Published:Updated:

`முன்பெல்லாம் யார் வளர்ந்தாலும் பெருமையாகப் பார்ப்பார்கள்!'- தி.மு.க-வைச் சாடும் கே.பி.ஆர்

ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்னைக் கட்சியை விட்டு நீக்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். காரணம் அது அவருடைய கட்சி. அவர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம், சேர்க்கலாம்.

`முன்பெல்லாம் யார் வளர்ந்தாலும் பெருமையாகப் பார்ப்பார்கள்!'- தி.மு.க-வைச் சாடும் கே.பி.ஆர்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்னைக் கட்சியை விட்டு நீக்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். காரணம் அது அவருடைய கட்சி. அவர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம், சேர்க்கலாம்.

Published:Updated:
ஸ்டாலின்

``எதிர்க்கட்சித் தலைவர் கொரோனாவை வைத்து அரசியல் செய்யலாமா என்று நினைக்கிறார். இதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் வேலையா? அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் காலத்து தி.மு.க தற்போது பிரஷாந்த் கிஷோரின் கையில் சென்றிருக்கிறது என்றால் தி.மு.க-வின் நிலையைத் தெரிந்துகொள்ளுங்கள்" எனக் கொந்தளிக்கிறார் தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட கே.பி.ராமலிங்கம்.

கே.பி ராமலிங்கம்
கே.பி ராமலிங்கம்

`கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்' என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார் தி.மு.க முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம். அந்த ஒற்றை அறிக்கை, தி.மு.க தலைமைக்கும் அவருக்கும் இடையே விரிசலை உண்டாக்கியது.

இதையடுத்து, தி.மு.க விவசாய அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து, தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டார். அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கே.பி.ராமலிங்கத்திடம் பேசினோம், ”தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்னைக் கட்சியை விட்டு நீக்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். காரணம் அது அவருடைய கட்சி. அவர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம், சேர்க்கலாம். அவருக்கு அத்தனை தகுதிகளும் இருக்கிறது. நான் கலைஞர், எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை. மு.க.ஸ்டாலின் சமீபகாலமாக பொதுநோக்குச் சிந்தனை இல்லாமல் சுயநலப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார். எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். ஆகவே, எதையும் குதர்க்கமாகப் பார்க்கிறார்.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் கட்சியில் மற்றவர்களுக்கும் பணிபுரிய வாய்ப்பு கொடுத்தார்கள். யார் கட்சியில் வளர்ந்தாலும் பெருமையாகக் கருதுவார்கள். ஆனால் இப்போதுள்ள தலைமை, அப்படி எடுத்துக்கொள்வதில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இவர் கூட்டுவதாகச் சொன்ன அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ன ஆனது? பிறகு தோழமை கட்சிகள் கூட்டம் என்றார். பிறகு கம்ப்யூட்டர்களைப் பார்த்துப் பேசுவோம் என்றார். ஆக, அனைத்துக் கட்சி கூட்டம் தேவை இல்லை என நான் சொன்னதுதான் இப்போது நிரூபணமாகியிருக்கிறதா?

கொரோனா பாதித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். இது நடக்கக் கூடியதா? நான் காங்கிரஸாரிடமும் கேட்கிறேன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி கொடுக்கமுடியுமா? நீங்கள் ஆளும் மாநிலங்களில் உங்களால் வழங்கமுடியுமா?

தி.மு.க ஐந்து முறை அதிகாரத்திலிருந்த கட்சி, அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டுமுறை எதிர்க்கட்சி தலைவர் என்ற வரிசையில் அமர்ந்த கட்சி, ஒருவேளை வரும் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அக்கட்சி ஊழலற்ற ஆட்சியை வழங்க வாய்ப்பு இருக்கிறதா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று நான் சொல்வேன்.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கட்சிகளுக்குக் கொள்கை தானம் செய்த அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் காலத்து தி.மு.க தற்போது பிரஷாந்த் கிஷோர் கையில் சென்றுள்ளது. தி.மு.க என்ற பெரிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு அவர் கைக்கு வந்திருக்கிறது. இனியேனும் அந்தப் பதவிக்கு ஏற்ப அவர் நடந்துகொள்ள வேண்டும்" என்றார்.