Published:Updated:

`சி.வி.சண்முகம் கூட்டணி தர்மத்தை மீறி பேசியிருக்கிறார்' - கே.டி.ராகவன் காட்டம்

விழுப்புரத்தில் கே.டி.ராகவன்
விழுப்புரத்தில் கே.டி.ராகவன்

``சிறுபான்மையினர் சமூகத்தினர் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என சி.வி.சண்முகம் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” - கே.டி.ராகவன்.

'பா.ஜ.க உடனான கூட்டணியின் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக இழந்துவிட்டோம். நம் கூட்டணி கணக்கு சரியில்லை. இதுவே தோல்விக்கு காரணம்' என்று விழுப்புரம் மாவட்டம், வானூரில் நேற்று (06.07.2021) நடைபெற்ற அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிரடியாக பேசியிருந்தார் சி.வி.சண்முகம்.

`பா.ஜ.க உடனான கூட்டணியே, அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்!'  - சி.வி.சண்முகம் அதிரடி

இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், "பா.ஜ.க கட்சியை பொருத்தவரை, இந்தியா முழுக்க நாடாளுமன்ற தேர்தலில், 2014-ல் வெற்றி பெற்ற இடங்களை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சுமார் 18% இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கின்றனர். அந்த இடத்திலேயே 67 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறோம்.

கே.டி.ராகவன், சி.வி.சண்முகம்
கே.டி.ராகவன், சி.வி.சண்முகம்

முஸ்லிம்கள் அதிகம் வாழும் மீரட் போன்ற இடங்களில் பா.ஜ.க எம்.பி-க்கள் உள்ளனர். வடகிழக்கு மாகாணங்கள் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கின்ற மாகாணங்கள். அங்கும் பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கின்ற கோவா-விலும் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், பொத்தம் பொதுவாக 'சிறுபான்மையினர் சமூகத்தினர் எங்களுக்கு வாக்களிக்கவில்லை' என சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்தியா முழுவதும் உள்ள இந்தியர்கள் வாக்களித்து தான் பா.ஜ.க அரசு மத்தியிலேயே இருக்கிறது. இந்த நேரத்தில் சி.வி.சண்முகம் இப்படி சொல்வதென்பது அவர் கட்சியினரின் கருத்தா..? என்று பார்க்க வேண்டும். இவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுடைய கட்சியிலும், சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடத்தினோம். அப்போது எங்களின் நிர்வாகிகள், தொண்டர்கள், "அ.தி.மு.க ஆட்சியின் சில முடிவுகள் தான் இந்த தோல்விக்கு காரணம்" என்றும் கூட தான் சொல்லியிருக்காங்க. அதனால், பொதுவெளியில் கூட்டணி தர்மத்தை மீறி சி.வி.சண்முகம் பேசியிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது. இந்த மாதிரி கூற்றில் உண்மை இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் - மோடி - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - மோடி - எடப்பாடி பழனிசாமி

ஆனால், பா.ஜ.க தொண்டர்கள், இந்த கூட்டணிக்கு முழுமனதோடு தேர்தல் பணி ஆற்றியுள்ளனர். அ.தி.மு.க தொண்டர்களும் நாங்கள் போட்டியிட்ட இடங்களில் அதேபோல முழுமனதோடு எங்களுக்காக பணியாற்றியுள்ளார்கள் என்பது உண்மை. தலைவர்களுடைய இது போன்ற பேச்சுக்களை அ.தி.மு.க தொண்டர்களே ஏற்றுக்கொள்வார்களா... என்று தெரியாது. அ.தி.மு.க தலைமை தான் இவரின் கூற்றுக்கு எதிர் பதில் சொல்லணும்" என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.டி.ராகவன், "உள்ளாட்சித் தேர்தலின்போது, பா.ஜ.க கூட்டணியில் இருக்குமா..! தனித்து போட்டியிடுமா.! என்று தேர்தல் தேதி அறிவித்த பின்னர் எங்கள் தலைமை அறிவிக்கும். இதை எங்களின் மாநில தலைவர், கடந்த வாரம் நடைபெற்ற மாநில செயற்குழுவிற்கு பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

''அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக யாரும் பேசக்கூடாதா?''
- கேள்வி கேட்கிறார் கே.டி.ராகவன்

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன்பின், பா.ஜ.க-வின் நிலைப்பாட்டை நாங்கள் சொல்கிறோம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்ன கருத்து தவறானது, கண்டிக்கத்தக்கது" என்றார்.

இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பா.ஜ.க - அ.தி.மு.க உறவு தொடரும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``பாஜக மீதும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேச நலன் கருதியும் தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு