Published:Updated:

கொளத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம்: 5 நாள் தொடர் போராட்டம், கைது நடவடிக்கை!

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
News
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கொளத்தூர் தொகுதி, அவ்வை நகர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை சென்னை மாநகராட்சி இடித்துவருகிறது. இதை எதிர்த்து, கடந்த ஐந்து நாள்களாகப் போராடிவருகின்றனர் அப்பகுதி மக்கள்.

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி, அவ்வை நகர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை சென்னை மாநகராட்சி இடித்துவருகிறது. இதை எதிர்த்து, கடந்த ஐந்து நாள்களாகப் போராடிவந்த அந்தப் பகுதி மக்களை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

இடிக்கப்படும் வீடுகள்
இடிக்கப்படும் வீடுகள்

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், சுமார் 150 குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றன. இந்தக் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக மக்கள் கோரிவருகின்றனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், மேம்பாலப் பணிகளுக்காக அவ்வை நகரில் உள்ள சில வீடுகள், கடைகள் அகற்றப்படவிருக்கின்றன எனக் கூறி மாநகராட்சி அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் பாலத்தின் அகலம் சுமார் 28 அடி என்றும், சர்வீஸ் ரோட்டுக்கான இடம் 15 முதல் 20 அடி தேவை என்ற கணக்கீட்டின்படி சாலையின் மையத்திலிருந்து இருபுறமும் `அளவுக் குறியீடு (Marking)’ செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ம் தேதியன்று சென்னை மாநகராட்சி 6-வது மண்டல அலுவலர், `நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து தங்கள் வீடு கட்டப்பட்டிருக்கிறது. மேலும், ஜி.கே.எம் காலனி மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளை இணைக்கும் மேம்பாலக் கட்டுமானப் பணியும் நடைபெற்றுவருகிறது. ஆகவே, தாங்கள் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற ஏழு நாள்களுக்குள் தங்களால் கட்டப்பட்டுள்ள வீட்டினை உடனடியாக அகற்றித் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 6-ன் மூலம் தங்களது வீடு உடனடியாக இடித்து அகற்றப்படும்!" என்ற இறுதி அறிவிப்பை அனைவரின் வீட்டிலும் ஒட்டிச் சென்றிருக்கின்றனர்.

மாநகராட்சி நோட்டீஸ்
மாநகராட்சி நோட்டீஸ்

ஆனால், அவகாசம் முடிவதற்கு முன்பாகவே 12-ம் தேதி, காவல்துறையினரின் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு இடித்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அவ்வை நகர் பகுதி மக்கள் அனைவரும் இரவும் பகலுமாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர்.

போராடிய கொளத்தூர் தொகுதி மக்கள்
போராடிய கொளத்தூர் தொகுதி மக்கள்

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் ஏழுநாள் கெடு நேற்று 17-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இதனால், இன்று 18-ம் தேதி காலை 5-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 50-க்கும் மேற்பட்ட மக்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்றும் விதமாக காவல்துறையினர் கைதுசெய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். மேலும், எஞ்சியிருக்கும் வீடுகளை சென்னை மாநகராட்சியினர் தற்போது முழுமையாக இடித்து அப்புறப்படுத்திவருகின்றனர்.

இடிக்கப்பட்ட வீடுகள்
இடிக்கப்பட்ட வீடுகள்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், ``60 ஆண்டுகளாக இங்குதான் வசித்துவருகிறோம். இப்போது திடீரென வீடுகளை இடித்து, வெளியேற்றினால் நாங்கள் எங்கே செல்வோம்? மேம்பாலம் கட்டுவதற்காக இடத்தை எடுத்துக்கொண்டு, எஞ்சியிருக்கும் எங்கள் வீடுகள் இருக்கும் இடத்தை மட்டும் அப்படியே எங்களிடம் ஒப்படைக்கக் கோரிக் கேட்டோம். மாநகராட்சி அதிகாரிகளும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி, எங்கள் வீடுகள் முழுவதையும் இடித்து தரைமட்டமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இடித்த வீடுகளுக்கு மானியமோ, நாங்கள் வாழ்வதற்கு மாற்று வாழ்விடமோ அரசு தரப்பில் கொடுக்க முடியாது எனச் சொல்லிவிட்டார்கள்! நாங்கள் இப்போது எங்கள் உடைமைகள், குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கிறோம்" என்றனர்.