Published:Updated:

`என் வீட்டுல கல் வீசச் சொன்னதே ஸ்டாலின்தான்!’ - அருமனையில் குஷ்பு ஆவேசம்

பொங்கல் விழாவில் பேசிய குஷ்பு
பொங்கல் விழாவில் பேசிய குஷ்பு

`இவங்கல்லாம் நான் கட்சி மாறிட்டதா சொல்றாங்க. எங்கே நமக்கு போட்டியா வந்திருவாளோ, பேச்சுத் திறமை இருக்கு, அழகா இருக்கா, மக்கள் கூட்டத்தைக் கூட்டுற தைரியம் இருக்குன்னு பயந்தாங்க’ - குஷ்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை வட்டார இந்து சமுதாயம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் நடிகை குஷ்பு பேசுகையில், ``தேசியக் கல்வி கொள்கை வரும்போது எதிர்க்கட்சியில இருக்கிறவங்க இந்தி திணிப்புனு சொல்றாங்க. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பிரதமர் ஒரு மொழியையா உங்கள் மேல் திணிக்கப்போகிறார். எதிர்க்கட்சியைப் பார்த்து நான் கேட்கிறேன், இந்தி கத்துக்கக் கூடாதுன்னு நீங்க சொல்றீங்க. உங்க வீட்டுல இருக்குற பசங்க தமிழ் மொழிதான் கத்துக்கிறாங்களா. அவங்களை கவர்மென்ட் பள்ளிக்கூடத்துலதான் சேர்த்திருக்கீங்களா... உங்க பசங்க இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்குதுன்னு பெருமையா சொல்லிக்கிறீங்க... புதிய கல்விக் கொள்கையில தாய்மொழி தாண்டி வேற மொழி படிக்க ஆப்ஷன் கொடுக்கிறோம்.

நலத்திட்ட உதவி வழங்கல்
நலத்திட்ட உதவி வழங்கல்

காங்கிரஸிலும் குடும்ப அரசியல் நடந்துக்கிட்டிருக்கு. ஏன் வேற யாருமே இல்லியா உங்களுக்கு... இவங்க வேலையும் செய்ய மாட்டாங்க, மத்தவங்களையும் வேலை செய்ய விட மாட்டாங்க. நான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவதான். ஆனா, பொட்டு வைக்கிறதுல நான் ரொம்பப் பெருமைபடுறேன். என் பேருக்குப் பின்னால கணவர் பெயர் போடுறதுல எனக்குப் பெருமை. `சுந்தர்’னா அழகுன்னு அர்த்தம். தீபாவளி, பொங்கலெல்லாம் குடும்பத்தோட கொண்டாடுவோம். மதம் பெருசு கிடையாது. ஆனா, ஒரு மதத்துக்கு எதிரா நீங்க செய்யுறதுதான் தவறு.

திருமாவளவன் இந்து மதத்துக்கு எதிரா பேசுறார். நான் இந்த மேடையில் திருமாவளவனுக்கு ஒரு சவால்விடுறேன்... இந்து மதத்துக்கு எதிரா இவ்வளவு பேசுறீங்களே... உங்களுக்கு தைரியம் இருந்தா இஸ்லாமிய மதத்துக்கு எதிரா ஒரு குரல் கொடுத்துப் பாருங்க. இந்து மதத்த சார்ந்தவங்க இளிச்சவாயங்கன்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா... பா.ஜ.க சிறுபான்மை மதத்துக்கு எதிரானது அல்ல. 2019-ல் பா.ஜ.க வெற்றிபெற இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களும் ஓட்டுப்போட்டார்கள்.

அருமனை பொங்கல் விழாவில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்
அருமனை பொங்கல் விழாவில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்

நாங்கள் நம்ம ஊர் பொங்கல் விழா கொண்டாடுறதை பார்த்துட்டு, ஸ்டாலின் சமத்துவப் பொங்கல் கொண்டாடுறதா சொல்லுறார். அவர் சொந்தமா யோசிக்க மாட்டார், துண்டுச் சீட்டை வைத்துக்கொண்டுதான் பேசுவார். தென்னிந்தியாவில் பா.ஜ.க வர முடியாதுன்னு சொன்னாங்க. தெலங்கானாவில் அவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது. காஷ்மீரிலும், கன்னியாகுமரியிலும் ஜெயிச்சுட்டோம். ஒருகாலத்தில் ரெண்டு எம்.பி இருந்தாங்க இன்னிக்கு 300 எம்.பி இருக்காங்க. முதலில் ஏழு, எட்டு மாநிலங்களில் ஆட்சியில் இருந்தோம். இன்னைக்கு 20 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். அப்போ தமிழ்நாட்டுல ஜெயிக்க முடியாதா... நீங்க வாக்களிக்கும்போது தாமரையில் இருக்கும் பட்டனை அழுத்துங்க. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா தாமரைன்னா பூ. அதுபோல குஷ்பு, இரண்டு பூவையும் கனெக்ட் பண்ணிக்குங்க.

தி.மு.க ஆட்சியில பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததுன்னு சொல்லிக்கிறாங்க. மு.க.ஸ்டாலினுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதே தி.மு.க-வில நான் இருக்கும்போது திருச்சியில ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தோன். எட்டு வயது, பத்து வயது ரெண்டு பெண் குழந்தைகளைத் தனியா விட்டுட்டுப் போனேன். என் கணவர் ஹைதராபாத்துல இருந்தார். காலையில திருச்சி போயிட்டு மாலையில சென்னை போயிடுவேன்னு நம்பிப் போனேன். நான் திருச்சியில இருக்கும்போது என் வீட்டுல கல்லெறிஞ்சாங்க. அம்மா பயமா இருக்குன்னு பசங்க போன் பண்ணிக் கதறினாங்க.

அருமனை பொங்கல் விழாவில் பேசிய குஷ்பு
அருமனை பொங்கல் விழாவில் பேசிய குஷ்பு

ஒரு தாய்ங்கிற முறையில பதறிப்போய் ஸ்டாலினைப் பார்க்கப் போனேன். ஐயா சாப்பிட்டுட்டு இருக்காங்க... இப்போ பார்க்க முடியாதுன்னு சொன்னாங்க. உங்க கட்சி தொண்டர் வீட்டுல கல் வீசுறாங்க, வீட்டுல ரெண்டு பசங்க இருக்காங்க, எனக்கு பயமா இருக்குன்னு கதறி அழுதுட்டு இருக்கேன் நான். ஸ்டாலின் பார்க்கவே இல்லை. அப்போதான் வீட்டுல கல் வீசச் சொன்னதே ஸ்டாலின்தான்னு எனக்குத் தெரிஞ்சுது.

இவங்கல்லாம் நான் கட்சி மாறிட்டதா சொல்றாங்க. எங்கே நமக்குப் போட்டியா வந்துருவாளோ, பேச்சுத் திறமை இருக்கு, அழகா இருக்கா, மக்கள் கூட்டத்தைக் கூட்டுற தைரியம் இருக்குன்னு பயந்தாங்க. அப்படிப்பட்ட நிலையில அங்கே இருந்து தள்ளப்பட்டவ நான். இன்னிக்கு நான் பா.ஜ.க-வுல வந்ததால பாதுகாப்பா இருக்கிறேன். ஒரு பொண்ணுங்கிற முறையில், பெண் குழந்தையின் தாய் என்ற முறையில், நாட்டிலுள்ள பெண்களுக்கு பா.ஜ.க-தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இங்கே வந்திருக்கேன். வரும் தேர்தல் பா.ஜ.க-வின் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டில் பார்க்கப்போகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு