Published:Updated:

`மகிழ்ச்சியாகத் தியாகம் செய்கிறேன்' - கர்நாடகச் சட்டப்பேரவையில் உருகிய குமாரசாமி!

மலையரசு

அரசியலுக்கு வரும் ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தால், தந்தையின் அழுத்தத்தால் அரசியலுக்கு வந்தேன். நான் நிறைய தவறுகளைச் செய்துள்ளேன்.

சட்டப்பேரவையில் குமாரசாமி
சட்டப்பேரவையில் குமாரசாமி

கர்நாடகாவில் நடந்துவரும் ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. எம்.எல்.ஏ-க்கள், ராஜினாமா செய்து ஒரு வாரம் ஆன நிலையிலும் சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததால் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

சட்டப்பேரவையில் குமாரசாமி
சட்டப்பேரவையில் குமாரசாமி

இந்த வழக்கில், சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது, அதேபோல் அந்த மாநிலத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ-க்களை கலந்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த சில நாள்களாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டது. 16 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து ராஜினாமா நிலைப்பாட்டிலேயே இருந்ததால் குமாரசாமி அரசு கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்தான் சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, ``தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்கள் கடிதம் தந்தனர். அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இந்தத் தகுதி நீக்கத்துக்கு கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பின்பற்றி இங்கும் அரசுக்கு எதிரான அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தமிழக சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. குதிரை பேரம் நடந்தது உண்மையெனில், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் உண்டு" எனப் பேசி அதிரவைத்தார்.

`மகிழ்ச்சியாகத் தியாகம் செய்கிறேன்' - கர்நாடகச் சட்டப்பேரவையில் உருகிய குமாரசாமி!

இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் குமாரசாமி, ``கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் முதல்வர் ஆவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அரசியலுக்கு வரும் ஆசை இல்லை என்றாலும், காலத்தின் கட்டாயத்தால் தந்தையின் அழுத்தத்தால் அரசியலுக்கு வந்தேன். இருப்பினும் 2018ம் ஆண்டு தேர்தல் முடிவு வந்த போதே அரசியலை விட்டு விலக நினைத்தேன். நான் நிறைய தவறுகளைச் செய்துள்ளேன். அதேநேரம் நிறைய நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன்.

நான் என் இன்னும் ராஜினாமா செய்யவில்லை எனக் கேட்கிறார்கள். இந்த நேரத்தில் சட்ட விதி 10 குறித்தோ, வேறு சட்ட நுணுக்கங்கள் குறித்தோ பேச விரும்பவில்லை. மகிழ்ச்சியாகத் தியாகம் செய்கிறேன். ஊழல் செய்து பின்வாசல் வழியாக பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்ற பார்க்கிறது" என உருக்கமாகப் பேசினார். இந்தப் பேச்சால் அவர் ராஜினாமா செய்யவுள்ளார் என்றும், இன்று இரவுக்குள் ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. இவர் பேசி முடித்த சிறிது நேரத்தில் பெங்களூருவில் 144 தடை விதிக்கப்பட்டது.

குமாரசாமி
குமாரசாமி

இன்று முதல் ஜூலை 25 மாலை 6 மணி வரை 144 தடை அமலில் இருக்கும் என்றும்,144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை என்றும் பெங்களூரு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மதுபான விடுதிகள், பார்கள், மதுபானக் கடைகள் ஆகியவற்றை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.