Published:Updated:

புதுச்சேரி:`அழைப்பிதழ் கண்டு அதிர்ச்சியடைந்தேன்’-பெயர் போடாததால் அரசு விழாவை ரத்து செய்த கிரண் பேடி

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி நகராட்சி கட்டடத் திறப்புவிழா அழைப்பிதழில் தனது பெயர் போடவில்லை என்பதற்காக, இன்று நடக்கவிருந்த அரசு விழாவை ரத்து செய்திருப்பதுடன், அதற்குக் காரணமான அதிகாரி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கறார் காட்டியிருக்கிறார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

புதுச்சேரி கடற்கரை சாலையில் இயங்கிவந்த நூற்றாண்டு பழைமைவாய்ந்த நகராட்சிக் கட்டடம் (மேரி), போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதமடைந்தது. அதனால் அங்கு இயங்கிவந்த புதுச்சேரி நகராட்சி அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு அதைப் புனரமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இடிந்து தரைமட்டமானது. அதையடுத்து புதுச்சேரியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மேரி கட்டடத்தை பழைமை மாறாமல் மீண்டும் கட்ட வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். அதனால் 2017-ம் ஆண்டு, புதுச்சேரி திட்ட அமலாக்க முகமை மூலம் ரூ.15.4 கோடி மதிப்பீட்டில், பிரெஞ்ச் முறைப்படி கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.

தரைமட்டமான மேரி கட்டடம் (கோப்பு படம்)
தரைமட்டமான மேரி கட்டடம் (கோப்பு படம்)

அந்தப் பணி முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு திறப்புவிழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், தலைமைச் செயலர், திட்ட அமலாக்க முகமை இயக்குநர் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிதழில் தனது பெயர் போடாததை வாட்ஸ்அப் மூலம் செய்தியாளர்களுக்குச் சுட்டிக்காட்டிய கிரண் பேடி, ``இந்தத் திட்டம் 100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அழைப்பிதழில் துணைநிலை ஆளுநரான எனது பெயர் இடம்பெறவில்லை. மத்திய அரசின் நிதியில் திட்டங்கள் நடைபெற்றிருந்தால், அது தொடர்பான விவரங்களை துணைநிலை ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அரசுத் துறைகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருக்கிறது. அத்துடன் `அந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் பங்கேற்க நேரம் ஒதுக்க முடியுமா?’ என்று கேட்க வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட மேரி கட்டடம்
புதுப்பிக்கப்பட்ட மேரி கட்டடம்

அனைத்து அரசுச் செயலர்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மீறினால், மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திட்ட இயக்குநர் அருண் இது தொடர்பாக ஏன் எனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை... தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் இது தொடர்பாக அருணிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

ஒருவேளை அவர் (அருண்) மன்னிப்புக் கேட்காவிட்டால், மத்திய உள்துறையில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல திட்ட இயக்குநர் அருணுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. அவரின் பதில் வந்த பிறகு அவர்மீது துணைநிலை ஆளுநர் என்ற முறையில் நான் நடவடிக்கை எடுப்பேன். ஏனெனில், ஒரு முக்கிய விழாவில் துணைநிலை ஆளுநர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதுதான் காரணம். அழைப்பிதழில் என் பெயர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்” என்றும் கொந்தளித்திருந்தார்.

அமலாக்க முகமை திட்ட இயக்குநர் அருண்
அமலாக்க முகமை திட்ட இயக்குநர் அருண்

அதையடுத்து நகராட்சி கட்டட திறப்புவிழாவை ரத்து செய்து உத்தரவிட்ட கிரண் பேடி, அந்த உத்தரவை செய்தியாளர்களுக்கு அனுப்பிவைத்தார். அந்த உத்தரவில், “நகராட்சி மேரி கட்டடம் சீரமைப்புக்கு மத்திய அரசு முழு நிதியுதவி தந்தது. குறிப்பாக கரையோர பேரிடர் அபாயக் குறைப்பு திட்டத்தில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசு ரூ.244 கோடி கடனையும் கரையோர பேரிடர் அபாயக் குறைப்பு திட்டத்துக்கு அளித்திருக்கிறது. அதனால் இந்தக் கட்டடத் திறப்புவிழாவுக்கு மத்திய அரசு பிரமுகர்களை அழைத்திருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு பொருத்தமான தேதியை தலைமைச் செயலர் நிர்ணயிக்க வேண்டும். அதனால் 12-ம் தேதி (இன்று) நடக்கவிருந்த திறப்புவிழா ஒத்திவைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மத்திய அரசால் நிதி தரப்பட்ட திட்டங்கள், பணிகளைத் திறக்க மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை

கிரண் பேடியின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களை முகம் சுளிக்கவைத்திருப்பதால், சமூக வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவரும் அதே நேரத்தில், முன்னாள் மாவட்ட ஆட்சியரான அருணுக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். மேலும், ``நாடு முழுவதும் மக்களின் வரிப்பணத்தில் பல கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட பல அரசுக் கட்டடங்கள், திறப்புவிழா அரசியலால் திறக்கப்படாமலேயே கிடக்கின்றன. தற்போதும் அதுதான் நடக்கிறது” என்றும், ``அழைப்பிதழில் தனது பெயரைப் போடவில்லை என்பதற்காக மத்திய அரசைக் கோத்துவிட்டிருக்கிறார் கிரண் பேடி” என்றும் விமர்சித்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

அடுத்த கட்டுரைக்கு