Published:Updated:

மீண்டும் சி.பி.எம் செயலாளராகப் பொறுப்பேற்றார் பாலகிருஷ்ணன் - விடுப்பில் சென்றதன் காரணம் இதுதான்!

கேரள மாநில சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன்
News
கேரள மாநில சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன்

மகன்களின் பிரச்னைகளில் ஓரளவுக்கு நெருக்கடி குறைந்திருக்கும் நிலையில், கொடியேறி பாலகிருஷ்ணனின் உடல் நிலையும் தேறியது. அதனால், அவர் மீண்டும் மாநிலச் செயலாளர் பதவியை ஏற்கத் தயாரானார்.

கேரள மாநிலத்தில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவி வகித்துவருகிறார். ஆளும் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி என்பது சி.பி.எம் கட்சியைப் பொறுத்த அளவில் முதலமைச்சர் பதவியைவிட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. சி.பி.எம் மாநிலச் செயலாளராக கொடியேரி பாலகிருஷ்ணன் இருந்துவந்தார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லை எனக் காரணம் கூறி, கடந்த 2020, நவம்பர் 13-ம் தேதி செயலாளர் பதவியிலிருந்து நீண்ட விடுப்பில் சென்றார். இதையடுத்து தற்காலிகப் பொறுப்பில் ஏ.விஜயராகவன் நியமிக்கப்பட்டார்.

கொடியேரி பாலகிருஷ்ணன்!
கொடியேரி பாலகிருஷ்ணன்!

கொடியேரி பாலகிருஷ்ணனின் இரண்டு மகன்கள் மீதும், 2019, 2020-ம் ஆண்டுகளில் சில குற்றச்சாட்டுகள் எழுந்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தின. கொடியேரி பாலகிருஷ்ணன் பதவியிலிருந்து விலக இந்த வழக்குகளும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் துபாயில் டான்ஸராக இருந்த சமயத்தில், கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரியுடன் பழக்கம் ஏற்பட்டு, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி நெருக்கமாகப் பழகிவிட்டு, குழந்தை பிறந்ததும் வேறு திருமணம் செய்துகொண்டார் எனப் புகார் அளித்து பரபரப்பைக் கிளப்பினார். பினோய் கொடியேரி மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சம்பவம் 2019-ம் ஆண்டு வாக்கில் பரபரப்பைக் கிளப்பியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெங்களூரில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய அனூப் முகமது உள்ளிட்ட சிலரை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கைதுசெய்தது. அனூப் முகமதுக்குப் பண உதவி செய்ததாக கொடியேரி பாலகிருஷ்ணனின் மற்றொரு மகன் பினீஷ் கொடியேரி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் ஓராண்டு சிறையிலிருந்த பினீஷ் கொடியேரி கடந்த அக்டோபர் 28-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

ஏ.விஜயராகவன்
ஏ.விஜயராகவன்

மகன்களின் பிரச்னைகளில் ஓரளவுக்கு நெருக்கடி குறைந்திருக்கும் நிலையில், கொடியேறி பாலகிருஷ்ணனின் உடல்நிலையும் தேறியது. அதனால், கொடியேறி பாலகிருஷ்ணன் மீண்டும் மாநிலச் செயலாளர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தார். இந்த நிலையில், இன்று நடந்த சி.பி.எம் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கொடியேறி பாலகிருஷ்ணன் மீண்டும் மாநிலச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஓராண்டு இடைவெளிக்குப் பின்பு மீண்டும் மாநிலச் செயலாளராகப் பதவி ஏற்றிருக்கிறார் கொடியேரி பாலகிருஷ்ணன்.