டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில், கடந்த சனிக்கிழமை அனுமன் ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில், இந்து அமைப்பினருக்கும் இஸ்லாம் சமூகத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தின் எதிரொலியாக, ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. டெல்லி மாநகராட்சியின் இந்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தபோதிலும், ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை புல்டோசர்களைக்கொண்டு அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து நேற்று கண்டனம் தெரிவித்த கேரள காங்கிரஸின் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா, ``இந்தியாவுக்கு புல்டோசர் அரசியல் தேவையில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்தான் தேவை. பா.ஜ.க-வினர், ஏழைகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு தகர்ப்பதன் மூலம், நீதித்துறையையும் அரசியல் சாசனத்தையும் தகர்க்கிறார்கள். பா.ஜ.க-வின் இந்த வெட்கக்கேடான செயல்கள், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே பெரும் சவாலாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் இது போன்ற செயல்களை, நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயகவாதிகளும் சேர்ந்து முறியடிக்க வேண்டியதென்பது காலத்தின் தேவையும்கூட" என நேரடியாகவே பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
