Published:Updated:

`சூரியன் ஓம் என்று உச்சரிக்கிறது!' - கிரண்பேடியின் `நாசா வீடியோ' சர்ச்சை; கொதித்த நெட்டிசன்கள்

நாசா விண்வெளி ஆய்வு மையத்துடன் தொடர்புபடுத்தி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சூரியன் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கிரண் பேடி இருந்துவருகிறார். ஆளுநராக கடந்த 2016-ம் ஆண்டு பதவியேற்றது முதல் அவருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடும் அதிகார மோதல் நீடித்து வருகிறது. அது ஒருபுறமிருக்க இந்த 4 வருடங்களில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பல்வேறு கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

கிரண்பேடி ட்வீட்
கிரண்பேடி ட்வீட்

2016-ம் ஆண்டில், ``முன்னாள் குற்றவாளியான பழங்குடியினர்கள் மிகக் கொடுமையானவர்கள். தெரிந்தே குற்றச்செயல்களில் ஈடுபடுவதில் திறமைசாலிகள். ஆனால் அவர்கள் அரிதாக கைது செய்யப்படுவதோடு, அரிதாகத்தான் தண்டனையும் பெறுகிறார்கள்” என்று அவர் பதிவிட்ட ட்வீட் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல, ``சுத்தமான கிராமம் என்று அரசின் சான்றிதழை வைத்திருந்தால்தான் இலவச அரிசி வழங்கப்படும்” என்று அவர் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியது. சமீபத்தில் கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி பிரபாகர் பட் என்பவருக்குச் சொந்தமான பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டார் கிரண்பேடி. அப்போது அங்கிருந்த மாணவர்கள் பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாடுவது போன்ற நிகழ்ச்சியை அரங்கேற்றினர். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சனத்தை எதிர்கொண்டார்.

நாசா குறித்த கிரண்பேடி வெளியிட்ட வீடியோ பதிவில்
நாசா குறித்த கிரண்பேடி வெளியிட்ட வீடியோ பதிவில்

இந்நிலையில் தற்போது, ``NASA Recorded Sound of Sun” “SUN CHANTS OM” (நாசா பதிவு செய்த சூரியனின் ஒலி… சூரியன் ஓம் என்று உச்சரிக்கிறது) வாசகங்களுடன் ஆடியோவுடன் கூடிய ஒரு வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மிகச் சரியாக 1.50 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் முதலில் சூரியக் கோள் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறிது நேரத்தில் அது மறைந்து இந்தியில் `ஓம்’ என்ற வார்த்தையும் சிவபெருமான் உருவமும் மாறி மாறி வருகிறது. பின்னணியில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் குரல் ஒன்று பிரபஞ்சத்துடனான தொடர்பு குறித்து பதிவு செய்கிறது.

நாசா
நாசா

கிரண்பேடியின் அந்தப் பதிவுக்குக் கீழே நாசா வெளியிட்ட உண்மையான ஆடியோவைப் பதிவு செய்த நெட்டிசன்கள், `இதற்கும் நீங்கள் வெளியிட்ட ஆடியோவுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா.. எங்கேயே ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்ட ஆடியோவின் உண்மையைப் பரிசோதிக்காமல் நாசா பெயரில் பதிவிடலாமா..?' `விண்வெளி குறித்த தகவலை அறிவியல் பார்வையில் அணுகாமல் மதச்சாயம் பூசுவது சரியா?' `நாசாவுக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறீர்களா?' என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இது பகிரப்பட்ட வீடியோ மட்டுமே. இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் முடிவு
ஈஷா அரோரா

நெட்டிசன்கள் வரிசையாக வந்து வசை பாடியதையடுத்து, ஆளுநர் மாளிகையின் ஈஷா அரோரா என்பவர், ``இது பகிரப்பட்ட வீடியோ மட்டுமே. இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் முடிவு” எனக் கூறியிருக்கிறார்.

ஈஷா அரோராவின் ட்வீட் புதுச்சேரியிலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், கிரண்பேடி வெளியிட்டிருக்கும் வீடியோ டெல்லியிருந்து பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு