Published:Updated:

பெரியார், செருப்பு மாலை, ரஜினி கருத்து... 1971 சேலம் ஊர்வலத்தில் என்ன நடந்தது?

துக்ளக் விழாவில், 'பா.ஜ.க எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட்டைத்தான் ரஜினிகாந்த் பேசினார்' என்கிறார், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'முரசொலி பத்திரிகை படிப்பவர்கள் தி.மு.க-வினர்; துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள். 1971-ல், ராமர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலம் சென்றவர், பெரியார்' என்று பேசி, பிரச்னைக்குத் திரி கிள்ளியிருக்கிறார் ரஜினிகாந்த். விளைவு.... தமிழகம் முழுக்க பட் படாரென்று வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது இந்த விவகாரம். வழக்கம் போலவே ஆதரவுக் குரல்களும் எதிர்ப்புக் குரல்களும் ஒருசேர ஒலிக்கின்றன.

அந்த வகையில், ''திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக 1974-ல்தான் ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கே வருகிறார். அதனால்தான் 1971-ல் சேலத்தில் நடைபெற்ற 'மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு' பற்றிய உண்மையான செய்திகள் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை'' என்கிறார், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

மேலும், ''ராமர் - சீதையை நிர்வாணப் படமாக எடுத்துச் சென்றார்கள்; செருப்பு மாலை போட்டார்கள்' என்றெல்லாம் ரஜினிகாந்த் பேசியிருப்பது பொய். அதேபோல், ராமர் படத்தை செருப்பால் அடித்தார்கள் என்ற எதிர்வினையைப் பற்றிப் பேசியவர், அந்த செருப்பை பேரணியில் வீசி முதல்வினையை உருவாக்கியவர்கள் பற்றிப் பேசவேயில்லை. ஆக, ரஜினிகாந்த் பேச்சை, திட்டமிடப்பட்ட பொய்யாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

ஆடை அணிந்திருந்த நிலையிலுள்ள ராமர் - சீதை படங்கள்தான் பேரணியில் எடுத்துச்செல்லப்பட்டன. முனிவர் ஒருவரது மனைவியான அனுசுயா படம் மட்டும் நிர்வாண நிலையிலுள்ளதாக எடுத்துச்செல்லப்பட்டது. காரணம்... அந்த அனுசுயாவை, 'நிர்வாணமாக வந்து எங்களுக்குப் பிச்சையிட வேண்டும்' என்று கடவுளர்களான சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் வற்புறுத்தியதாகவும் அதன்படியே அனுசுயாவும் நிர்வாண நிலையில் வந்து அந்த மூன்று கடவுளரையும் குழந்தைகளாக்கி பால் புகட்டியதாகவும் புராணம் சொல்கிறது.

கொஞ்சமும் அறிவுக்கு ஒவ்வாத இந்த மூடநம்பிக்கைகளை, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கிற அயோக்கியத்தனங்களை எல்லாம் தோலுரித்துக்காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் 'மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி'யில் அனுசுயா படமும் எடுத்துச்செல்லப்பட்டது. ரஜினிகாந்த் குறிப்பிடுகிற அந்த துக்ளக் புத்தக அட்டையிலேயே, உடையணிந்த நிலையிலான ராமர் - சீதை படம்தான் உள்ளது. ஆக, கடவுளர்களே பெண்ணை நிர்வாணப்படுத்தி ரசித்த அட்டூழியத்தை வெளியே சொல்ல முடியவில்லை அவர்களுக்கு. அதனால்தான், அந்தப் பழியை அப்படியே பெரியார் மேல் சுமத்தி அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். இப்படி திட்டமிட்ட பொய்யை ஒருவர் சொல்கிறாரென்றால், இதன் பின்னணியில் அவர்களுக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

'ஊழலை ஒழிக்க வேண்டும்' என்று சொல்லிவருகிற ரஜினி, கருப்புப் பணம் பற்றிப் பேச மறுக்கிறார். 'அரசால் பறிமுதல் செய்யப்பட்ட துக்ளக் புத்தகம் மீண்டும் அச்சடிக்கப்பட்டு ப்ளாக்கில் விற்கப்பட்டது' என்றும் பெருமையாகப் பேசுகிறார். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு புத்தகம் மீண்டும் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டது என்பதே பொய்தான். 'இல்லையில்லை திரும்பவும் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டது' என்று சொன்னால், அதுவும் அச்சகச் சட்டத்துக்கு எதிரானதுதான்.

அதேபோல், 'எமர்ஜென்ஸியின்போது கறுப்பு அட்டை வெளியிட்டது துக்ளக்' என்று பேசுகிற ரஜினிகாந்த், பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போதும் கறுப்பு அட்டையோடு வெளிவந்த துக்ளக் பற்றிப் பேசவில்லை. எமர்ஜென்ஸியின்போது, துக்ளக் பத்திரிகையே முரசொலி அச்சகத்தில்தான் அச்சடிக்கப்பட்டது என்ற உண்மையையும் மாநில ஆளுங்கட்சியாக இருந்தநிலையிலும்கூட எமர்ஜென்ஸியைக் கடுமையாக தி.மு.க எதிர்த்ததையும் மிகச்சரியாக, பேசாமலே தவிர்த்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'நான் அரசியலிலிருந்து வெளியே வந்துவிட்டேன்; ஆனால், ரஜினிகாந்த் இப்போதுதான் அரசியலுக்குள் வருகிறார்' என்கிறார் வெங்கய்ய நாயுடு. தமிழக பா.ஜ.க-வினரும் தொடர்ந்து ரஜினிக்கு அழைப்பு விடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த நிலையில், 'நான் பா.ஜ.க ஆதரவாகத்தான் இருக்கிறேன்' என்று காட்டிக்கொள்வதற்காகவே, ரஜினிகாந்த் இப்படிப் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சும்கூட, அவராகவே பேசியதாகத் தெரியவில்லை. பா.ஜ.க எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டுக்கு மேடையில் வாயசைத்திருக்கிறார் ரஜினிகாந்த்!'' என்று கொதித்து முடித்தார் கொளத்தூர் மணி.

இதையடுத்து, ரஜினிகாந்த் பேச்சின் பின்னணியில், பா.ஜ.க உள்ளதாகச் சொல்லப்படுவது குறித்து தமிழக பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம்...

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி
`பெரியார் குறித்து அவதூறு; ரஜினி உரிய விலை கொடுப்பார்!’- கி.வீரமணி காட்டம்

''1974-ல் தமிழ்நாட்டுக்கு வந்த ரஜினிகாந்த்துக்கு, 71-ல் நடந்த விஷயம் பற்றி என்ன தெரியும் என்று கேள்வி கேட்பவர்கள், இதிகாச காலத்தில் நடைபெற்றவை குறித்து இப்போது விமர்சனம் செய்கிறார்களே... அது எப்படி? இவர்கள் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் அங்கு இருந்தார்களா?

'கையில் முரசொலி வைத்திருந்தால் அவர்கள் தி.மு.க-காரர்கள். அதுவே துக்ளக் பத்திரிகையை வைத்திருந்தால் அவர்கள் அறிவாளி' என்று முரசொலிக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். ஆனால், இவர்களாகவே தவறாக அர்த்தம் புரிந்துகொண்டு பேசினால், அதற்கு ரஜினிகாந்த் பொறுப்பாக மாட்டார்.

1971-ல் சேலத்தில் நடைபெற்ற அந்த ஊர்வலத்தை எதிர்த்துப் பங்கேற்ற எங்கள் கட்சியின் மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன், ''ஜனசங்கத்தினர் யாரும் செருப்பைத் தூக்கி எறியவில்லை" என்று தெளிவாகச் சொல்கிறார்.

அடுத்ததாக, ''தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்றவில்லை; ரஜினிகாந்த் வெறும் நடிகர்தான்''என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பவர்கள்தான், அதே பா.ஜ.க-ரஜினியைக் கண்டு அச்சமடைந்துகொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு ரொம்பவும் இயல்பாகத்தான், ரஜினி இந்தக் கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
ரஜினி பங்கேற்ற துக்ளக் விழாவில் என்னவெல்லாம் நடந்தது? - வெளிவராத விஷயங்களின் நேரடி  ரிப்போர்ட்!

மற்றபடி பா.ஜ.க சொல்லித்தான் அவர் இப்படியெல்லாம் பேசினார் என்று இவர்கள் சொல்வார்களேயானால், 'ரஜினிக்கு சுய அறிவு இல்லை' என்று சொல்ல வருகிறார்களா? ஒட்டு மொத்தத்தில் ரஜினியைக் கண்டும் பா.ஜ.க-வைக் கண்டும் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள் என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது'' என்றார்.

ரஜினிகாந்த் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து கட்டி அரசியல் களத்தைச் சூடாக்கி வரும் நிலையில், ‘‘பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது!’’ என்று ஒரு விளக்கமும் தந்து கொதிநிலையை ஏற்றியிருக்கிறார் ரஜினி.

அரசியலுக்கு ஆயத்தமாகி விட்டாரோ ரஜினி?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு