Published:Updated:

`மக்களின் நீண்டநாள் கோரிக்கை; கோவை, ஈரோட்டையும் இரண்டாகப் பிரியுங்கள்!’ -கொங்கு ஈஸ்வரன்

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை எல்லாம் இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்குவதன்மூலம் அரசு சார்ந்த பணிகளை மக்களுக்கு தமிழக அரசு விரைவாக வழங்க முடியும்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்
ஈ.ஆர்.ஈஸ்வரன் ( ரமேஷ் கந்தசாமி )

சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மற்றும் செங்கல்பட்டை தனி மாவட்டங்களாக அறிவித்திருக்கிறார். இந்த வரிசையில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களையும் இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டையும் தனி மாவட்டகளாக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரிய மாவட்டங்களான ஈரோடு மற்றும் கோயம்புத்தூரை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்ற அந்த மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தமிழக அரசும், தமிழக முதலமைச்சர் அவர்களும் செவிசாய்க்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.

நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை எல்லாம் இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்குவதன் மூலம், அரசு சார்ந்த பணிகளை மக்களுக்கு தமிழக அரசு விரைவாக வழங்க முடியும். கடைநிலையில் உள்ள கிராமத்திற்கும் அரசின் திட்டங்களைக் கொண்டுசேர்க்க வேண்டுமென்றாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் எளிதாக வந்துசெல்ல வேண்டுமென்றாலும் பெரிய மாவட்டங்களை இரண்டாகப் பிரிப்பது மட்டும்தான் ஒரே தீர்வு. பெரிய மாவட்டங்களாக இருப்பதால், பல்வேறு மக்கள் பிரச்னைகள் ஆண்டுக்கணக்கில் தீர்வு எட்டப்படாமல் கிடப்பில் போடப்படுகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பொள்ளாச்சியைத் தலைமையிடமாகவும், ஈரோடு மாவட்டத்துக்கு கோபிசெட்டிபாளையத்தைத் தலைமையிடமாகவும் கொண்டு புதிய மாவட்டங்களை அறிவிக்க முன்வர வேண்டும்.
ஈ.ஆர்.ஈஸ்வரன்

கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துவருகிறோம். இவ்விரு மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகள் இருக்கின்றன. மற்ற மாவட்டங்களையும் இரண்டாகப் பிரித்து அறிவிப்பை வெளியிடும் தமிழக முதலமைச்சர், அதிக மக்கள்தொகையை கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை பொள்ளாச்சியைத் தலைமையிடமாகவும், ஈரோடு மாவட்டத்தை கோபிசெட்டிபாளையத்தைத் தலைமையிடமாகவும் கொண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்க முன்வர வேண்டும். கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் இதனை வலியுறுத்த வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.