Published:Updated:

முன்பக்கமாக பல் தள்ளியிருப்பதால் அரசு வேலை மறுத்த பி.எஸ்.சி - வழக்கு பதிந்த எஸ்.சி., எஸ்.டி ஆணையம்!

இளைஞர் முத்து

மருத்துவத் தகுதிச் சான்றிதழில் முன்பக்க பல் தள்ளியிருப்பதாக டாக்டர் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் காரணம்காட்டி, அரசுப் பணி வழங்க இயலாது என பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது.

முன்பக்கமாக பல் தள்ளியிருப்பதால் அரசு வேலை மறுத்த பி.எஸ்.சி - வழக்கு பதிந்த எஸ்.சி., எஸ்.டி ஆணையம்!

மருத்துவத் தகுதிச் சான்றிதழில் முன்பக்க பல் தள்ளியிருப்பதாக டாக்டர் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் காரணம்காட்டி, அரசுப் பணி வழங்க இயலாது என பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது.

Published:Updated:
இளைஞர் முத்து

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அட்டப்பாடி அருகேயுள்ள முக்காலி பகுதியிலிருந்து வனத்துக்குள் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஆனவாயி கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் முத்து. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முத்து, அரசுப் பணிக்காக முயன்றுவந்தார். இந்த நிலையில் பீட் ஃபாரஸ்ட் ஆபீஸர் பணிக்கு ஆள் தேர்வு செய்யவிருப்பதாக கேரள அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பி.எஸ்.சி) அறிவித்தது. அந்த பணிக்கு விண்ணப்பித்த முத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பீட் ஃபாரஸ்ட் ஆபஸர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த உடல் தகுதி தேர்விலும் வெற்றிபெற்றிருக்கிறார். இந்த நிலையில் மருத்துவத் தகுதிச் சான்றிதழில் முன்பக்க பல் தள்ளியிருப்பதாக டாக்டர் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து பற்கள் முன்னால் தள்ளியிருப்பதால் பணி வழங்க இயலாது என பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது.

சிறுவயதில் பல் விழுந்த பிறகு மீண்டும் முளைத்த பல் இப்படி ஆனதாகவும், பணம் இல்லாததால் சரிசெய்யும் சிகிச்சை செய்ய இயலவில்லை எனவும் முத்து கூறியிருக்கிறார். ஆனால், அந்த விளக்கத்தை பி.எஸ்.சி எற்றுக்கொள்ளவில்லை. பல் தள்ளியிருந்ததால் பழங்குடியின இளைஞருக்கு அரசு வேலை வழங்காத விவகாரம் விவாதமானது.

பல் நீண்டிருந்த பழங்குடியின இளைஞருக்கு வேலை மறுத்த பி.எஸ்.சி
பல் நீண்டிருந்த பழங்குடியின இளைஞருக்கு வேலை மறுத்த பி.எஸ்.சி

இது குறித்து முத்து கூறுகையில், "பழங்குடியினச் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட பீட் ஃபாரஸ்ட் ஆபீஸர் பணிக்காக நான் விண்ணப்பித்திருந்தேன். எழுத்துத் தேர்விலும், உடல் தகுதித் தேர்விலும் வெற்றிபெற்றேன். சான்றிதழ் சரிபார்த்த சமயத்தில் எனது முன் பற்கள் தள்ளிய நிலையில் இருப்பதால், வேலை வழங்காமல் வெளியேற்றினர். வெளியே தள்ளிய நிலையில் உள்ள பற்களை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பணம் இல்லாததால் இதுவரை சரிசெய்யாமல் இருந்தேன். எனக்கு அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்தேன். இறுதிக்கட்டத்தில் எனது தள்ளிய பல்லை காரணம் காட்டி வேலை மறுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார்.

பழங்குடியின இளைஞரின் பல் முன்னால் தள்ளிய காரணத்தால் வேலை மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து வெளியான செய்திகள் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி ஆணையம் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. வனம் மற்றும் வன விலங்குகள்துறை முதன்மைச் செயலாளர், பி.எஸ்.சி செயலர் உள்ளிட்டோர் இது சம்பந்தமாக ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என எஸ்.சி., எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பி.எஸ்.சி தரப்பில் கூறும்போது, "வெளியே பல் தள்ளிய நிலையில் இருப்பவர்களுக்கு யூனிஃபார்ம் சர்வீஸில் பணி வழங்க வேண்டுமானால் அரசு நியமனச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அந்த இளைஞருக்குப் பல் தள்ளியிருப்பதாக மருத்துவச் சான்றிதழில் குறிப்பிட்டிருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

இளைஞர் முத்து
இளைஞர் முத்து

யூனிஃபார்ம் சர்வீஸ் விதிப்படி தேர்வாகும் நபரின் ஒவ்வொரு கண்ணுக்கும் முழுப் பார்வை சக்தி இருக்க வேண்டும். கால் முட்டிகள் ஒன்றை ஒன்று இடித்தபடி இருக்கக் கூடாது. கால் நரம்புகள் வெளியே தெரியக் கூடாது. கால்கள் வளைந்த நிலையில் இருக்கக் கூடாது. பல் தள்ளியிருப்பது, திக்கித் திக்கிப் பேசுவது, கேட்கும் திறன் குறைவு உள்ளிட்டவை இருந்தால் வேலைக்குச் சேர தகுதி இல்லாதவர் என ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின்படியே அந்த இளைஞருக்கு வேலை வழங்க இயலவில்லை" எனத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது கேரளாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.