Published:Updated:

``ட்ரம்ப் சொன்னதை மோடி மறுத்திருந்தால், பெருமை.. ஆனால்..!” - கே.எஸ் அழகிரி

புதுவை மக்கள் பிரெஞ்ச் கலாசார வழியில் வந்தவர்கள். இதனால் படிப்படியாகதான் அமல்படுத்த முடியும் என்றார் புதுவை முதல்வர் நாராயணசாமி

நாராயணசாமி
நாராயணசாமி

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நேற்று மாலை முதல் இரவு வரை நடந்தது. இதில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``இந்திய நாட்டின் ஒற்றுமை, மதச்சார்பின்மை, சத்தியாகிரகம், அகிம்சை போன்றவை இப்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஒரே நாடு ஒரே மொழி, என்கிற வகையில் மத்திய மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு எதிர்க்கட்சியைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது.

காங்கிரஸ் பாதயாத்திரை
காங்கிரஸ் பாதயாத்திரை

மதுவினால் ஏற்படும் கொடுமைகள் எங்களுக்குத் தெரியும். புதுச்சேரியின் நிலை வேறு, மற்ற மாநிலங்களின் நிலை வேறு. புதுவை மக்கள் பிரெஞ்ச் கலாசார வழியில் வந்தவர்கள். இதனால் படிப்படியாகதான் அமல்படுத்த முடியும்" என்றார்.

பேரணியில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் தந்தை மோடி எனக் கூறியிருக்கிறார். அவருக்கு இந்திய சரித்திரமும் தெரியாது, உலக சரித்திரமோ அல்லது அமெரிக்க சரித்திரமோ தெரியாது. இந்த விவகாரத்தில் மோடி, நான் தேசப்பிதா இல்லை காந்திதான் எனக் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அவருக்குப் பெருமை கிடைத்திருக்கும்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஒரு குடும்பத்துக்கு ஒரு தந்தைதான் இருக்க வேண்டும். அதுபோல் ஒரு நாட்டுக்கு ஒரு தந்தைதான் இருக்க முடியும். இதை மனதில் வைத்து ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினர் செயல்பட வேண்டும்.

வங்காளத்தில் இருக்கக் கூடிய மக்களின் கணக்கெடுப்பை எடுத்து வருகிறோம். வெளியிலிருந்து வந்தவர்கள் துரத்தப்படுவார்கள் என அமித் ஷா கூறுகிறார். 70 ஆண்டுகள் ஒரு தேசத்தில் வாழ்ந்த பிறகு அவர்களது அடையாளத்தைப் பார்க்க வேண்டுமா. இப்படிக் கூறுவது ஒரு சர்வாதிகாரம். நம்மிடம் வருபவர்களை நாம் வரவேற்பதுதான் நமது கலாசாரம்" என்றார்.