Published:Updated:

அக்டோபர் 31 முதல் யூனியன் பிரதேசம்... காஷ்மீரில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு!

ஆ.பழனியப்பன்

ஊரடங்கு உத்தரவு உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீரில், இஸ்லாமிய மக்கள் மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்துவதற்கு வசதியாக வெள்ளிக்கிழமையான இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

காஷ்மீரில் ராணுவம்
காஷ்மீரில் ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய பா.ஜ.க அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்போன் மற்றும் இணையதளச் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

அஜித் தோவல்
அஜித் தோவல்

பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த 4-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வீடுகளுக்குள் மக்கள் முடங்கிக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்லாமியர்கள் மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்துவதற்கு வசதியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்று நிர்வாகம் முடிவுசெய்தது. இதனால், பல இடங்களில் வீடுகளைவிட்டு வெளியே வந்த மக்கள் மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர்
காஷ்மீர்

பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால், அசம்பாவிதங்கள் நிகழவில்லை என்றும், வடக்கு காஷ்மீரில் உள்ள சோபோர் நகரில் மட்டும் லேசான கல்லெறி சம்பவங்கள் நிகழ்ந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரிகள் யாரும் துன்புறுத்தக்கூடாது என்றும், அவர்கள் மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்த ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக வரும் அக்டோபர் 31 முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது