Published:Updated:

`கூகுளில் தேடுங்கள், காங்கிரஸ் எங்கே எனத் தெரியும்!'- குஷ்புவை கொந்தளிக்கவைத்த நெட்டிசன்கள்

குஷ்பு
குஷ்பு

காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும் என அதிரடியாகப் பேசியிருக்கிறார் குஷ்பு.

`டெல்லியில் ஏன் காங்கிரஸ் தோற்றது என்று தோல்வி குறித்துப் பேசாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை காங்கிரஸார் கொண்டாடுவது ஏன்?' என பிரணாப் முகர்ஜி-யின் மகள் கடுமையாகச் சாடியிருக்கும் நிலையில், செய்தி தொடர்பாளர் குஷ்புவும் ட்விட்டர் பக்கத்தில், ``நாம் போகும் பாதை சரியா என்றால் இல்லையென நான் சொல்வேன். கட்சியில் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும்" எனப் பகிரங்கமாகக் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இக்கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில் ட்விட்டரில் அவருக்கும் அவரது பாலோயர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் கடுமையாக நடந்துகொண்டிருக்கிறது.

குஷ்பு
குஷ்பு

டெல்லி சட்டமன்றத் தேர்தல் ரேஸில் காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவியது. பா.ஜ.க மீதான அதிருப்தியைக் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வாக்குகளை அறுவடை செய்யும் என அதிகமாகப் பேசப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் நடந்ததோ வேறு. தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது. பா.ஜ.க-வும் சில தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி இருந்த இடமே தெரியவில்லை. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜ.க 8 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இது, காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம், கட்சியின் தோல்வி குறித்துப் பேசாமல் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் அந்தக்கட்சிக்கு டெல்லி மக்கள் அளித்த ஆதரவு குறித்து பேசியதைக் கட்சியினரே ரசிக்கவில்லை.

குஷ்பு ட்விட்டர்
குஷ்பு ட்விட்டர்

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்துப் பேசாமல், ஆம் ஆத்மியின் வெற்றியும் அந்தக் கட்சிக்கு டெல்லி மக்கள் அளித்த ஆதரவு குறித்து ப.சிதம்பரம் பேசியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பிரணாப் முகர்ஜியின் மகள் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், ``டெல்லியில் காங்கிரஸுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் நசுக்கப்பட்டுவிட்டது. நாம் போதுமானதைச் செய்கிறோமா, நாம் சரியானதைச் செய்கிறோமா, நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாகப் பதில் வரும்.

ட்விட்
ட்விட்

நாம் இப்போதே பணியைத் தொடங்க வேண்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும். ஆனால், மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜகக் கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளது.

குஷ்பு
குஷ்பு

இந்த நிலையில் குஷ்புவை ட்விட்டரில் பின்தொடரும் பாலோயர் ஒருவர், `கூகுளில் தேடிப் பாருங்கள் காங்கிரஸ் எங்கிருக்கிறது என்று தெரியவரும்' என்று பதில் போட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த குஷ்பு, `உங்களது மூளையை ப்ரஷ் பண்ணிக் கழுவிட்டு வாருங்கள். மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கெல்லாம் போய்ப்பாருங்கள். அங்கு காங்கிரஸ் யார் என்று சொல்வார்கள்'' என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு