Published:Updated:

`எந்த அடிப்படையிலும் கேள்வி எழுப்ப முடியாது!' -நாராயணசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த கிரண்பேடி #CAA

கிரண் பேடி
கிரண் பேடி

``நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் புதுச்சேரிக்கும் பொருந்தும். அதனால் அதற்கு எதிராக உங்களால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது”.

புதுச்சேரியில் வருகின்ற 12-ம் தேதி கூடவிருக்கும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதற்கு பா.ஜ.க தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று சில தினங்களுக்கு முன்பு சபாநாயகர் அலுவலகத்திலும் மனு அளித்திருந்தனர்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை இன்று சந்தித்த பா.ஜ.க-வின் நியமன எம்.எல்.ஏ-க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர், `குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றக் கூடாது' என்று மனு அளித்தனர்.

அதனடிப்படையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், ``மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ-க்கள் இன்று என்னைச் சந்தித்துக் கொடுத்த மனுவில், புதுச்சேரியை ஆளும் அரசு வரும் 12-ம் தேதி சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடியுடன் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள்
துணைநிலை ஆளுநர் கிரண் பேடியுடன் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள்

அத்துடன் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக விவாதம், தீர்மானம் ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடமும் மனு அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும், இது இந்திய அரசின் யூனியன் பிரதேச சட்டப்படி சட்டப்பேரவை அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பான சில விவரங்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் அரசாணையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் அது புதுச்சேரிக்கும் பொருந்தும். இந்த விவகாரத்தில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் எவ்வித அடிப்படையிலும் கேள்வி எழுப்ப முடியாது.

கிரண்பேடியின் கடிதம்
கிரண்பேடியின் கடிதம்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதம் செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது. மேலும் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றது. நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் விஷயத்தை தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி சட்டப்பேரவை விதிகள் கூறுகின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு