Published:Updated:

`அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே, மகாபாரதத்தைத் திரும்பவும் படியுங்கள்!' - கே.எஸ்.அழகிரி

ரஜினி - அமித் ஷா
ரஜினி - அமித் ஷா

அநீதியைக் கண்டு சிலிர்த்து எழுகிற `நமது கதாநாயகன் பாட்சா' அவர்கள் காஷ்மீரத்துக்கு ஒரு நீதி, பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்கிற அமித் ஷாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறரா?

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ``மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இங்கு வந்திருக்கிறார். மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அதைச் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை மிக அற்புதமாக இருந்தது. இப்போது அமித் ஷா யாரென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ணன் போன்றவர்கள்.

ரஜினி - அமித் ஷா
ரஜினி - அமித் ஷா

இதில் யார் கிருஷ்ணன்... யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்' எனச் சிலாகித்தார். ரஜினியின் பேச்சு அரசியல்ரீதியான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன், கனிமொழி ஆகியோர் ரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நீண்ட கடிதத்தில், ``காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை மிக நல்லமுறையில் அமித் ஷா செய்திருக்கிறார் என ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

ரஜினியிடமிருந்து இதைப் போன்ற கருத்தை எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்தக் கருத்தை படித்த பிறகு நான் மிகவும் சோர்வடைந்தேன். ரஜினிகாந்த் இயல்பிலேயே மிகவும் நல்ல மனிதர். யாருக்கும் தீங்கு இழைக்காதவர். ஆன்மிகத்தின் மீது நாட்டம் கொண்டவர். எனவே, அவர் அப்படிச் சொல்லியிருப்பது ஆச்சர்யம் அளித்துள்ளது. ஆன்மிக உணர்வு என்பது மத உணர்வு என ரஜினி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாரோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி
ரஜினி

ஆன்மிகம் என்பது மதம் சார்ந்தது அல்ல. நமக்கு மேற்பட்ட ஒரு சக்தியின் மீது நம்பிக்கையும், அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கமும், நேர்மையும், சமாதானமும், மகிழ்ச்சியும் உடைய ஒரு வாழ்க்கையை மேற்கொள்வதும் - யாருக்கும் தீங்கு இழைக்காத, எல்லோரையும் நேசிக்கக் கூடியதுமான ஒரு தத்துவம்தான் ஆன்மிகம். மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கடவுளையும், அதற்கு ஒரு பெயரையும், அதற்கென்று ஒருசில சடங்குகளையும், ஒருசில விதிமுறைகளையும், அந்த விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களைப் பிற மதத்தவர் என்றும் அல்லது மதவிரோதிகள் என்றும் முத்திரை குத்தி, பகைமை பாராட்டுவது மத உணர்வாகும்.

`தயங்கினால் விளைவுகளைச் சந்திப்பார்கள்!' - தமிழக பா.ஜ.க-வுக்குச் சுட்டிக்காட்டிய அமித் ஷா

இன்றைக்கு அமித்ஷாவும், மோடியும் காஷ்மீருக்கு இருந்த சில சிறப்புச் சலுகைகளை நீக்கி ஒரு மாநிலத்தை சுத்தம் செய்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இதைப் போன்ற சிறப்புச் சலுகைகள் இமாசலப்பிரதேசத்திலும், வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களிலும், கர்நாடகத்தில் உள்ள கூர்க் பகுதியிலும் நடைமுறையில் உள்ளது. எப்படி காஷ்மீரில் இல்லாதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதோ, அதுபோல, மேற்கண்ட இந்த மாநிலங்களிலும் அந்த மாநிலத்தை சாராதவர்கள் நிலம் வாங்க முடியாது. காஷ்மீரத்தில் சிறப்புச் சலுகைகளுக்கான 370-வது அரசியல் சட்டப்பிரிவை நீக்கிய மோடி அரசாங்கம் மேற்கண்ட மாநிலங்களில் இதே சிறப்புச் சலுகைகளை நீக்காதது ஏன்?

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

காரணம், காஷ்மீரில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்பதுதானே? அநீதியைக் கண்டு சிலிர்த்து எழுகிற `நமது கதாநாயகன் பாட்சா' அவர்கள் காஷ்மீரத்துக்கு ஒரு நீதி, பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்கிற அமித்ஷாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறரா? மோடியையும், அமித் ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜுனர் என்றும் ரஜினி சொல்கிறார். ஆனால், இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் கூறுகிறார். நல்லவேளை ரஜினிக்கு உள்ளுணர்வு இங்கு வேலை செய்திருக்கிறது. ஏனென்றால், மோடியும், அமித் ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள், இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல. பலகோடி மக்களின் உரிமைகளைப் பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும். அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே, தயவுசெய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு