Published:Updated:

`அரசியலமைப்புக்கும் நாடாளுமன்றத்துக்கும் அவமரியாதை!' - கேரளாவுக்கு எதிராகக் கொதிக்கும் பா.ஜ.க

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

கேரளா முதல்வர் பினராயி விஜயன்
கேரளா முதல்வர் பினராயி விஜயன் ( ANI )

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்தச் சட்டத்தை எதிர்த்து கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், நேற்று கூடிய கேரளா சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்
ANI

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு இயற்றி இருக்கிறது. அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்'' என்றார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னர் பேசிய பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கடுமையாகச் சாடினார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அவர்களின் கொள்கைகளில் ஒன்று என்றும் அவர் பேசியிருந்தார்.

`கேரளாவில் தடுப்பு மையம் வராது!’- #CAA-வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பினராயி

இந்தநிலையில், கேரள அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்றத்தையும் அவமதித்துவிட்டதாக பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ``நமது அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் வரம்புகள் குறித்து தெளிவாக நமக்கு விளக்கியிருக்கிறது.

முக்தர் அப்பாஸ் நக்வி
முக்தர் அப்பாஸ் நக்வி
ANI

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேறியிருக்கிறது. இந்தச்சூழலில் மாநில சட்டப்பேரவை அதை மதிக்காமல் செயல்படுவது அரசியலமைப்புச் சட்டத்தை மட்டுமல்ல நாடாளுமன்றத்தையே அவமதிப்பதற்குச் சமம்'' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.