காவிரி உரிமை மீட்புக்குழு

இந்த விவகாரம் தொடர்பாக காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``மேக்கேதாட்டு அணைக்கு தடை வித்திக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாகளாகியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கைக்கூட விரைவுபடுத்த சட்ட முயற்சிகளையும் தி.மு.க அரசு செய்யவில்லை. கடந்த காலங்களில் இப்படி மெத்தனமாக நடந்துகொண்டதால்தான் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி உள்ளிட்ட அணைகளை கட்டி தமிழகத்திற்கான காவிரி உரிமையைப் பறித்துக்கொண்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும் சரி, இப்போதைய தி.மு.க ஆட்சியிலும் சரி, `நாங்கள் அணை கட்டவிடமாட்டோம்' என பொத்தாம் பொதுவாக அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்களேத் தவிர, உருப்படியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதேபோல, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``மேக்கேதாட்டு அணைக்காக கர்நாடக காங்கிரஸார் பாதயாத்திரை நடத்துகின்றனர். இதற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன குரல் எழுப்பவில்லை. கூட்டணியில் இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் ஹேமாவதி, கபினி அணை போன்றவை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் உரிமையை விட்டுக்கொடுத்து, கட்டப்பட்டது. தற்போது அவரின் மகன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும்போது, மேக்கேதாட்டு அணையை விட்டுக்கொடுக்கிறார். இதுமட்டுமின்றி, கேரளாவில் முல்லை பெரியாறு அணையின் உரிமையையும் விட்டுக்கொடுத்திருக்கிறார். தொடர்ந்து, தமிழக உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தயாராகிவிட்டார்" என கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இந்த நிலையில், ``வருகிற மார்ச் 24-ம் தேதி கர்நாடகா மேக்கேதாட்டு அணைக் கட்டுவதை எதிர்த்து, ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மாபெரும் பேரணி நடத்தப்படும்" என தமிழக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism