Published:Updated:

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுப்பதாக சீமான் மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு - பின்னணி அலசல்!

“விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் அளிக்கிற வகையில் சீமான் செயல்படுகிறார். எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வைக்கும் விமர்சனத்தின் பின்னணி என்ன?

“விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியையும் சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணனுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாகப் பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் அளிக்கிற முறையிலும் செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சீமானின் வன்முறைப் பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான, தீவிரவாதப் பாதைக்குச் செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இந்தப் போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தோம்.

``ஆமைக்கறி சாப்பிட்டால், சீமான் மாதிரி மூளை வளரும்" - தன் மீதான விமர்சனத்துக்கு  அண்ணாமலை காட்டம்!

நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாக்கியராசன் சே-விடம் கே.எஸ்.அழகிரியின் கூறியிருப்பது குறித்து கேட்டோம். "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 30 லட்சம் வாக்குகளை வாங்கியிருப்பதை முன்வைத்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துவிட்டோம் எனப் பேசினோம். அப்போது கே.எஸ்.அழகிரி ‘இல்லை... இல்லை... நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி’ எனப் பேசினார். அறிக்கையும் வெளியிட்டார். சத்திய மூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ‘சீமான் இங்கே வளர்ந்து வருகிறார். அவரை எதிர்கொள்ளும் வகையிலும் நமது சட்டமன்றத் தலைவர் இருக்க வேண்டும்’ எனப் பேசியிருக்கிறார். அது செய்தித்தாள்களிலும் வந்திருக்கிறது. நாம் தமிழரின் வளர்ச்சி கே.எஸ்.அழகிரிக்கு அச்சுறுத்தலைத் தருகிறது. அதனால் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இப்போது வைத்துள்ள குற்றச்சாட்டு அதன் உச்சம். காங்கிரஸ் எங்கள் இனத்தின் எதிரி. எங்களின் நோக்கமே தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளே இருக்கக் கூடாது என்பதுதான். அதுமட்டுமல்ல மற்ற கட்சியினர் காங்கிரஸ் கட்சியை அணுகுவதுபோல நாங்கள் அணுகுவதில்லை என்ற கோபமும் அவர்களுக்கு இருக்கிறது.

பாக்கியராசன் சே. நா.த.க செய்தித்தொடர்பாளர்
பாக்கியராசன் சே. நா.த.க செய்தித்தொடர்பாளர்

சோனியா, ராகுல் காந்தியைத் தவறாகப் பேசிவிட்டோம் என்கிறார். நாங்கள் யாரையும் தவறாகப் பேசி அரசியல் செய்வதில்லை. அது எங்கள் நோக்கமும் இல்லை. எங்கள் இனம் கொல்லப்படுவதற்கு உதவியாக இருந்த காங்கிரஸ் கட்சிமீது எங்களுக்கு கோபம் இருக்கிறது. அவர்களின் அரசியலை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்படுகிறோம். இதெல்லாம்தான் நாம் தமிழர் மீது கே.எஸ்.அழகிரி விமர்சனம் வைக்கக் காரணம்” என்றவர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அக்டோபர் 10ம் தேதி மத்திய அரசின் கனிம வளக் கொள்கைக்கு எதிராகக் கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த உள்ளோம். நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மற்ற பகுதிகளைவிட நாம் தமிழர் கட்சிக்குக் கன்னியாகுமரியில் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்குக் கிடைத்த ஒரே ஒரு ஒன்றிய கவுன்சிலரும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இப்படிக் கன்னியாகுமரியில் காங்கிரஸுக்கு இருக்கும் அடிப்படையை நாம் தமிழர் கட்சி உடைக்கிறது என்ற கோபமும் கே.எஸ்.அழகிரிக்கு இருக்கிறது. திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்துகொண்டு, தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாகத் தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், உண்மை அதுவல்ல, நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்பதை அவர்களுக்கு உணர்த்தியதால் நாம் தமிழர் மீது மிகப்பெரிய வன்மத்தையும் அவதூறுகளையும் பரப்புகிறார்கள்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி
சோனியா காந்தி, ராகுல் காந்தி

30 லட்சம் வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி ‘பயங்கரவாத அமைப்பாக மாறும்’ என்று சொல்வதெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. ஆதாரமில்லாமல் பேசுவதெல்லாம் பழுத்த அரசியல் தலைவருக்கு அழகில்லை. கே.எஸ்.அழகிரி தன் கருத்துக்காகப் பொதுத் தளத்தில் மன்னிப்புக் கேட்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்க உள்ளோம்” என பல்வேறு காரணங்களைச் சொல்லி விளக்கினார்.

100 நாள் வேலைத்திட்டத்தின் பலனை பார்க்க வாருங்கள்: சீமான், அண்ணாமலைக்கு மாணிக்கம் தாகூர் அழைப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் சிவ ராஜசேகரிடம் நாம் தமிழரின் விமர்சனங்கள் குறித்துக் கேட்டோம் . “தேர்தலில் பெரும் வாக்குகளை வைத்துக்கொண்டு ஒரு கட்சி வளர்ச்சியடைந்துவிட்டது என்று சொல்லிக்கொள்ள முடியாது. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றபோதும் அதற்கு முன்பும் தே.மு.தி.க., அதிக வாக்குகளை பெற்றது. இப்போது அதன் நிலை என்ன?தற்போது மக்கள் நீதி மய்யமும் கூட குறிப்பிட்ட சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களெல்லாம் வளர்ந்த கட்சிகள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? வாக்கு சதவிகிதம் என்பது ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் மாறக் கூடியது. எனவே, வளர்ந்துவிட்டோம் எனச் சீமான் சொல்லிக் கொள்வது வெற்று வாதம், மாயை. நாம் தமிழரின் சித்தாந்தம் முழுமையாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார், உண்மைக்குப் புறம்பாக, பொய்யான தகவல்களைப் பரப்புகிறார் என்பது சீமான் மீது அனைவரும் வைக்கும் குற்றச்சாட்டு. சீமானின் பேச்சைக் கேட்டுத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தவறான வழியில் சென்றுவிடக் கூடாது என்ற அக்கறையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருக்கிறார்.

வழக்கறிஞர் சிவ ராஜசேகர்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
வழக்கறிஞர் சிவ ராஜசேகர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

தமிழ்நாட்டு அரசியலை இலங்கை அரசியலோடு வைத்துப் பேசுவதை ஏற்க முடியாது. உண்மையில் மக்களுக்கு எங்கள்மீது கோபம் இருக்குமானால் போர் உச்சத்தில் இருக்கும்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. அப்போதே இவர்களின் பொய்ப்பிரசாரம் எடுபடவில்லை.” என விளக்கினார்.

எதிர்க்கட்சியினர்கூட இவ்வளவு குடைச்சல் கொடுப்பதில்லை! - கே.எஸ்.அழகிரி ‘குமுறல்’ பேட்டி...

மேலும், “தமிழர்களுக்கு நாங்கள் மட்டுமே அத்தாரிட்டி எனப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீமான் உண்மையில் நம்பத்தக்க தலைவர் இல்லை. தன்னுடைய கருத்தில் தீர்க்கமாக இருந்ததில்லை. காலத்திற்கேற்ப தன்னுடைய செயல்பாட்டை நிலையில்லாமல் மாற்றிக் கொண்டிருப்பவர். பொழுது விடிந்தால் ஒரு பேச்சுப் பேசும் சீமானின் கருத்து, ஒரு சித்தாந்தமாக வளர்ச்சியடைவது நடக்கவே நடக்காது. ஒவ்வொரு கட்சிமீதும் மாற்றுக் கட்சியினர் விமர்சனங்களை வைப்பது அரசியலில் எப்போதும் இருந்து வரும் மரபு. எங்களைப் பற்றி எவ்வளவு மோசமான அவதூறுகளை நாம் தமிழர் கட்சியினர் பரப்பியிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஓர் அறிக்கைக்கே இவ்வளவு கொதிப்பதும், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்பதும், காங்கிரஸ் தலைவர்களுக்கு போன் செய்து தரக்குறைவாகப் பேசுவதும், ஊடகங்களில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலுமிருந்தும் அவர்களின் அரசியல் நாகரீகம் என்ன என்பது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கருத்து ரீதியிலான விமர்சனங்களை எதிர்கொள்ளும் சூழலில் சீமானும் வளரவில்லை அவரது கட்சியினரும் வளரவில்லை.சித்தாந்தத் தெளிவு இருப்பவர்கள் கோபப்பட்டு, எதிர்க்கருத்து தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் இறங்க மாட்டார்கள்.

சீமான்
சீமான்

காங்கிரஸ் கட்சி எப்போதும் அகிம்சை வழியில் செல்லும் கட்சி. இந்தியாவில் எல்லோருக்குமான கட்சி. இனத்துக்கோ, சாதிக்கோ, மொழிக்கோ உரியக் கட்சியில்லை. கும்பல், தனித் தீவிரவாதம் பேசுபவர்கள் அவர்களின் நிலையையும் காங்கிரஸின் வரலாற்றையும் தெரிந்துகொண்டு பேசுவதுதான் நல்லது. சட்ட ரீதியில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்” என விமர்சனங்களுக்கு விடையளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு