Published:Updated:

முல்லைப்பெரியாறு விவகாரம்: `டிசம்பரில் ஸ்டாலினுடன் பினராயி விஜயன் சந்திப்பு' - கேரள அமைச்சர் தகவல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பினராயி விஜயன், ஸ்டாலின்
பினராயி விஜயன், ஸ்டாலின் ( பைல் போட்டோ )

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வரும் டிசம்பர் மாதம் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

கனமழையாலும், நிலச்சரிவாலும் கேரளா அதிக பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அம்மாநில அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. இது, வழக்கமாக ஆண்டுதோறும் நடக்கும் சம்பவம் தான் என்றாலும், இந்த முறை புதிய அணைக் கட்ட வேண்டும் என்பதில் முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பாகத் தமிழக மற்றும் கேரள உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வரும் டிசம்பர் மாதம் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகக் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், "கேரள முதல்வர் பினராயி விஜயனும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் வரும் டிசம்பர் மாதம் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர். அப்படி நேரில் சந்திக்கும் போது முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக பினராயி விஜயன் பேசவார். புதிய அணை கட்டுவதற்கான தீர்மானத்தை அந்தப் பேச்சுவார்த்தை மூலம் நாங்கள் எட்டுவோம்.

அமைச்சர் ரோஷி அகஸ்டின்
அமைச்சர் ரோஷி அகஸ்டின்

முல்லைப்பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அனைத்து விருப்பங்களும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசிடம் அணை விவகாரத்தில் தொடர்ந்து பேசி வருகிறோம். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லவும், அதிக தண்ணீரை வெளியேற்றுவதாக இருந்தால் 24 மணி நேரத்திற்கு முன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

மத்திய நீர் மேலாண்மை வாரியத்தின் 2018-ம் ஆண்டு அறிக்கையில், 200 மில்லியன் கன மீட்டர் திறன் கொண்ட அணைக்கட்டில் ரூல் கர்வ் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகள் ஆகியவற்றைத் தமிழ்நாடு தான் நிர்வகித்து வருகிறது. 2014-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி அன்று நடைபெற்ற கண்காணிப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் முதல், ரூல் கர்வ்வைத் தயாரிக்குமாறு தமிழகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

இதுபற்றி தமிழகத்துடனும், கண்காணிப்புக் குழு தலைவரிடமும் தொடர்ந்து கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், டாக்டர் ஜோசப் பைல் செய்த ரிட் மனுவின் அடிப்படையிலான உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு ரூல் கர்வினை தயார் செய்தது. அதே போல், கேட் ஆப்ரேஷன் ஷெட்டியூலையும் தமிழகமே தயார் செய்து 2021 மார்ச் மாதம் கேரளத்துக்கு வழங்கியது. அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதால் கேரளா சார்பில் ஒரு ரூல் கர்வ் தயார் செய்து நீர் மேலாண்மை வாரியத்திற்கு அனுப்பினோம். நீர் மேலாண்மை வாரியம் அதை உச்ச நீதிமன்றத்தில் ஃபைல் செய்துள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு