Published:Updated:

`ஸ்டாலின் வாய்வித்தைக்காரர் அல்ல; சொன்னதைச் செய்திருக்கிறார்!’ - புகழ்ந்த கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

`விவசாயிகளின் கஷ்டங்களைத் தெரிந்த முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளிடம் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும்' என்றார் கே.எஸ்.அழகிரி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு ஹெச்.வசந்தகுமாரின் மணிமண்டபத்தையும், உருவச்சிலையையும் திறந்துவைத்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ``வசந்தகுமாருக்கும் எனக்கும் நீண்டகாலமாக அறிமுகம் உண்டு. அதன் பிறகு அது நட்பாக மாறியது. எனக்கும் அவருக்குமான நட்பு வேறு யாருக்கும் இருக்காது. பிசிராந்தையார் கோப்பெரும் சோழன் போன்று பார்க்காமலேயே மனக்கருத்துகளும் ஒற்றுமையும் எங்களுக்குள் இருந்தன. அவர் இயக்கத்துக்காக ஏராளமாக உழைத்தார். சில நேரங்களில் அவருக்கான வாய்ப்புகள் தட்டிப்போகும். அவரிடம் அது பற்றிப் பேசினால் அதை எளிதாக எடுத்துக்கொள்வார். வாய்ப்பு தட்டிப்போகும்போது பலர் கோபப்படுவார்கள். ஆனால் வசந்தகுமார் அதை இயல்பாக எடுத்துக்கொள்வார். சென்னையில் அவரது முதல் வருகை பற்றியெல்லாம் அவர் சொல்லுகிறபோது ஆச்சர்யமாக இருக்கும். வாழ்க்கையின் பல பரிணாமங்களை அனுபவித்தவர். அவருடைய பிள்ளைகளுக்கு அந்தச் சிரமம் தெரியாது. வாழ்க்கையின் கீழ் நிலையையும் பார்த்தவர், மேல் நிலையையும் பார்த்தவர்.

வசந்தகுமார் உருவ ச்சிலையை திறந்துவைத்த கே.எஸ்.அழகிரி
வசந்தகுமார் உருவ ச்சிலையை திறந்துவைத்த கே.எஸ்.அழகிரி

பொதுவாக வசதியானவர்கள் கட்சிக்குத் தீவிர வேலை செய்ய மாட்டார்கள். கட்சிக்குப் பொருள் உதவி செய்வார்கள். தலைவர்களுக்கு உதவி செய்வார்கள், மாநாடு நடத்தினால் உதவுவார்கள். தொழில் செய்பவர்கள் கட்சியில் இருந்தால் பல பிரச்னைகள் வரும். அதிலும் ஆளுங்கட்சியாக இருந்தால் பரவாயில்லை, எதிர்கட்சியாக இருந்தால் இன்னும் பிரச்னை வரும். தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்க்கட்சிதான். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகத் தன்னை இணைத்துக்கொண்டார். வசந்தகுமார் மறைவால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பைவிட, நம் கட்சிக்கு இழப்பு அதிகம்.

எப்போதும் நான் பேசி முடித்துவிட்டு காரில் ஏறும்போது `அண்ணே காமராஜரை கவனித்துக்கொள்ளுங்கள்' என்பார். தலைவர் காமராஜர் மீது அவருக்கு அதீதப் பிரியம் உண்டு. என்றென்றும் இந்த மண்ணில் வசந்தகுமாரின் நினைவு இருக்கும். மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜர் போன்று வசந்தகுமாரும் இந்த மண்ணுக்கு உரியவர்" என்றார்.

வசந்தகுமார் நினைவிடத்தில் அஞ்சலி
வசந்தகுமார் நினைவிடத்தில் அஞ்சலி

பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மிகவும் பாராட்டுகிறேன். விவசாயிகள் இவ்வளவு காலமும் தொடர் போராட்டத்தை மழையிலும் வெயிலிலும் நடத்திக்கொண்டிருந்தார்கள். விவசாயிகளின் கஷ்டங்களைத் தெரிந்த முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளிடம் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்தத் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்திருக்கிறது. சட்டசபைக்குள்ளிருந்து இந்தத் தீர்மானத்தை அதிமுக ஆதரித்திருக்க வேண்டும்.

Tamil News Today: `வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்!” - முதல்வர் ஸ்டாலின்

இலங்கை தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி உதவியை வாரி வழங்கியிருப்பதைப் பாராட்டுகிறேன். கலைஞர் செய்ததைவிட ஒருபடி மேலே செய்திருக்கிறார். அகதிகள் முகாமை மறுவாழ்வு மையமாகப் பெயர் மாற்றம் செய்தது வரவேற்கத்தக்கது. ஸ்டாலின் வாய்வித்தைக்காரர் இல்லை. சொன்னதைச் செய்திருக்கிரார். கொடநாடு விவகாரத்தில் சந்தேகம் எழுந்திருக்கிறது. அதை அதிமுக-வே முன்னின்று நிவர்த்தி செய்திருக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு