Published:Updated:

மீம்ஸ் டு மேதகு தமிழிசை! அப்பாவுக்குக் கிடைக்காத கவர்னர் பதவி மகளுக்குக் கிடைத்தது

தமிழிசையும் குமரி அனந்தனும்
தமிழிசையும் குமரி அனந்தனும்

அப்பாவும் மகளும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள். அப்பாவைக் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. பி.ஜே.பி-யோ மகளுக்கு மகுடம் சூட்டிவிட்டது.

`தமிழிசை தெலங்கானாவுக்குப் போவதால் 7 ஆயிரம் மீம்ஸ் கிரியேட்டர்கள் வேலை இழக்கப்போகிறார்கள்' என்கிற மீம்ஸ் ஒன்று தமிழிசைக்கு வந்திருக்கிறது. அன்று இரவு முழுவதும் அதை நினைத்தே சிரித்துக்கொண்டிருந்தார்.

கவர்னராகப் பதவியேற்றபோது...
கவர்னராகப் பதவியேற்றபோது...

தமிழகத்திலிருந்து ராஜாஜி, குமாரசாமி ராஜா, ஜோதி வெங்கடாசலம், பா.ராமச்சந்திரன், சி.சுப்பிரமணியம், வி.சண்முகநாதன், சதாசிவம் ஆகியோர் கவர்னர்களாக ஆகியிருக்கிறார்கள். கவர்னர் ஆவதற்காகத் துடித்தவர்களும் அதற்காக முயற்சி எடுத்தவர்களும் ஏராளம். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிதான் நீண்டகாலம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸில் தலைவர், எம்.பி. எம்.எல்.ஏ பதவிகளைப் பிடிக்கப் பல குழுக்கள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும். இந்தப் போட்டியில் தலையை நுழைத்து சீட் வாங்குவது சீனியர்களுக்குச் சரிப்பட்டு வராது. அதனால் 'மேதகு' ஆவதற்காக டெல்லியில் லாபி செய்து வந்தார்கள். ``பெரிய மாநிலத்துக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. யூனியன் பிரதேசத்துக்காவது என்னைத் துணைநிலை ஆளுநர் ஆக்குங்கள்'' என டெல்லியில் வட்டமடிப்பார்கள்.

அப்படித்தான் ஆலடி அருணாவும் 2001-ம் ஆண்டு அப்ளிகேஷன் போட்டார். அப்போது மத்திய வாஜ்பாய் அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியைச் சந்திக்க முரசொலி மாறன் போனபோது, ``ஆலடி அருணா நேற்று என்னைச் சந்தித்து கவர்னர் பதவிக்கான சுயவிவரக் குறிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றார்'' என்றார், அத்வானி. இப்படி ஆளுநர் பதவியைப் பிடிக்க முயன்றவர்களில் தமிழிசையின் அப்பா குமரி அனந்தனும் ஒருவர்.

தமிழிசை
தமிழிசை

வளர்ப்பு மகன் திருமணம், சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, சொத்துக் குவிப்பு வழக்கு, நிலங்கள் அபகரிப்பு, வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல், சசிகலா குடும்ப ஆதிக்கம் என 1991-1996 ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த விஷயங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. அப்போது காங்கிரஸ் கட்சிதான் சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்தது. காங்கிரஸுடன் ஜெயலலிதா கடுமையாக மோதிக் கொண்டிருந்தார். சட்டசபையில் காங்கிரஸ் உள்ளிருப்புப் போராட்டம் எல்லாம் நடத்தியது. அந்த அளவுக்கு அ.தி.மு.க. மீது காங்கிரஸ் கடும் அதிருப்தியைக் காட்டியிருந்த நிலையில், 1996 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி என அறிவித்தார், அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ். இதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நரசிம்ம ராவ் கட் அவுட்களை எரித்து எதிர்ப்பு காட்டினார்கள், காங்கிரஸ்காரர்கள். இதனால் காங்கிரஸிலிருந்து பிரிந்து த.மா.கா-வைத் தொடங்கினார், மூப்பனார்.

அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி அனந்தனும் மூப்பனாருடன்தான் இருந்தார். திடீரென இரண்டு நாளில் காங்கிரஸ் பக்கம் தாவி, நரசிம்ம ராவ் சொன்ன அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க-வோடு சேர்ந்து காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது. கவர்னர் பதவியில் அமர்வதற்குத்தான் குமரி அனந்தன் நரசிம்ம ராவுக்கு ஆதரவாக இருந்தார் என்கிற பேச்சுகள் அப்போது கிளம்பின. அதன்பிறகு ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கவர்னர் ஆகிவிட முயற்சிகள் எடுத்தார், குமரி அனந்தன். ஆனால், காங்கிரஸ் அவரைக் கைவிட்டது. அவருக்குக் கிடைக்காத கவர்னர் பதவி அவருடைய மகளுக்குக் கிடைத்திருப்பதுதான் காலத்தின் கோலம்.

அப்பாவும் மகளும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள். அப்பாவைக் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. பி.ஜே.பி-யோ மகளுக்கு மகுடம் சூட்டிவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு