Published:Updated:

தமிழில் உறுதிமொழி எடுத்ததில் பெருமை!

ஏ.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.ராஜா

- நெகிழும் தேவிகுளம் எம்.எல்.ஏ ஏ.ராஜா

“ஏ.ராஜா என்னும் நான்...” - இடுக்கி மாவட்டம் தேவிகுளம் எம்.எல்.ஏ-வான ஏ.ராஜா, கேரள சட்டப்பேரவையில் இப்படித் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது, உலகத்தமிழர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ஏ.ராஜாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

‘‘கேரள சட்டசபையில், தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட தருணம் எப்படியிருந்தது?’’

‘‘தமிழர்கள் எம்.எல்.ஏ ஆகுறதும், கேரள சட்டசபையில தமிழ்ல உறுதிமொழி எடுக்க வாய்ப்பு கிடைக்குறதும் மிகப்பெரிய விஷயம். மற்றொரு மாநிலத்துல தமிழ்ல உறுதிமொழி எடுத்தது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை என்பதுல சந்தோஷம். தமிழுக்காகவும் என் மக்களுக்கான தேவைக்காகவும் குரல் கொடுப்பதுல மட்டற்ற மகிழ்ச்சி.’’

தமிழில் உறுதிமொழி எடுத்ததில் பெருமை!

‘‘படித்ததும் தாய்மொழித் தமிழில்தானா?”

‘‘ரெண்டு மூணு தலைமுறைக்கு முன்னாடியே எங்க முன்னோர் இங்க வந்துட்டாங்க. மொழிவாரி மாநிலங்களா பிரிக்கும்போதிருந்தே இங்கதான் இருக்கோம். நான் தமிழ் மொழியிலதான் பள்ளிப் படிப்பு படிச்சேன். இங்கே நிறைய தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருக்கு. தமிழ்நாட்டு பார்டர் பகுதியில இருக்கும் கேரளப் பள்ளிக்கூடங்கள்ல தமிழ்வழிக் கல்வி கற்பிக்கிறாங்க. நான் பத்தாம் வகுப்பு வரைக்கும் கேரளாவுல படிச்சேன். மேல்நிலைப் படிப்பு தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி ஸ்கூல்ல படிச்சேன். பிறகு, கோவை கவர்மென்ட் லா காலேஜ்ல வழக்கறிஞர் படிப்பு படிச்சேன். எம்.எல்.ஏ ஆகுறதுக்கு முன்னாடி தேவிகுளம் சப் கோர்ட்ல வழக்கறிஞர் பணி செஞ்சுகிட்டிருந்தேன்.’’

‘‘எம்.எல்.ஏ சீட் கிடைத்தது எப்படி?’’

‘‘ரெண்டு முறை தொடர்ச்சியா எம்.எல்.ஏ-வா இருந்தவங்களுக்கு சீட் இல்லை என்பது கட்சியின் பொதுத் தீர்மானம். அதனடிப்படையில ஏற்கெனவே இங்கு சி.பி.எம் சார்புல மூணு முறை தொடர்ச்சியா எம்.எல்.ஏ-வா இருந்தவருக்கு சீட் வழங்கல. நான் டி.ஒய்.எஃப்.ஐ மாநிலக் குழு உறுப்பினராவும், சி.பி.எம் கட்சியின் மூணாறு ஏரியா குழு உறுப்பினராவும் இருக்கேன். கட்சி வேட்பாளர் தேர்விக்குழு, எனது கட்சிப் பொறுப்பு, செயல்பாடுகள், வழக்கறிஞர் உள்ளிட்ட விஷயங்களையெல்லாம் ஆராய்ந்துதான் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாங்க.’’

‘‘எம்.எல்.ஏ-வாக தொகுதி மக்களுக்கு உங்கள் முதல் பணி எதுவாக இருக்கும்?’’

‘‘இங்க கொரோனாத் தொற்று அதிகம் ஆகிட்டிருக்கு. கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்துப் பணி செய்வேன். என் தொகுதி, சுற்றுலா இடங்கள் அதிகமா உள்ள பகுதி. எனவே, சுற்றுலா வளர்ச்சிக்குத் தேவையான பணிகள் செய்வேன். விவசாயம் மற்றும் தேயிலைத் தொழிலாளர்களோட வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்.”

‘‘தேவிகுளம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு பிரச்னை, கூலியை 500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பற்றி?”

‘‘வீடு இல்லாதவங்களுக்கு வீட்டுமனையும் வீடும் கொடுக்கிறதா கவர்ன்மென்ட் சொல்லியிருக்கு. அதற்கான நடவடிக்கை கவர்ன்மென்ட் எடுக்கும். முன்னாடி கூலி 212 ரூபாயா இருந்தது. கடந்த கவர்ன்மென்ட் அதை 410 ரூபாயா உயர்த்தியிருக்கு. இனி அவங்க தேவை 500 ரூபாய் என்றால், பகுதி பகுதியா உயர்த்துறதுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.”

‘‘பினராயி விஜயன் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?”

‘‘கடந்த அஞ்சு வருஷ காலம் கேரளாவுல நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள்தான் இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக் காரணம். ரெண்டு முறை மிகப்பெரிய அளவுல மழை வெள்ளப் பிரளயம் வந்துச்சு. நிஃபா வைரஸ்ங்கிற வியாதி, அப்புறம் கொரோனாத் தொற்று வந்துச்சு. இதையெல்லாம் அரசு எதிர்கொண்டு சமாளித்த விதம், மக்கள் நலத்திட்டம், சிறப்புத்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் விரும்பியதால, மறுபடியும் இந்த ஆட்சியை எதிர்பார்த்தாங்க. அது நடந்திருக்கு.”

தமிழில் உறுதிமொழி எடுத்ததில் பெருமை!

‘‘கடந்த ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மீண்டும் அமைச்சராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்களே?”

“அவங்க சிறப்பா செயல்பட்டதால மீண்டும் அவங்க அமைச்சரா வரணும்னு மக்கள் விரும்புறாங்க. ஆனா, கட்சியில புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு தீர்மானிச்சாங்க. அதன் அடிப்படையில புதிய ஆட்கள் வந்திருக்கிறாங்க.”

‘‘தேவிகுளம் தொகுதி எம்.எல்.ஏ யாருக்காவது முன்பு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்களா?”

‘‘அமைச்சர் பதவி என்பது தொகுதி பார்த்துக் கொடுக்கிறது இல்லியே. ஒரு காலகட்டத்துல இடுக்கி மாவட்டத்துக்கு மந்திரியே இல்லாம இருந்தாங்க. சி.பி.எம் ஆட்சியிலதான் கடந்த முறையும் இந்த முறையும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி கொடுத்திருக்கிறாங்க. அதுவே பெரிய விஷயம்தான்.”