Published:Updated:

`கே.எஸ்.அழகிரி, இரண்டு தேர்தல்களைப் பார்த்துவிட்டார், எனவே..!' - என்ன சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்?

''தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவராக யாரும் நிரந்தரமாக இருந்தது இல்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியில் தலைவர்கள் மாறிக்கொண்டேதானே இருக்கிறார்கள்'' என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம்.

தமிழக காங்கிரஸ் கட்சியில், தன் மனதுக்குச் சரியெனத் தோன்றும் விஷயங்களை எந்தவித ஒளிவுமறைவுமின்றி, வெளிப்படையாகப் பேசக்கூடியவர் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான கார்த்தி சிதம்பரம்!

கார் வரி விலக்கு தொடர்பான வழக்கில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த கார்த்தி சிதம்பரம், ''மனுவில் என்ன கேட்கப்பட்டுள்ளது, அது சட்டப்படி சரிதானா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, மனுதாரர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. மனுதாரர் என்பவர் நடிகர், தொழிலதிபர், மருத்துவர் என யாராகவும் இருக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே! எனவே நடிகர் விஜய்க்கு வரி விலக்கு கேட்க முழு உரிமை உண்டு'' என்று துணிச்சலாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த வரிசையில், 'தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக எனக்கும் ஆசைதான்!' என அண்மையில் அதிரடி கருத்தைத் தெரிவித்திருக்கும் கார்த்தி சிதம்பரத்திடம் நிகழ்கால அரசியல்கள் குறித்துப் பேசினேன்...

சசிகலா
சசிகலா

''சசிகலா தலைமையின் கீழ் அ.தி.மு.க வரும் என எப்படிச் சொல்கிறீர்கள்?''

''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இதுநாள்வரையிலும் ஒற்றைத் தலைமையின் கீழ்தான் அ.தி.மு.க பயணித்துவருகிறது. இரட்டைத் தலைமை அவர்களுக்குப் பழக்கமில்லை. இந்தநிலையில், கட்சியில் நீண்ட அனுபவம்கொண்ட சசிகலாவுக்கு அ.தி.மு.க-வின் அத்தனை நிர்வாகிகளையும் நன்கு தெரியும் என்பதால், நான் அப்படியொரு கருத்தைச் சொன்னேன். காலமும் அப்படித்தானே போய்க்கொண்டிருக்கிறது.''

''பா.ஜ.க மீதான பயம் இருப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிவிடுங்கள் என எச்சரிக்கிற ராகுல் காந்தியே, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க பயப்படுகிறார்தானே?''

''அப்படியெல்லாம் இல்லை. ஏற்கெனவே கட்சியின் தலைவர் பதவியில் இருந்தவர், தேர்தல் தோல்வியை தார்மிகமாக ஏற்றுக்கொண்டுதான் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் ராகுல் காந்தி.

சோனியா காந்தி, இப்போது கட்சியின் தலைவராக இருக்கிறார். 'ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வர வேண்டும்' என கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி என்ன விரும்புகிறார் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை!''

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

''பெகாசஸ் உளவு செயலி குறித்து மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புகிற காங்கிரஸ் கட்சியின் முந்தைய ஆட்சியிலும் இது போன்ற ஒட்டுக்கேட்பு புகார்கள் வந்துள்ளனதானே?''

''அப்படியென்றால், காங்கிரஸ் கட்சிக்காரன் எந்தக் கேள்வியுமே கேட்கக் கூடாதா? 'கோத்ராவில் ஏன் கலவரம் நடந்தது...' எனக் கேட்டால், 'நீங்கள்தான் எமர்ஜென்ஸியைக் கொண்டுவந்தீர்கள்' என்பது, 'விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள்' என்று சொன்னால், 'உங்க ஆட்சியிலும்தான் விலைவாசி உயர்ந்தது' என்றெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால்... எந்தக் கட்சிதான் கேள்வி எழுப்புவது? ஆட்சிப் பொறுப்புக்கே வராத கட்சிதான் கேள்வி கேட்க முடியும்.

புதுக்கோட்டை: தொன்மை பேசும் பொற்பனைக்கோட்டை - ஜிபிஆர் கருவி மூலம் அகழாய்வு இடங்கள் தேர்வு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக ஆட்சிப் பொறுப்புக்கு எந்தக் கட்சி வந்தாலும், ஆங்காங்கே சில சம்பவங்கள் நிகழத்தான் செய்யும். சட்டப்படி ஒரு அரசாங்கமே தொலைபேசி வழியே ஒட்டுக்கேட்டிருக்கலாம்தான். ஆனால், சாஃப்ட் வேர் வழியே ஒரு போனை அப்படியே க்ளோனிங் செய்வது மாதிரியான இது போன்ற சம்பவம் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை.

செல்போன் பேச்சுகளை மட்டுமல்லாமல், போட்டோ, மெயில், மெசேஜ் என ஒருவரது அத்தனை அந்தரங்கங்களையுமே ஓர் அரசு வேவு பார்த்திருக்கிறது என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அமெரிக்காவின் 'வாட்டர்கேட் ஊழல்' சம்பவத்தில், எதிர்க்கட்சி அலுவலகத்தை உடைத்தெறிந்து ஒருவன் உள்ளே போய் ஆவணங்களைத் திருடிய குற்றத்துக்காக ஜனாதிபதி நிக்சன் ராஜினாமாவே செய்ய வேண்டியதாயிற்று.''

பெகாசஸ் செயலி
பெகாசஸ் செயலி

''மத்திய பா.ஜ.க அரசுதான், 'பெகாசஸ் சாஃப்ட்வேரை அரசு பயன்படுத்தவில்லை' என்று உறுதியாகச் சொல்லிவிட்டதே?''

''எந்த அரசாங்கம்தான் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது? பண மதிப்பிழப்பு நல்ல திட்டம், நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்றெல்லாம்கூடத்தான் இந்த அரசு சொல்கிறது. இதோ... ' கொரோனா பாதிப்பில், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர்கூட இறக்கவில்லை' என்றுகூட நாடாளுமன்றத்திலேயே இன்று சொல்லிவிட்டார்கள். 'காக்கா நிறம் வெள்ளை' என்று மட்டும்தான் இன்னும் இவர்கள் சொல்லவில்லை!''

நெல்லை: "தாமிரபரணி நதிநீர் இணைப்புத் திட்டம்  முடக்கப்படுகிறது" - முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை புகார்

''எல்லோரும் 'ஒன்றிய அரசு' என்றே அழைக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், அப்படி அழைப்பதால், எந்தப் பலனும் இல்லை என அன்புமணி ராமதாஸ் சொல்கிறாரே?''

''ஒன்றிய அரசு என்றால் எந்தப் பலனும் இல்லை என்றால், 'சென்ட்ரல் கவர்ன்மென்ட்' என்று சொன்னால் மட்டும் பலன் இருக்கிறதா என்ன? 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தை வெறுமனே எழுத்தும் உச்சரிப்பும் மட்டுமே அல்ல... அதை நாம் உணர்வுபூர்வமாகச் சொல்லிவருகிறோம்.

'ஒரே மொழி', 'ஒரே தேசம்', 'ஒரே மதம்' என எல்லாவற்றையும் பா.ஜ.க அரசு, ஒற்றைப்படுத்திக்கொண்டே வரும் சூழலில், 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை நாம் உணர்வுபூர்வமாக உச்சரித்துக்கொண்டேயிருப்பது பொருத்தமானது!''

`கே.எஸ்.அழகிரி, இரண்டு தேர்தல்களைப் பார்த்துவிட்டார், எனவே..!' - என்ன சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்?

''தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்புக்கு ஆசைப்படுவதாகச் சொல்கிறீர்களே... அப்படியென்றால், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடுகள்..?''

''இல்லையில்லை... நான் யாரையும் குறை சொல்லவில்லை... தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவராக யாரும் நிரந்தரமாக இருந்தது இல்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியில் தலைவர்கள் மாறிக்கொண்டேதானே இருக்கிறார்கள்...

அந்தவகையில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களையும் பார்த்துவிட்டவராக தற்போதைய தலைவர் இருக்கிறார். எனவே அடுத்த தலைவருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்பானதுதானே..!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு