Published:Updated:

கொடநாடு: `கருணைக் கொலைகூட செய்துவிடுங்கள்; அரசியல் வேண்டாம்!’- நீதிமன்றத்தில் சயான் ஆவேசம்

ஊட்டி நீதிமன்றம்
ஊட்டி நீதிமன்றம்

இன்று வழக்கத்துக்கு மாறாக லுங்கி, டீ சர்ட் அணிந்து நீதிமன்றத்துக்கு வந்திருந்த சயான், அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஆவேசமாக பேசத் தொடங்கினார்.

கொரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், கொடநாடு கொலை வழக்கு விசாரணையும் தற்போது வேகமெடுத்திருக்கிறது. சாட்சி விசாரணை நாள்தோறும் நடந்துவருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கோவை மத்தியச் சிறையிலுள்ள சயான், வளையார் மனோஜ் மற்றும் ஜாமீனில் உள்ளவர்கள் உட்பட 10 பேரும் ஆஜராகினர்.

ஊட்டி - கொடநாடு வழக்கு
ஊட்டி - கொடநாடு வழக்கு

`கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருக்கிறது’ எனப் பரபரப்பு பேட்டி கொடுத்த இருவரில் சாயனும் ஒருவர். வழக்கமாக கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் சயான் ஒயிட் ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வருவதுதான் வழக்கம்.

இன்று வழக்கத்துக்கு மாறாக லுங்கி, டீ சர்ட் அணிந்து நீதிமன்றத்துக்கு வந்திருந்த சயான், அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஆவேசமாகப் பேசத் தொடங்கினார். ``28-ம் தேதி ஊட்டி கோர்ட்டுல இருந்து கோயமுத்தூர் ஜெயிலுக்குப் போகும்போது, நைட் 10 மணிக்கு மேல ஆகிடுச்சு. கொசுத் தொல்லை இருக்குற, பயன்படுத்த முடியாத அறையை ஒதுக்கினாங்க. சாப்பிடவே முடியாத உணவைக் கொடுக்குறாங்க. அன்னிக்கி மூணு வேளை நான் எதுவுமே சாப்பிடலை.

அதிகாரி என்னை சந்திச்சு, ஃபேமிலிகூட பேச செல்போன் வசதி, நல்ல ரூம் தர்றதுக்கு நடவடிக்கை எடுக்கறதா தெரிவிச்சார். ஆனா அவர் சொன்னபடி வசதி செஞ்சு தரலை. பழைய ரூம்ல இருக்குற என்னோட பொருளை தரலை. தர மறுக்குறாங்க. என்னைவெச்சு எந்த அரசியலும் செய்ய வேண்டாம். கருணைக் கொலை வேண்டுமானால் செய்துவிடுங்கள்" என மலையாளம் கலந்த தமிழில் பேசி முடித்தார்.

ஊட்டி நீதிமன்றம்
ஊட்டி நீதிமன்றம்

சயானிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாலநந்தகுமார், ``உங்களுக்கு போன் பேச அனுமதிக்க வேண்டும்; நல்ல உணவு வழங்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

சயான் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன், ``கடந்த 28-ம் தேதி வழக்கு விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு கோவைச் சிறையில் உறவினர்களிடம் பேச தொலைபேசி வசதி தரவில்லை. தரமான உணவு வழங்கப்படுவதில்லை. அன்றைய தினம் வழக்கு விசாரணை முடிந்து, சிறைக்குச் சென்றபோது சயான், வாளையார் மனோஜ் இருவரையும் பயன்படுத்த முடியாத ஓர் அறையில் அடைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான முறையில் உணவும் வழங்கவில்லை. `எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. உங்களை நாங்கள் கவனிக்கிற விதத்தில் கவனிக்கிறோம்’ என மிரட்டியிருக்கிறார்கள்.

ஊட்டி நீதிமன்றம்
ஊட்டி நீதிமன்றம்

இவர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும், நீதிபதி உத்தரவை மீறி சிறைத் துறையினர் நடந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்கள் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சிறைத் துறையினரிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டிருக்கிறார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு