Election bannerElection banner
Published:Updated:

தனித்துவிடப்பட்ட ஆதிராஜாராம்!

ஆதிராஜாராம்
ஆதிராஜாராம்

ஏற்கெனவே ஆயிரம் விளக்குத் தொகுதியைவிட்டு ஸ்டாலினை நான்தான் விரட்டியடித்தேன். எனக்கு பயந்துகிட்டுதான் கொளத்தூருக்கு ஓடி வந்தார்.

தி.மு.க தலைவர்; எதிரணியின் முதல்வர் வேட்பாளர் என்பதால் மு.க.ஸ்டாலினை வீழ்த்த அ.தி.மு.க-வினர் பட்டாசாக வேலை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கொளத்தூர் தொகுதிக்குள் வலம் வந்தால், உற்சாகம் இழந்துகிடக்கிறது பிரசாரக் களம்.

தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக இருக்கிறார் ஆதிராஜாராம். ஏற்கெனவே, 2006-ம் ஆண்டு ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு 2,468 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர். இந்தநிலையில், கொளத்தூர் தொகுதியில் இரண்டு முறை தொடர் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாகக் களம்காணும் ஸ்டாலினை எதிர்த்துக் களமிறக்கப்பட்டிருக்கிறார் ஆதிராஜாராம்.

ஆதிராஜாராம்
ஆதிராஜாராம்

ஆதிராஜாராம் வாக்கு கேட்டு வரும்போது, அந்தத் தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆப்சென்ட். தொண்டர்களிடம் விசாரித்தால், ‘‘எங்க ஏரியா மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்பாபு, ஆர்.கே.நகர் தொகுதியில போட்டியிடுற ராஜேஷுக்கு வேலை பார்க்க நிர்வாகிகளை அழைச்சுட்டுப் போயிட்டாரு’’ என்று கூலாக பதில் தருகிறார்கள். பகுதி நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாமல் போகவே, தான் மாவட்டச் செயலாளராகப் பதவிவகிக்கும் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தனக்காகக் களத்தில் இறக்கினார் ஆதிராஜாராம். ஆனால், அந்த இரண்டு தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க மற்றும் பா.ஜ.க போட்டியிடுவதால், ‘‘இந்தத் தொகுதி நிர்வாகிகள் இங்குதான் இருக்க வேண்டும்’’ என கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், தங்கள் தலைமைகளின் மூலம் நெருக்கடி தந்து நிர்வாகிகளைத் தக்கவைத்திருக்கிறார்கள்.

‘‘ஏற்கெனவே ஆயிரம் விளக்குத் தொகுதியைவிட்டு ஸ்டாலினை நான்தான் விரட்டியடித்தேன். எனக்கு பயந்துகிட்டுதான் கொளத்தூருக்கு ஓடி வந்தார். கொளத்தூர்ல இருந்தும் அவரை விரட்டியடிக்க சரியான ஆள் நான்தான்னு கட்சித் தலைமை என்னை இந்தத் தொகுதிக்கு வேட்பாளரா அறிவிச்சிருக்கு’’ என்று கெத்தாகப் பேசுகிறார் ஆதிராஜாராம். அவரிடம், ‘‘தொகுதிக்குள் நிர்வாகிகள் மத்தியில் சரியான ஒத்துழைப்பு இல்லை என்கிறார்களே?’’ என்று கேட்க, ‘‘இந்தத் தொகுதி நிர்வாகிகள் எல்லோரும் எனக்குத்தான் வேலை செய்யறாங்க. கூட்டணிக் கட்சியினரும் நல்ல ஒத்துழைப்பு தர்றாங்க. ஏன், தி.மு.க நண்பர்கள்கூட, ‘விட்டுடாத... கண்டிப்பாக ஜெயிச்சுடு’னு எனக்குத் தொலை பேசியில வாழ்த்து சொல்றாங்க’’ என்கிறார் விடாப்பிடியாக.

`வாக்குச்சாவடி அரசியலில் கைதேர்ந்தவர்’ எனப் பெயர் எடுத்தவர் ஆதிராஜாராம். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வேலைகளைத் தொடங்கிவிட்டனர் தி.மு.க-வினர். உள்ளூர் நிர்வாகிகளுடன் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் ஸ்டாலினுக்கு வேலை செய்ய தொகுதிக்குள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், ஆதிராஜாராம் எந்த அளவுக்குத் தன் பழைய வியூகங்களைச் செயல்படுத்த முடியும் என்று தெரியவில்லை. எதிரணியின் முக்கியத் தலைவர் போட்டியிடும் ஒரு தொகுதியில், அ.தி.மு.க தலைமை பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்பதே களம் சொல்லும் உண்மை!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு