Published:Updated:

கேரளா: உறவினருக்கு அரசுப் பணி; முன்னாள் அமைச்சருக்கு செக்! - முதல்வரைச் சாடும் எதிர்க்கட்சி

கேரளா உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல்
கேரளா உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல்

`உறவினரை அரசுப் பணியில் அமர்த்திய வழக்கில் கே.டி.ஜலீலின் கூட்டுப் பிரதிநிதிதான் முதல்வர் பினராயி விஜயன். அவர் உறவினரை நியமிப்பதற்காக சிறுபான்மை மேம்பாட்டு நிதிக் கழகத்தின் பொது மேலாளர் பதவிக்கான தகுதிகளைத் தளர்த்த உதவியிருக்கிறார் முதல்வர்' என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

கேரளா உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.டி.ஜலீல் சட்டவிரோதமாக உறவினருக்கு வேலை வாங்கிக் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அந்தப் புகாரை விசாரித்த லோக் ஆயுக்தா, அமைச்சர் கே.டி.ஜலீல் தவறு செய்தது கண்டறியப்பட்டதாகக் கூறியது. 2016-ல் அமைச்சராகப் பொறுப்பேற்ற கே.டி.ஜலீல் இரண்டு மாதங்களிலேயே தன் தந்தையின் அண்ணன் மகனின் மகனான கே.டி.அதீப் என்பவரைச் சிறுபான்மை மேம்பாட்டு நிதி கழகத்தில் பணியில் நியமிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

பின்னர் அவருக்குப் பணி வாங்கிக் கொடுக்க, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதுடன், பதவி ஏற்பின்போது எடுத்த சத்தியப் பிரமாணத்துக்கு எதிராகவும் செயல்பட்டதாக லோக் ஆயுக்தா தீர்ப்பில் தெரிவித்திருந்தது. மேலும், அவர் அமைச்சர் பதவியில் தொடரும் தகுதியை இழந்துவிட்டதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. லோக் ஆயுக்தா சட்டப்படி மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், லோக் ஆயுக்தா தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என கே.டி.ஜலீல் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கடந்த 13-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கே.டி.ஜலீல்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்தநிலையில் கே.டி.ஜலீலின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட் லோக் ஆயுக்தா வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என கூறியுள்ளது. லோக் ஆயுக்தா தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை என்றும். லோக் ஆயுக்தாவின் எல்லாப் பகுதிகளும் ஆராயப்பட்டன. அந்தத் தீர்ப்பில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை எனவும் கேரள ஐகோர்ட் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கே.டி.ஜலீலுக்கு ஆதரவாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ``அதிகார துஷ்பிரயோகமும், ஊழலும் செய்த கே.டி.ஜலீலுக்கு எதிரான தீர்ப்பு மட்டுமல்ல இது. கே.டி.ஜலீலைப் பாதுகாத்த முதல்வர் மற்றும் சி.பி.எம் கட்சியின் முகத்தில் அறைந்திருக்கிறது கோர்ட் தீர்ப்பு. கே.டி.ஜலீல் ராஜினாமா செய்தது தார்மிக அடிப்படையில் அல்ல, கேவலப்பட்டுத்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐகோர்ட்டில் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வராது என்பதைத் தெரிந்துதான் கே.டி.ஜலீல் முன்கூட்டியே ராஜினாமா செய்திருக்கிறார்.

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா
கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா

உறவினரை அரசுப் பணியில் அமர்த்திய வழக்கில் அமைச்சராக இருந்த கே.டி.ஜலீலின் கூட்டுப்பிரதிநிதிதான் முதல்வர் பினராயி விஜயன். ஜலீல் உறவினரை நியமிப்பதற்காக சிறுபான்மை மேம்பாட்டு நிதிக் கழகத்தின் பொது மேலாளர் பதவிக்கான தகுதிகளைத் தளர்த்த முதலமைச்சர் உதவியிருக்கிறார். எனவே, கோர்ட் தீர்ப்பு முதல்வருக்கான குற்றப்பத்திரம். கொஞ்சமாவது தார்மிகம் இருக்கும் என்றால், முதல்வர் அந்தப் பதவியில் தொடரக் கூடாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு