Published:Updated:

`பங்குத் தொகை 12,000 கோடியைக் கேட்பாரா எடப்பாடி?!' - கேள்வியெழுப்பும் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சிறப்பு நிதிதான் பெறவில்லை என்றால், மாநில அரசுக்குச் சேர வேண்டிய நிதியையே இவர்கள் பெறவில்லை. மத்திய அரசு மாநில அரசுக்குத் தர வேண்டிய பங்குத்தொகை மட்டுமே 12,000 கோடி இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் கன்னியாகுமரியில் இரண்டு நாள் பேச்சாளர் பயிற்சி முகாம் நடந்தது. அதன் நிறைவு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது அவர், ``எடப்பாடி அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியை சிறப்பான ஆட்சி எனச் சொல்ல முடியாது. காலம் வலிமையானது. இரவும் பகலும் வந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் எடப்பாடி ஆட்சியில் நான்கு ஆண்டுகள் சென்றுள்ளன. இந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் வளர்ச்சியைப் பொறுத்தவரை தோல்விதான்.

வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானம் எடுத்து மத்திய அரசுக்கு அனுப்பினர்கள். ஆனால், அதில் வெற்றிபெற முடியவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்திருக்க முடியும். அதுபோல சிறப்பு நிதி எதையும் மாநிலத்துக்குப் பெற முடியவில்லை. மன்மோகன்சிங் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு 6,000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கினார். அதுபோன்று இவர்களும் நிதி பெற்றிருக்க வேண்டும், ஆனால் பெறவில்லை.

முகாமில் பேசுகிறார் கே.எஸ்.அழகிரி
முகாமில் பேசுகிறார் கே.எஸ்.அழகிரி

சிறப்பு நிதிதான் பெறவில்லை என்றால், மாநில அரசுக்கு சேர வேண்டிய நிதியையே இவர்கள் பெறவில்லை. மத்திய அரசு மாநில அரசுக்குத் தர வேண்டிய பங்குத்தொகை மட்டுமே 12,000 கோடி இருக்கிறது. அந்தப் பணத்தை இதுவரை பெறமுடியவில்லை. சுய மரியாதை என்று பார்த்தால் அதுவும் இந்த அரசுக்கு இல்லை. சி.பி.ஐ சோதனைக்கு மாநில முதல்வரின் அனுமதி வேண்டும். தலைமைச் செயலகத்தில் முதல்வர் அமர்ந்திருக்கும்போதே அருகில் உள்ள தலைமைச் செயலர் அறையில் சி.பி.ஐ சோதனை நடத்துகிறது.

மத்திய அரசைக் கண்டு இவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள். நம் திட்டங்கள் எல்லாமே அரைகுறையாக உள்ளன. இது சிறந்த நல்லாட்சி என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடக்கிறது. டி.என்.பி.எஸ்.சி-யில் ஆள் மாறாட்டம். சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது. இதில் என்ன மாற்றம் செய்திருக்கிறார்கள். சி.ஏ.ஏ-க்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். ஆனால், இலங்கையில் இருந்து வருகிறவர்களின் குடியுரிமையைப் பார்க்கவில்லை.

அ.தி.மு.க 11, பா.ம.க ஒரு ஓட்டும் போட்டதால்தான் குடியுரிமைச் சட்டம் நிறைவேறியது. எந்த கண்டிஷனும் இல்லாமல் மத்திய அரசுக்கு தலைவணங்குகின்ற ஒரே கட்சி அ.தி.மு.க தான். எனவே, இவர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள் எனச் சொல்ல முடியாது. அரசியல் காரணங்களுக்காக இதைச் சொல்லவில்லை. சாதாரண குடிமகனாகச் சொல்கிறேன். அவர்கள் செய்தது வெற்றிகரமான அரசியல் அல்ல. மாநிலத்துக்கு உகந்த அரசியலும் அல்ல.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

கடன் சுமை, அரசின் செயலற்றதன்மையால் வந்தது. நிதிச்சுமை 25,000 கோடியாக இருக்கிறது. இவ்வளவு கோடிக்கு பற்றாக்குறை இருக்கும்போது புதிய திட்டங்களை ஏன் அறிவிக்கிறீர்கள். அதற்கு பணம் இல்லாதால் அந்தத் திட்டங்கள் அறிவிப்போடு சரி, நிறைவேறாது. சிறந்த வரவு செலவு திட்டம் என்றால், இவ்வளவு நிதி பற்றாக்குறையை சரிசெய்ய வரியின் மூலம் இவ்வளவு நிதி கொண்டு வருவோம், மத்திய அரசு மூலம் இவ்வளவு கொண்டு வருவோம், அந்நிய மூலதனம் மூலம் கொண்டுவருவோம் அல்லது சொந்த மாநிலத்திலேயே மூலதனத்தைப் பெருக்குவோம் என அறிவிப்பதுதான். ஆனால், அதுபோன்ற எந்தத் திட்டமும் மாநில அரசிடம் கிடையாது. 25,000 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையை வைத்துக்கொண்டு சிறந்த நிர்வாகத்தைத் தருகிறார்கள் எனச் சொல்வதே தவறு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு