Published:Updated:

புதுச்சேரி: `மனநல மருத்துவமனையை அணுகலாம்!’ - எம்.எல்.ஏ-க்களுக்கு கிரண் பேடி பதிலடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி சுகாதாரத்துறையின் மருத்துவ அதிகாரிகளைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகத் தன் மீது எழுந்த குற்றச் சாட்டுகளையடுத்து, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மனநல மருத்துவமனையை அணுகலாம் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர்களிடம் கடுகடுத்த கிரண் பேடி!

புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பின் விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் இயக்குநர் மோகன்குமார் இருவரும் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அளித்து வருகின்றனர். தற்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் கடந்த 10 தினங்களாக அதிகாலையிலேயே கொரோனா நிலவரம் குறித்த தகவலை செய்தியாளர்களுக்கு அனுப்பி வருகிறார். அதனால்,`கொரோனா தடுப்புப் பணிக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தடையாக இருக்கிறார்’ என்று குற்றம்சாட்டினார் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடி கடந்த 19-ம் தேதி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு ஆய்வுக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளிடம், “கொரோனா தடுப்புப் பணியில் பொதுவான வழிமுறை என்று எதுவுமே இல்லையா? இப்படிச் செயல்படும் உங்களை பிறகு பார்த்துக்கொள்கிறேன். வழிமுறையை முறையாகப் பின்பற்றாமல் நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள். அதனால் உங்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் தற்போது நேரமில்லை. மக்களுக்காக செயல்பட வேண்டிய நேரம்.

மருத்துவர்கள் போராட்டம்!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் எப்படிப் பரிசோதனைகளை மேற்கொண்டீர்கள்? கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பரிந்துரைகளை நீங்கள் அமல்படுத்தவில்லை. தினமும் என்னென்ன பணிகளை நீங்கள் மேற்கொண்டீர்கள் என்ற விபரங்களும் தெளிவாக இல்லை. கொரோனா தொற்று காரணமாக நடந்த 28 பேரின் உயிரிழப்புகள் குறித்த அறிக்கையை எனக்கு அனுப்ப வேண்டும். காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், கொரோனாவை வெல்ல முடியும். ஆனால், நீங்கள் நோயாளிகளின் பின்னால் மட்டும்தான் செல்கிறீர்கள். வெறும் புள்ளி விபரங்களைக் காட்டும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. நீங்கள் நன்றாக வேலை செய்யத் தயாராக இருக்கிறீர்களா அல்லது விடுப்பில் செல்லப் போகிறீர்களா? செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருங்கள். மக்களுக்கு உண்மையாகப் பணியாற்றுங்கள்" என கடுகடுத்தார்.

சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்
சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்

அதையடுத்து, துணை ஆளுநர் கிரண் பேடி தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி சுகாதாரத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் கறுப்புத்துணி அணிந்து பணியாற்றினர். நேற்று புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் முன்பும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அனைவரும் நேற்று காலை 8 மணி முதல் 2 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோய் காலத்தில் விடுமுறையையும் பார்க்காமல் பணியாற்றும் மருத்துவர்களையும் சுகாதார ஊழியர்களையும் மனம் புண்படும் ஆளுநர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் வார்த்தைகளைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் சுகாதார ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்தது.

`மக்களை திசை திருப்புகிறார்கள்’

இந்நிலையில் நேற்று கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன்,``100 நாள்கள் அமைதியாக இருந்த கிரண்பேடி, தற்போது ஆய்வு என்ற பெயரில் சுகாதாரத்துறை அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசியிருக்கிறார். புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கிறது என்று பிரதமரே கூறியிருக்கிறார். அத்தகைய மருத்துவர்களைத் தீர்த்துக் கட்டிவிடுவேன், தூக்கில் போட்டுவிடுவேன் என்று அநாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் கிரண்பேடி” என்றார். தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அரசு கொறடா அணந்தராமன், தி.மு.க எம்.எல்.ஏ சிவா உள்ளிட்டவர்களும் கிரண் பேடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் கிரண் பேடி அளித்திருக்கும் தகவலில், ``பேரவையில் எம்.எல்.ஏ ஒருவர், நான் மருத்துவ அதிகாரிகளுக்கு எதிராகப் பேசியதாகக் கூறியிருப்பது 100% உண்மைக்குப் புறம்பானது. இதேபோல், அரசு ஊழியர்களின் மாதச் சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்களை நான் பேசுவதாகப் பொய்யாகக் கூறுகின்றனர்.

Vikatan

அவற்றைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை. பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நல வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரமிது. மேலும், பஞ்சாபில் நான் வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை என்றும் அதுதொடர்பாக என் மீது வழக்கு உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அதுவும் 100% உண்மைக்கு புறம்பானதுதான். நான் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி வருகிறேன். புதுச்சேரியின் சில எம்.எல்.ஏ-க்கள், பொய் சொல்வதும் பின்னர் அதை மறுத்துப் பேசுவதையுமே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதற்காக அவ்வாறு கூறுகிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆளுநர் மாளிகை அவரவர்களுக்கு தகுந்தாற்போல இயங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வேண்டுமென்றே சில எம்.எல்.ஏ-க்கள் மக்களை திசை திருப்பும் வகையில் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவர்கள் புதுவையில் உள்ள மனநல மருத்துவமனைகளை அணுகலாம் என நான் கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு