Election bannerElection banner
Published:Updated:

`பழையன கழிதலும் புதியன புகுதலும்!'- ஐ.ஜே.கே விலகல் குறித்து கே.என்.நேரு

தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு
தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு

`விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அ.தி.மு.க-வின் கட்சியினருக்கான கடன் தள்ளுபடி. ஒரு விவசாயிகூட இதில் பலனடையவில்லை' - கே.என்.நேரு

``பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போலத்தான் ஐ.ஜே.கே அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர்களுக்குத்தான் பெரும் நஷ்டம்" என்கிறார் கே.என்.நேரு.

திருச்சி திமுக செயற்குழுக் கூட்டம் கே.என்.நேரு
திருச்சி திமுக செயற்குழுக் கூட்டம் கே.என்.நேரு

திருச்சி தி.மு.க மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், திருச்சி வடக்கு, மத்திய மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேர்தல் விதி நடைமுறையில் இருப்பதால் காவல்துறை ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுத்திருந்தது.

தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ``தி.மு.க மாநாடு தேர்தல் தேதி அறிவித்தால் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தி.மு.க தலைவருடன் பேசி, கூட்டம் நடைபெறுவதற்குத் திட்டமிடப்படும். இன்று தோழமைக் கட்சிகளுடன் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில் தி.மு.க தலைவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது தி.மு.க-வுக்கு எவ்விதப் பின்னடைவையும் ஏற்படுத்தாது. திறந்தவெளி மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். கடந்த முறையும் இதே இடத்தில் மாநாடு நடத்தத் திட்டமிட்டபோது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. ஐ-பேக் டீம் நெருக்கடியால் மாநாடு ஏற்பாடுகள் தாமதமாகவில்லை" என்றார்.

தொடர்ந்து, ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம். டெல்டா மாவட்டங்களிலுள்ள 46 தொகுதிகளில் 40 தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெறும் எனத் தலைவரிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறேன்.

தி.மு.க நிர்வாகிகள்
தி.மு.க நிர்வாகிகள்

மற்ற மாவட்டங்களிலும் தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிரது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளுக்கும் தி.மு.க-வினர் 7,000 பேர் இதுவரை விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். 10 ஆண்டுகளாக தி.மு.க ஆட்சிக்கட்டிலில் இல்லை. தமிழகத்தின் வளர்ச்சி முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை மக்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். நேர்மையான ஆட்சியை தி.மு.க-வால் மட்டுமே கொடுக்க முடியும்.

கூட்டணியிலிருந்து ஐ.ஜே.கே வெளியேறியது குறித்துக் கேட்டதற்கு, ``ஐ.ஜே.கே., தி.மு.க கூட்டணியிலிருந்து சென்றது அவர்களுக்குத்தான் பெரும் நஷ்டம். இரண்டு மிகப்பெரிய கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கின்றன. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுபோலத்தான். இதில் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதை நாங்கள் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

செயற்குழுக் கூட்டம்
செயற்குழுக் கூட்டம்

முதல்வரின் கடைசி நேர அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான அரசாணை வெளியிட வேண்டும். பல சிக்கல்கள் இருக்கின்றன. அடுத்துவரும் அரசு உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அ.தி.மு.க-வின் கட்சியினருக்கான கடன் தள்ளுபடி. ஒரு விவசாயிகூட இதில் பலனடையவில்லை. மக்கள் நீதி மையத்தின் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது பற்றி எனக்குத் தெரியாது. திருச்சியிலுள்ள ஒன்பது தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிக் கட்சி வெற்றி பெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு