Published:Updated:

`நீண்டகாலம் நீடிக்காது!’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல்

குடியுரிமை மசோதாவை கேரள மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாமில் கடந்த ஒருவார காலமாகப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியதையடுத்து போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்நிலையில் கேரள மாநிலத்திலிருந்து குடியுரிமை மசோதவுக்கு எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. `அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான இருக்கும் சட்டத்துக்கு இங்கு இடமில்லை அதைச் செயல்படுத்த முடியாது' என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ``நாட்டின் பொருளாதாரம் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் குறிக்கும் புள்ளிவிவரங்களும், ஆய்வுகளும் இப்போது வெளிவந்துள்ளன. மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் இத்தகைய முயற்சியை இந்தியாவில் வெற்றிகரமாகப் பரிசோதித்தது. இதையே கடந்த காலங்களில் ஹிட்லரின் ஜெர்மனியிலும் செய்யப்பட்டது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்காது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எழும் குரல் ஒரே மாதிரியாக இருக்கிறது.

இந்த மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ளது. மாநில அரசானது, இந்த மசோதா குறித்து அனைத்து நிலைகளிலும் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியலமைப்பின் அடித்தளம் மதச்சார்பின்மை என உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்பக் கூறுகிறது. இந்த மசோதாவானது மதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பிரிவை உருவாக்குகிறது. இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தை நாசப்படுத்தும் சதித்திட்டத்தின் விளைவாகும். இதுபோன்ற அரசியலமைப்புக்கு எதிரான சட்டத்துக்குக் கேரளாவில் இடமில்லை. அத்தகைய சட்டத்தை கேரள மாநிலம் செயல்படுத்தாது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

பிரிவினையின் போது ஏராளமான இஸ்லாமியர்கள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் ஒரு இஸ்லாம் தேசத்தில் வாழ விரும்பவில்லை. மதச்சார்பற்ற தேசத்தில் வாழ விரும்பினார்கள். மதம், சாதி, மொழி, கலாசாரம், தொழில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து இந்தியர்களும் குடியுரிமையை பெறுவதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. குடியுரிமை திருத்த மசோதாவால் இந்த உரிமை ரத்து செய்யப்படுகிறது” என்றார்.