Election bannerElection banner
Published:Updated:

விஐபி தொகுதி: திருச்சி மேற்கு... மூன்றாவது முறையாக முந்துவாரா நேரு?

நேரு - பத்மநாபன்
நேரு - பத்மநாபன்

திருச்சியில் தன்னைத் தாண்டி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் டம்மியான வேட்பாளரை நிறுத்திவிட்டார்.

திருச்சி மேற்குத் தொகுதியைப் பொறுத்தவரை, மூன்று முறை போட்டியிட்டிருக்கிறார் கே.என்.நேரு. அவற்றில் இரண்டு முறை வெற்றிபெற்று, ஒருமுறை தோற்றிருக்கிறார். மூன்றாவது முறையாகவும் அவர் வெல்வதற்குச் சாத்தியமுண்டா?

நேருவை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் புதுமுக வேட்பாளரான பத்மநாபன் களமிறக்கப்பட்டுள்ளார். ‘போட்டியிட பலமான வேட்பாளரைக் களமிறக்காமல், புதுமுகத்துக்கு வாய்ப்பு வழங்கியது ஏன்?’ என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தால், ‘‘திருச்சியில் தன்னைத் தாண்டி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக நேருவுடன் அண்ட்-கோ போட்டுக்கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் டம்மியான வேட்பாளரை நிறுத்திவிட்டார்’’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்!

விஐபி தொகுதி: திருச்சி மேற்கு... மூன்றாவது முறையாக முந்துவாரா நேரு?

40 ஆண்டுகளாகக் கட்சியிலிருக்கும் சீனியரான அ.தி.மு.க வேட்பாளர் பத்மநாபன், தற்போது ஜெ. பேரவை மாவட்டச் செயலாளராக இருக்கிறார். ‘‘கடந்த 1996-ல், திருச்சி மாநகராட்சியில் 45-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். கடந்த 2016-ல் மீண்டும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அப்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இப்படிப்பட்ட தேர்தல் அனுபவம்(!) கொண்ட ஒருவருக்குத்தான், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார்’’ என்று அலுத்துக்கொள்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். மூத்த நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல், சொற்ப ஆட்களோடு பரிதாபமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் பத்மநாபன்.

பத்மநாபனிடம் பேசியபோது, ‘‘நேரு செய்த தவறுகள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்த அட்ராசிட்டிகளை எக்ஸ்போஸ் செய்வதுதான் எனது வியூகம். தி.மு.க-வில் முக்கியப் பதவியிலிருந்தாலும், தொகுதிப் பக்கமே நேரு வருவது கிடையாது. நிச்சயம் கே.என்.நேருவைத் தோற்கடிப்பேன்’’ என்றார் நம்பிக்கையோடு.

திருச்சி மாவட்டத்தில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்காகவும் கே.என்.நேரு பிரசாரத்துக்குச் செல்வதால், திருச்சி மேற்கு தொகுதியில் பிரசாரம் செய்யும் பொறுப்பைத் தன் மகன் அருணிடம் ஒப்படைத்துவிட்டார் நேரு. இடையிடையே பிரசாரத்தில் கலந்துகொள்ளும் நேரு, தன் மீதான விமர்சனத்துக்கு பதில் சொல்லும்விதமாக, ‘‘கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதற்காகத் தமிழகம் முழுவதும் பயணிக்கும் நான், மற்ற நேரங்களில் உங்களுடன்தான் இருக்கிறேன். ஆனால், நான் தொகுதிக்குள் வருவதில்லை என்ற தவறான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன்வைக்கிறார்கள். நான் இல்லையென்றாலும், என் மகன் தொகுதியில்தான் இருக்கிறார். உங்களுடைய குறைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பார்’’ என்று பேசியிருக்கிறார்.

விஐபி தொகுதி: திருச்சி மேற்கு... மூன்றாவது முறையாக முந்துவாரா நேரு?

ஒரு எம்.எல்.ஏ-வாக தொகுதிக்கு நேரு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்றாலும், நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்துகொள்கிறார். ‘தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்திருந்தால், கண்டிப்பாக நேரு தொகுதியை வளமாக வைத்திருப்பார்’ என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்ததின் மூலம் தொகுதியைத் தனக்குச் சாதகமாக வைத்திருக்கிறார் நேரு!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு