Election bannerElection banner
Published:Updated:

`எத்தனையோ தொகுதிகள் இருக்கு; ஆனா இங்கே வந்துட்டீங்க’ - வேட்பாளர் அறிமுகத்தில் கே.என்.நேரு பேச்சு

கே.என்.நேரு
கே.என்.நேரு

`தி.மு.க நிர்வாகிகளை இனிகோ கொஞ்சம்கூட மதிப்பதில்லை. அவர் பெரிய தொழிலதிபராகவும் தலைவராகவும் இருக்கலாம். தொகுதிக்குள் வாக்கு கேட்க எங்களை அல்லவா அழைத்துச் செல்ல வேண்டும்...’ எனக் கொந்தளிக்கும் தி.மு.க-வினர்

திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விமர்சனம் செய்து அறிவுரை வழங்கியிருக்கிறார் கே.என்.நேரு. இது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள வி.என்.நகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார்.

தி.மு.க வேட்பாளர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜை நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்துவைத்துவிட்டு, மேடையில் பேசத் தொடங்கினார் கே.என்.நேரு. இக்கூட்டத்தில்தான் வேட்பாளரான இனிகோ இருதயராஜுக்குச் சிலவற்றைப் புரியவைத்திருக்கிறார். இந்தப் பேச்சு எழுவதற்குக் காரணம் என்ன என்று தி.மு.க நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தோம்.

``திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இனிகோ இருதயராஜின் செயல்பாடுகள் பிடிக்காததால் தி.மு.க-வினர் யாரும் வாக்கு கேட்டுச் செல்லவில்லை. இந்த விவகாரம் தலைமைக்குச் சென்றதும் கட்சித் தலைமை கே.என்.நேருவை அழைத்து, `தொண்டர்களை வைத்து தொகுதியில் வேலை பார்க்கச் சொல்லுங்கள். அவரை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்று கறாரான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது” என்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ
திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ

இந்தநிலையில், தொகுதியில் என்ன நடக்கிறது என்று ஐபேக் டீமும் தி.மு.க மூத்த நிர்வாகிகளிடம் விசாரிக்க, நடந்தவற்றை அப்படியே கொட்டியிருக்கிறார்கள். இது பற்றி தி.மு.க தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``தி.மு.க நிர்வாகிகளை வேட்பாளரான இனிகோ கொஞ்சம்கூட மதிப்பதில்லை. அவர் பெரிய தொழிலதிபராகவும் கிறிஸ்தவ சமுதாயத்துக்குத் தலைவராகவும் இருக்கலாம். தொகுதிக்குள் வாக்கு கேட்க எங்களை அல்லவா அழைத்துச் செல்ல வேண்டும்... ஆனால் அவர் அதுபோல் செய்வதில்லை.

அவரது சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள், ஐடி டீம்-களை மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டு செல்கிறார். கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மத நல்லிணக்க தலைவர்களை மட்டும் சந்தித்து ஆதரவு கேட்டுவருகிறார். அதோடு, இவர் செல்லும் இடமெல்லாம், `கிறிஸ்தவ சிறுபான்மையினரான நமது குரலைச் சட்டமன்றத்தில் ஒலிப்பதற்காக நான் களத்தில் நிற்கிறேன். என்னை வெற்றி பெறவைத்து சட்டமன்றத்துக்கு அனுப்பினால் நம்முடைய குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும்’ என்று தொடர்ந்து பேசிவருகிறார்.

ஆதரவாளர்களுடன் இனிகோ இருதயராஜ்
ஆதரவாளர்களுடன் இனிகோ இருதயராஜ்

இப்படியிருக்க, நாங்கள் எப்படி அவருடன் செல்ல முடியும்... ஐடி டீம் மூலமாக எப்படி வாக்கு வாங்க முடியும் என்கிற தகவல் சிந்தாமல் சிதறாமல் அப்படியே ஐபேக் டீமுக்கு புகாராகச் சென்றிருக்கிறது” என்றனர்.

பின்பு ஐ-பேக் டீம் இனிகோவிடம், ``இனிமேல் தேர்தல் முடியும் வரையிலும் தி.மு.க நிர்வாகிகளை மட்டுமே உடன் வைத்திருக்க வேண்டும்" என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறதாம்.

கூட்டத்தில் பேசிய கே.என் நேரு
கூட்டத்தில் பேசிய கே.என் நேரு

ஒன்றும் சொல்ல முடியாமல் இனிகோ திணறியிருக்கிறார். மேலும் இனிகோ, சமுதாயத் தலைவர்களிடம் பேசும் வீடியோவை கே.என்.நேருவுக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கே.என்.நேரு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோலப் பேசியிருக்கிறார். ``ஏப்பா... நீ என்னதான் படிச்சவரா இருக்கலாம். டாக்டரேட் பட்டம்கூட வாங்கியிருக்கலாம். உங்களை மாதிரி படிச்ச ஆளுகளுக்கான இடமில்லை இது. எங்களை மாதிரி படிக்காத ஆளுகளுக்கான இடம். வேட்பாளர்கள் அளவா பேசணும்... நிறைவா பணி செய்யணும்.

நீங்க தனிச் சின்னத்துல போட்டி போடலை. உதயசூரியன் சின்னத்துலதான் போட்டி போடுறீங்க. மத்த சமுதாய மக்களும் நமக்கு ஓட்டுப் போடணும். எங்கே போனாலும், வீடியோ எடுத்துக்கிட்டு இருக்காங்க. அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள்ல வந்தா நமக்குத்தான் இழப்பு. அதை மனசுலவெச்சுக்கிட்டு வார்த்தையப் பார்த்துப் பேசுங்க" என்றார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

மேலும், ``இனிகோ தலைவரோடு நல்ல நெருக்கத்தில் இருக்கலாம். அது ஒண்ணும் தப்பில்லை. களத்துல நாங்கதான் இருப்போம். எங்கள அனுசரிச்சுப் போனாதான் உங்களை வெற்றிபெற வைக்க முடியும்" என்றிருக்கிறார் நேரு. ``10 ஆண்டுகளா தி.மு.க ஆட்சியில் இல்லாதபோது கிறிஸ்தவ மக்களை அழைத்துக் கூட்டம் நடத்தி, தளபதிக்கு பக்கபலமா இருந்தவர் இனிகோ.

இதில் எந்த மாற்றமும் இல்லை. அப்போ அவருக்கு ஒரு சீட்டு தருவதாக உறுதி கொடுத்திருக்காரு தளபதி. தமிழகத்துல் கிறிஸ்தவர்கள் நிறைந்த தொகுதிகள் எத்தனையோ இருக்கு. அங்கே போட்டியிட்டிருக்கலாம். ஆனா இங்கே சீட் வாங்கிட்டு வந்திருக்காரு. வெளியில உள்ளவங்க எல்லாரும் ஏதோ நான்தான் சீட் வாங்கிக் கொடுத்துட்டேன்னு என்னையைத் திட்டிக்கிட்டு இருக்காங்க.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

நான் யாருக்கும் சீட் வாங்கிக் கொடுக்கும் வேலையைப் பார்க்கலை" என்று மேடையில் அமர்ந்திருந்த அன்பில் மகேஷை பார்த்தார். அன்பில் மகேஷ் கிழக்கு தொகுதியைக் குறித்துக் காய்நகர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ``இனிகோ வெற்றி பெற வேணும்னு தளபதி நினைக்கிறார். தலைவரோட ஆசையை நிறைவேற்றுவது நம்முடைய கடமை. எந்தவிதப் பிரச்னை, மனக்குமுறல்கள் இருந்தாலும் எனக்காக அதை ஒதுக்கிவெச்சுட்டு வேலையைப் பாருங்க. வெற்றிபெறச் செய்யுங்க. உங்களுக்காக நான் இருக்கிறேன்" என்று அவருக்கே உண்டான பாணியில் சொல்லி முடித்திருக்கிறார் நேரு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு