Published:Updated:

`தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார் கு.க.செல்வம்!’ - எம்.எல்.ஏ பதவிக்குச் சிக்கலா?

கு.க.செல்வம்
கு.க.செல்வம் ( Photo: Srinivasulu / Vikatan )

`தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் மற்ற கட்சித் தொண்டர்களையோ, தலைவர்களையோ சந்திக்கக் கூடாது’ என்று எங்கும் குறிப்பிடவில்லை.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வத்தை, அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தி.மு.க தலைமைக் கழகம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க வின் தலைமை நிலையச் செயலாளராக இருந்த கு.க.செல்வம், கடந்த வாரம் டெல்லியில் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்தார். அவர் தி.மு.க தலைமைமீதான அதிருப்தியில் பி.ஜே.பி-யில் இணையப்போவதாகச் செய்திகள் வந்தன. ஆனால், ``எனது தொகுதியின் கோரிக்கைக்காகவும், மோடியின் நல்லாட்சியைப் பாராட்டவுமே டெல்லிக்கு வந்தேன். கட்சியில் இணைய வரவில்லை” என்று கு.க.செல்வம் தெரிவித்தார்.

இந்தச் சர்ச்சை கிளம்பியதும், கு.க.செல்வத்துக்கு தி.மு.க தலைமையிலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் சென்றது. அதில் `கழகத்தின் கட்டுபாட்டை மீீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாகக் கழகத்திலிருந்து நீக்கி வைக்கப்படுவதோடு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஏன் நீக்கக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்ட இரண்டு நாள்கள் கழித்து, கு.க.செல்வம் தரப்பிலிருந்து அதற்கு பதில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதில் `தாங்கள் அனுப்பிய நோட்டீஸ் விவரங்கள் இல்லாமல் மேலோட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. நான் என்ன தகவலைப் பொய்யாகச் சொன்னேன் என்று அதில் குறிப்பிடவில்லை.

கு.க செல்வம்- நட்டா சந்திப்பு
கு.க செல்வம்- நட்டா சந்திப்பு

தி.மு.க-வை சேர்ந்தவர்கள் மற்ற கட்சித் தொண்டர்களையோ, தலைவர்களையோ சந்திக்கக் கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, சட்டப்படி விசாரணைவைத்தால் அதற்கு நான் ஒத்துழைக்கிறேன்’ என்று பதில் அனுப்பியிருந்தார் கு.க.செல்வம். அவரின் இந்த நோட்டீஸ் குறித்து தி.மு.க வழக்கறிஞர்களுடன் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். `அவர் பி.ஜே.பி-க்குச் செல்வதில் உறுதியாக இருப்பதால், அவரைக் கட்சியில் வைத்துக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை’ என்று மூத்த தலைவர்களும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

``கருணாநிதியின் துரையும்… அண்ணனின் ஆழ்வாரும்'' - தி.மு.க  நிர்வாகிகள் சலசலப்பு கதையின் பின்னணி!
தி.மு.க அறிவிப்பு
தி.மு.க அறிவிப்பு

அதன் அடிப்படையில் இன்று தி.மு.க தலைமைக் கழகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் `கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கிவைக்கப்படுகிறார்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. `கட்சியிலிருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்டாலும், அவர் வேறு கட்சியில் இணையாத வரை அவரது எம்.எல்.ஏ பதவிக்கு எந்தச் சிக்கலும் வராது’ என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

அடுத்த கட்டுரைக்கு