Published:Updated:

`சூதாட்டக் கூடாரங்களை திறப்பதுதான் வளர்ச்சியா?'- நாராயணசாமி புகாருக்கு கிரண் பேடி கேள்வி!

கிரண் பேடி
கிரண் பேடி

பதிலடி கொடுக்கும் விதமாக வாட்ஸ்அப் மூலம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் கிரண் பேடி

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 23-ம் தேதி 2 நாள் சுற்றுப் பயணமாகப் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்த முதல்வர் நாராயணசாமி பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தார். அதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார் என்றும், அதனால் மத்திய அரசு அவரைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தகவலை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் முதல்வர் நாராயணசாமி.

கிரண்பேடி - நாராயணசாமி
கிரண்பேடி - நாராயணசாமி

தற்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக வாட்ஸ்அப் மூலம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் கிரண் பேடி. அதில், சூதாட்டக் கூடாரங்கள் (கேசினோ), மதுபானக் கடைகள், லாட்டரி விற்பனையைத் தொடங்குவதுதான் மாநிலத்தின் வளர்ச்சியா? இவைதான் மக்களின் நலனா? இதுதான் ஏழைகளுக்கானது என்று அழைக்கப்படுகிறதா? இவற்றுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இதில் எதையும் புதுச்சேரி மக்கள் விரும்பவில்லை. அமைச்சரவைக்கும், ஆளுநர் மாளிகைக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அது யூனியன் பிரதேச சட்ட விதிகளின் கீழ் வருகின்றது.

கிரண் பேடி, நாராயணசாமி
கிரண் பேடி, நாராயணசாமி

நாடாளுமன்றம் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தை இயற்றும்போது கொள்கை விஷயங்களில் முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளது. கொள்கை ரீதியிலான விவகாரத்தில் அமைச்சரவைக்கும், நிர்வாகிக்கும் (துணைநிலை ஆளுநர்) கருத்து வேறுபாடு ஏற்படும்போது மத்திய அரசு கொள்கையை முடிவு செய்கின்றது. அதை எப்படி ஜனநாயக விரோதம் என்று கூற முடியும்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு