பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்!

 Kumari Ananthan
பிரீமியம் ஸ்டோரி
News
Kumari Ananthan

நெகிழும் குமரி அனந்தன்

சென்னை லாயிட்ஸ் காலனி, எல்.வி பிளாக்கின் தரைத்தளத்தில் அமைந்திருக்கிறது அந்தச் சின்னஞ்சிறிய வீடு!

அறைமுழுக்க இறைந்து கிடக்கும் புத்தகங்கள், அழுக்கேறிய மின்விசிறி, பனை மரத்தாலான பழைய நாற்காலி, மேஜை, பீரோவுக்கிடையே மெலிந்த தேகத்துடன் நார்க்கட்டிலில் அமர்ந்து, புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறார் குமரி அனந்தன்; தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தை!

சுவரில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட ஒட்டடைகளும் அறைமுழுக்க அடர்ந்து நிற்கும் முடைநாற்றமும்... குடும்ப உறுப்பினர்கள் எவருடைய துணையுமின்றி குமரி அனந்தன் தனித்திருக்கும் செய்தியை அழுந்தச் சொல்கிறது.

எழுத்தாளர், பேச்சாளர், பழம்பெரும் அரசியல் தலைவர் எனப் பன்முகத் திறன்கொண்ட குமரி அனந்தனிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தோம்.

``வீடு தேடி வந்திருக்கிற உங்களை வரவேற்று உபசரிக்கிற சூழல்கூட இங்கே இல்லையே...'' என்று வருத்தத்துடன் புன்னகைத்தவர், தன் பால்யகால நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

``கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமரிமங்கலம் என்ற சிறிய கிராமம்தான் என் சொந்த ஊர். அப்பா ஒரு வில்லிசைக் கலைஞர்.

தீண்டாமைக் கொடுமைகள் நிறைந்திருந்த அந்தக் காலங்களில், எங்கள் சாதியினரை `தலைப்பாகை அணியக்கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது' என்றெல்லாம் ஆதிக்கச் சாதியினர் கொடுமைப்படுத்திக் கொண்டி ருந்தனர். ஆனாலும்கூட என் தந்தை, கோயிலில் வில்லிசை இசைக்கும் நேரத்தில், கிரீடம் போன்று அழகாகத் தலைப்பாகை அணிந்திருப்பார். இந்தத் தலைப்பாகையின் அழகைக் காண்பதற்காக மக்கள் நிறைய கூடுவார்கள்.

தனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்!

சுதந்திரத்துக்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில், மகாத்மா காந்தியின் சுதேசி இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட என் தந்தை, எங்கள் வீட்டிலேயே 16 ராட்டைகள் அமைத்துக் கதர் உற்பத்தி செய்துவந்தார். தந்தை காந்தியவாதியாக இருந்ததால், சிறு வயதிலிருந்தே எனக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது ஈடுபாடு வந்துவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், `நான் வில்லிசையில் கருவானேன்; ராட்டை இசையில் உருவானேன்!'' என்று சொல்லிச் சிரிக்கும் குமரி அனந்தனுக்கு வயது 87. இப்போதும் கட்சிக் கூட்டங்கள், இலக்கிய மேடைகள் எனச் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்.

``எங்கள் கிராமத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்திலிருந்த அரசுப் பள்ளிக்கு நடந்து சென்று 5-ம் வகுப்பு படித்தேன். மதுரையில்தான் இளங்கலை படித்தேன். கல்லூரியில் ஒருமுறை, நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, `இன்னும் கால் மணிக் கூறு இருக்கிறது' என்று கூறிவிட்டேன். உடனே அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் 'இவன் என்ன மலையாளம் மாதிரி பேசுகிறான்' என்று கூறி, கைதட்டிக் கிண்டல் செய்தனர். இந்தச் சம்பவம் எனக்குப் பெருத்த அவமானமாகிவிட்டது.

அந்த நேரத்தில்தான் கல்லூரியின் பேச்சுப்போட்டி அறிவிப்பு வெளியானது. `இந்தப் போட்டியில் கலந்துகொண்டு நம் திறமையை நிரூபிக்கவேண்டும்' என்ற வைராக்கியத்தோடு முதன் முதலாகப் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டேன். நினைத்ததுபோலவே முதல் பரிசு கிடைத்தது. கூடவே, மாணவர் தலைவன் என்ற அங்கீகாரமும் கிடைத்தது. தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்களோடும் தொடர்பில் இருந்துவந்தேன்.

பின்னர் அண்ணாமலையில் முதுகலை படித்தபோது, என் தமிழ் ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டேன். `வெற்றி தனிப்பயிற்சிக் கல்லூரி'யில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தேன். பகல் முழுவதும் ஆசிரியர் பணி, மாலையில் பக்கத்து ஊர்களுக்கு காங்கிரஸ் கட்சி பிரசாரத்துக்குச் சென்றுவிடுவேன்'' என்று ஆர்வமாகப் பேசுபவர் அரசியலில், காமராஜருடனான அனுபவம் குறித்துப் பேசும்போது, இன்னும் பிரகாசமாகிறார்.

``கல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தபோதே எனக்குத் திருமணமாகி, குழந்தைகளும் பிறந்துவிட்டார்கள். ஒருமுறை மதுரையில், பெருந்தலைவர் காமராஜரும், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத்தும் பேசுகிற ஒரு பொதுக்கூட்டம். தலைவர்களது பேச்சைக் கேட்கும் ஆர்வத்தில் நானும் ஒரு தொண்டனாகச் சென்றிருந்தேன். அங்கே தலைவர்கள் வரக் காலதாமதம் ஆக, அதுவரையில் என்னைப் பேசச்சொல்லி அழைத்தார்கள்.

நானும் மேடையேறிப் பேசினேன்... சிறிதுநேரத்தில், காமராஜர் வந்துவிட்டார். அதனால், நான் பேச்சை முடித்துக்கொள்ள எத்தனிக்கையில், காமராஜரே என் அருகில் வந்து `நல்லாப் பேசுறே... தொடர்ந்து பேசுண்ணேன்...' என்று தோளில் தட்டி உற்சாகம் கொடுத்தார்.

அடுத்த சில நாள்களிலேயே காமராஜரிடமிருந்து சென்னைக்கு வரச்சொல்லி எனக்கு அழைப்புவந்தது. நேரில் வந்து சந்தித்தேன்... `நீ நல்லாப் பேசுறே... அதனால காங்கிரஸ் கட்சியில் உனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுக்கலாம்னு நெனைக்கிறேன். ஆனா இங்கே சம்பளம் எல்லாம் கிடையாது' என்று கூறியவர், என் மாமனாரை அழைத்து, என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்கான உறுதிமொழியையும் அவரிடம் வாங்கிக்கொண்டார். அதன் பிறகே என்னை `இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்' ஆக்கினார்'' என்று முகம் மலர்பவர், இப்போதும் தீவிர அரசியல் பணியாற்றிவருகிறார். `பூரண மதுவிலக்கு கோரி' வருகிற 15-ம் தேதி அனைத்துக் கட்சியினர் கலந்துகொள்ளும் `உண்ணாவிரதப் போராட்ட'த்துக்கான ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்துவரும் குமரி அனந்தனிடம், `தமிழிசை சௌந்தர்ராஜனின் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசினேன்.

``நான் அரசியலில் ஈடுபட்டபோது, எனக்கு உறுதுணையாக இருந்தவர் என் மகள் தமிழிசை. மகாத்மா காந்தியைப் போற்றும்வகையில், கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை 125 தொண்டர்களோடு நான் பாதயாத்திரை மேற்கொண்டேன். அப்போது, பாதயாத்திரையில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் மருத்துவம் பார்ப்பதற்காக, தன் இரண்டு குழந்தைகளையும் கையோடு அழைத்துக்கொண்டு உடன் வருவார் என் மகள் தமிழிசை. ஒருமுறை யாத்திரை அச்சிரப்பாக்கம் வந்தபோது, அங்கிருந்த சிலர் எங்கள் குழுவினரைக் கல்லால் தாக்கித் துன்பப்படுத்திவிட்டார்கள். அப்போது, என் உடல்நலனையும் பரிசோதித்துக்கொண்டு, தொண்டர்களுக்கும் மருத்துவம் பார்த்தபடியே வந்தவர்தான் தமிழிசை.

என்னுடைய வாழ்க்கையைப் பார்த்தும் என்னை மற்றவர்கள் எப்படியெப்படி எல்லாம் நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்தும் அவரது மனதிலே என்ன எண்ணம் வந்ததோ தெரியாது... திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துவிட்டார்! எனக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்தது. அதனால் கொஞ்சநாள் நான் அவருடன் பேசாமல்கூட இருந்தேன். ஆனாலும்கூட பிடித்த கொள்கை கொண்ட கட்சியில் இணைவதென்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். எனவே, அவரவர் பணியை நிறைவாகச் செய்துகொண்டிருக்கிறோம் என்று மன அமைதி பெற்றோம்'' என்றார்.

குடும்பத்தினரைப் பிரிந்து தனியே தங்கியிருக்கும் சூழல் குறித்துப் பேச்சு திரும்பியபோது, கனத்த மௌனம் காத்தவர், அதற்கான காரணங்களை அவிழ்த்துப் பேச ஆரம்பித்தார்.

``என் மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. எங்களுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு பெண் மக்கள். தமிழும் இசையும் எனக்குப் பிடிக்கும் என்பதால், என் மூத்த மகளுக்குத் தமிழிசை எனப் பெயரிட்டேன். என் கடைக்குட்டி மகள் பிறந்தபோதும்கூட நான் கட்சிப் பணியாகச் சுற்றிக்கொண்டிருந்தேன். விஷயம் கேள்விப்பட்டு காமராஜரே என்னை அழைத்து `ஏன்யா உன் வீட்டுப் பொம்பளை ஆஸ்பத்திரியிலே இருக்காளாமே... நீ என்னடான்னா கடலூர்க் கூட்டத்துக்குப் போகப்போறேன்னு சொல்றே. அதெல்லாம் பார்த்துக்கலாம். உடனே நீ ஆஸ்பத்திரிக்குப் போ' எனக் கடிந்துகொண்டார்.

தனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்!

உடனே, மருத்துவமனை சென்று மனைவியைப் பார்த்தேன். பெண் குழந்தை பிறந்திருந்தது. கோபத்திலிருந்த என் மனைவி, `பிரசவ வேதனையில் நான் துடித்துக் கொண்டிருக்கும்போதும்கூட நீங்கள் கட்சி கட்சி என்று ஊரைத்தானே சுற்றிக்கொண்டி ருந்தீர்கள். இந்த டாக்டர்தான் எனக்குத் தாயாகவும் இருந்து என்னைப் பார்த்துக்கொண்டார். அதனால், அவரது பெயரையே நம் குழந்தைக்கு வைத்துவிட்டேன்' என்றார். இப்படித்தான் என் தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது.

இப்போதும் என் மனைவி, தமிழிசை குடும்பத்துடன்தான் இருக்கிறார். `தனியாக இருந்து ஏன் சிரமப்படுகிறீர்கள் அப்பா... என் வீட்டிலேயே வந்து எங்களோடு தங்கிக்கொள்ளுங்களேன்' என்று தமிழிசையும் என்னைக் கேட்டுக்கொண்டி ருக்கிறார்தான்.

ஆனால், நான் எப்போதும் ராட்டைக் கொடியுடன் கூடிய என் காரில்தான் பயணிக்கிறேன். அவரோ வேறு ஒரு கட்சியின் தலைவர், அவரது காரில் தாமரைக் கொடி பறக்கும். கட்சி ரீதியாக அவரைச் சந்திப்பதற்குப் பலரும் வந்துபோவார்கள். அந்த இடத்தில், இந்த வேறுபாடுகளையெல்லாம் எல்லோரும் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வார்களா? மாறாக, இந்த வேறுபாடே ஒரு காரணமாக அமைந்து, என் மகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிடக் கூடாது என்றுதான் மறுத்துவிட்டேன். ஒரு தந்தையாக நான் உதவ முடியாவிட்டாலும்கூட, ஒருபோதும் தடைக்கல்லாக இருந்துவிடக் கூடாதல்லவா?

இப்போதும் நான் சென்னையில் இருக்கும் நாள்களில் எல்லாம் எனக்கான தினசரி உணவு என் மகள் தமிழிசையின் வீட்டிலிருந்துதான் வருகிறது. ஆனாலும் எங்கள் இருவருக்குமிடையே கட்சி, கொள்கை, கோட்பாடு வேறுவேறுதான்!'' அழுத்தமாகச் சொல்லிச் சிரிக்கிறார் இலக்கியச் செல்வர்!