அரசியல்
Published:Updated:

ஒன் பை டூ: இன்னும் பல பத்தாண்டுகள் பா.ஜ.க வலுவாக இருக்குமா?

ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மாணிக்கம் தாகூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மாணிக்கம் தாகூர்

மக்கள் பா.ஜ.க-வைத் தூக்கி எறிந்துவிடுவார்கள், அங்கே வந்து உட்கார்ந்துகொள்ளலாம்’ என்கிற எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது

ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர்

“அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சொல்லியிருக்கும் இந்தக் கருத்து மிகச்சரியானது. யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நடைமுறை யதார்த்தம் அதுதான். அவர்களின் சித்தாந்தம்மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றனதான்... ஆனால், பா.ஜ.க கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறது. பிரதமராக இருந்தபோதும் மோடிக்கு, அடுத்த தேர்தல் எந்த மாநிலத்தில் நடக்கிறது, அங்கே எப்படி வெற்றிபெறுவது என்கிற தவிப்பு தினமும் இருக்கிறது. அவர் மட்டுமல்ல... உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்த அக்கறை காங்கிரஸ் கட்சியினருக்கோ மற்ற எதிர்க்கட்சியினருக்கோ இல்லை. நாட்டில் ஏராளமான பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. உதாரணமாக, நாளுக்கு நாள் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை நாட்டு மக்களையும் வியாபாரிகளையும் கடுமையாக பாதித்துவருகிறது. ஆனால், அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்திருக்க முடியும். ஆனால், அந்த உணர்வு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஏன் இல்லாமல் போனது? ‘மக்கள் பா.ஜ.க-வைத் தூக்கி எறிந்துவிடுவார்கள், அங்கே வந்து உட்கார்ந்துகொள்ளலாம்’ என்கிற எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது.’’

ஒன் பை டூ: இன்னும் பல பத்தாண்டுகள் பா.ஜ.க வலுவாக இருக்குமா?
ஒன் பை டூ: இன்னும் பல பத்தாண்டுகள் பா.ஜ.க வலுவாக இருக்குமா?

மாணிக்கம் தாகூர், எம்.பி., காங்கிரஸ் கட்சி

“காங்கிரஸ் பேரியக்கம் 120 வருட பாரம்பர்யம்கொண்டது. அதன் பயணத்தில் பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் சந்தித்திருக்கிறது. சொல்லப்போனால், பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் விஞ்ஞானிகள் உருவாவதற்கு முன்பாகவே அனைத்தையும் பார்த்த ஒரு கட்சி காங்கிரஸ். பிரசாந்த் கிஷோர், பத்து நாள்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்று வந்து நின்றார். இப்போது காங்கிரஸ் கட்சி குறித்து இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவர் நிலையில்லாத சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் என்பது தெரிகிறது. மத்தியில் யார் வலுவாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் மக்கள் முடிவு செய்யவேண்டிய விஷயம். இவர் போன்ற ஆலோசகர்கள் அல்ல. ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அந்தக் கட்சிதான் பல வருடங்கள் ஆட்சியில் இருக்கும் என்றார்கள். ஆனால், எத்தனை காலம் அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள்? பிரசாந்த் கிஷோர் அரசியல்வாதியாக இந்தக் கருத்துகளைச் சொல்கிறாரா அல்லது ஆலோசகராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இது போன்ற பல சூழல்களைக் கையாண்டுவிட்டோம். இதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்!”