
அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிவைத்து அண்ணாமலை வீசியிருக்கும் வெடி, கடந்த ஒரு மாதமாக மின்வாரியத்தில் அனலைக் கிளப்பிய விவகாரம்தான்.
சமீபத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவரான அண்ணாமலை ஒரு வெடியைக் கிள்ளியெறிந்தார், “ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் நிலையம் ஒன்றை வாங்கி, அந்த நிறுவனத்தின் மூலம் 5,000 கோடிக்கு மின்வாரியத்திடம் மின் கொள்முதலுக்கான ஒப்பந்தம் பெறவிருக்கிறார். இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் அமைச்சரையுமே நான் வெளிப்படையாகச் சொல்லுவேன்” என்று எச்சிரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து அண்ணாமலைக்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே சமூக வலைதளத்தில் ஒரு யுத்தமே நடக்கிறது. அக்டோபர் 20-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துவிட்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்துக் காவலர் ஒருவரை அமைச்சரின் உதவியாளர் ஒருவர் பொது இடத்தில் வைத்துக் கன்னத்தில் அறைந்திருக்கிறார். மக்களைப் பாதுகாக்கக்கூடியவர்களுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களின் நிலைமை என்ன?” என்று வெடித்தார். இத்தனை நாள்கள் அமைதிகாத்த எதிர்க்கட்சிகள், ஆளுங் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகச் சீற ஆரம்பித்துள்ளன. ஆட்சிக்கு வந்ததிலிருந்து நூறு நாள்களாக அடங்கியிருந்த பல அமைச்சர்கள், உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு தைரியமாக அள்ளிக்குவிக்கவும், அட்ராசிட்டி செய்யவும் ஆரம்பித்துவிட்டதுதான், இந்தக் கொந்தளிப்புகளுக்குக் காரணம் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!
4 பர்சன்ட் கமிஷன்... சிக்கலில் செந்தில் பாலாஜி!
அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிவைத்து அண்ணாமலை வீசியிருக்கும் வெடி, கடந்த ஒரு மாதமாக மின்வாரியத்தில் அனலைக் கிளப்பிய விவகாரம்தான். நிலுவையிலிருக்கும் சில பில்களை க்ளியர் செய்வதற்கு, அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் ‘கமிஷன்’ கேட்பதாகப் புகார் எழுந்தது. இதைத் தற்போது வெளிப்படையாகப் போட்டுடைத்திருக்கும் அண்ணாமலை, “தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த சில மாதங்களாகவே நிலுவைத்தொகையான 29.64 கோடி ரூபாய் க்ளியர் செய்யப்படாமல் இருந்தது. 4 பர்சன்ட் கமிஷன் பெற்றுக்கொண்டு, அந்த பில்லை க்ளியர் செய்திருக்கிறார்கள். மின்துறை அமைச்சர் இல்லத்திலுள்ள ஐந்து பேருக்கு, இந்த கமிஷன் தொகை எங்கே பெறப்பட்டது, எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரமெல்லாம் தெரியும்” என்றார். இதை செந்தில் பாலாஜி தரப்பு எதிர்பார்க்கவில்லை. “அக்டோபர் 1-ம் தேதி, PFC மற்றும் REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பிறகு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 4 பர்சன்ட் கமிஷன் பொய்ப் புகாரைக் கூறி அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்” என்று விளக்கமளித்தார் செந்தில் பாலாஜி.

இவர்கள் இருவருக்குமான மோதல், சமூக வலைதளத்தையே அதிரிபுதிரி ஆக்கியிருக்கிறது. செந்தில் பாலாஜி, அவரின் தம்பி அசோக் குறித்து கடந்த காலங்களில் ஸ்டாலின் பேசிய பிரசாரப் பேச்சுகளையெல்லாம் பா.ஜ.க-வினர் வைரலாக்கி வருகின்றனர். புகழ்பெற்ற மருத்துவமனைக்குச் சொந்தமான ஒரு மின் உற்பத்தி நிறுவனத்தை அமைச்சர் தரப்பினர் வாங்க முடிவெடுத்துள்ள தாகவும், கடலூர் மாவட்டத்தில் ஒரு சோலார் யூனிட் அமைக்கும் திட்டத்தில் அவர்கள் தனி ஆவர்த்தனம் காட்டுவதாகவும் கூறுகிறது கமலாலய வட்டாரம். செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய நிதித்துறை மூலமாகவும் சில கோப்புகளைத் தோண்டியெடுக்கத் தீவிரமாகியிருக்கிறாராம் அண்ணாமலை. இந்த கமிஷன் புகார்கள் செந்தில் பாலாஜி மீது மட்டுமல்ல, இதர சில அமைச்சர்கள் மீதும் முன்வைக்கப்படுகின்றன.
‘செனடாப் ரோடு’ மிரளும் ஒப்பந்ததாரர்கள்!
பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளில்தான் அதிகப்படியான டெண்டர்கள் வருகின்றன. இந்த இரண்டு துறைகளுக்கும் எ.வ.வேலுதான் அமைச்சர். சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய ஒப்பந்தங்கள் பலவும் அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய கொங்கு மண்டல நிறுவனங்களுக்கே மீண்டும் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, கிங் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் மேம்பாட்டுப் பணிகள், மதுரை மத்திய நூலகம் உள்ளிட்ட பணிகள், ஏற்கெனவே எடப்பாடி ஆட்சியில் கோலோச்சிய மூன்றெழுத்து ஈரோடு நிறுவனத்திடமே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, தற்போது தமிழகத்தில் நடந்துவரும் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு இரண்டு இலக்க சதவிகிதத்தில் கமிஷன் கேட்கப்படுவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
சமீபத்தில் முன்னாள் ஆட்சி மேலிடத்தைச் சந்தித்த தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் சிலர், ‘ஆட்சி மாறியதும் நாங்க நிறைய படியளந்திருக்கிறோம். கடந்த ஆட்சியில் உங்ககிட்ட கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாச்சு. இவங்க மறுபடியும் பர்சன்டேஜ் கமிஷன் கேக்குறாங்க. எங்க நஷ்டத்தை நீங்க ஈடுகட்டுங்க’ என்றிருக்கிறார்கள். வந்தவர்கள் கொடுத்த லிஸ்ட்டில், மூன்று இலக்கத்தில் இருந்த அந்த எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு, ‘இவ்வளவு தொகையை நான் எப்படி ஈடுகட்ட முடியும்?’ என்று மிரண்டுபோயிருக்கிறார் அந்த முன்னாள் மேலிடம். வேறு வழியில்லாமல், துறையின் மேலிடத்துக்கு நெருக்கமானவர்களிடம் ஒப்பந்ததாரர்கள் சிலர், ‘கமிஷனைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா? ’என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘செனடாப் ரோட்டுல போய் நீங்களே சொல்லிடுங்க’ என்று ஒற்றைச் சொல்லில் மிரட்டவும், ஒப்பந்ததாரர்கள் அமைதியாகிவிட்டார்கள்.
தூர்வாரியதிலும் துட்டு!
ஆட்சியில் இரண்டாமிடத்தில் உள்ள துரைமுருகன் வசம் நீர்வளத்துறையும், கனிமவளத்துறையும் உள்ளன. இந்தத் துறைகளில் நடப்பவை எவற்றையும் முதல்வர் கேட்டுக்கொள்வதில்லை என்பதுதான் துரைமுருகனுக்கு ப்ளஸ். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, பத்துக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவருகின்றன. இந்தப் பணிகளைக் கடந்த ஆட்சியில் கோலோச்சிய ஒப்பந்த நிறுவனங்களே மீண்டும் எடுத்துள்ளன. அதேபோல் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி காவிரி கடைமடை கால்வாய்ப் பராமரிப்புப் பணிகள் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளைவைத்து நடந்த பேரங்கள் தனி.
அ.தி.மு.க ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25.37 கோடி மதிப்பீட்டிலான தடுப்பணை கட்டப்பட்டது. 2021, ஜனவரி 23-ம் தேதி, வெள்ளத்தில் அந்தத் தடுப்பணை திடீரென உடைந்தது. அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியும் போராட்டத்தில் குதித்தார். போராட்டங்களைத் தொடர்ந்து, ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தும் தடுப்பணை சரிசெய்யப்படாத நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கியிருக்கிறார்கள். இந்தக் குளறுபடிகளுக்கு எல்லாம் யார் பொறுப்பு?

மீண்டும் மிரட்டும் நாமக்கல் நிறுவனம்!
சத்துணவு முட்டை டெண்டர் முறைகேடு புகாருக்கு உள்ளானது, நாமக்கல் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு எதிராக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினும் அறிக்கைகள் வெளியிட்டார். அதே நிறுவனம், வேறு இரண்டு நிறுவனங்களின் பெயரில் தற்போது மீண்டும் பொது விநியோக டெண்டர்களில் இறங்கியிருக்கிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும் திட்டத்தில் இருக்கிறது அரசு. இதற்கான ஒப்பந்தங்களை எடுக்கவும் அந்த நாமக்கல் நிறுவனம் தயாராகிவருகிறது. வேறொரு நிறுவனத்தின் பெயரில் ஆர்டர் வாங்க அனைத்து யுக்திகளையும் அந்த நிறுவனம் கையாண்டு வருகிறது.
அதேபோல, கடந்த ஆட்சியில் மாஸ்க் விநியோகச் சர்ச்சையில் சிக்கியது ஒரு திருப்பூர் நிறுவனம். ரேஷன் கடைகளுக்குப் பருப்பு சப்ளை செய்வதற்கான டெண்டரை, வேறொரு நிறுவனத்தின் பெயரில் எடுப்பதற்கு அவர்களும் தயாராகிவருகிறார்கள். உணவுத்துறை அமைச்சரான சக்கரபாணி எதையும் கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் மேலவைக்குத் தேர்வுசெய்யப்பட்ட கொங்கு மண்டல எம்.பி ஒருவர், உணவுத்துறையின் ஒட்டுமொத்த டெண்டர்களையும் கொங்கு மண்டல நிறுவனங்களுக்கு மடைமாற்றும் வேலைகளை, துறையின் மேலிடத்தோடு சேர்ந்துகொண்டு செய்துவருகிறார். இவை அனைத்திலும் எட்டு இலக்கக் கணக்கில் நடக்கின்றன பேரங்கள்” என்றனர் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.
அள்ளிக் குவிக்கப்படும் கமிஷன்கள்... அட்ராசிட்டியில் அமைச்சர்கள்!
இந்தத் துறைகள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, பால்வளம் ஆகிய துறைகளிலும் கமிஷன் புகார்கள் எதிரொலிக்கின்றன. நம்மிடம் பேசிய அந்தந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், “விவசாய இடங்களை வீடுகட்டும் இடங்களாக மாற்ற நான்கு ‘எல்’ கேட்கிறார்கள். கணக்கு வழக்குகளைக் கச்சிதமாகக் கையாளும் வட்டாட்சியர் ஒருவரே வீட்டு வசதித்துறையின் ஆல் இன் ஆலாக இருக்கிறார். ஊரக வளர்ச்சித் துறையில், மாண்புமிகுக்கு சகல வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் கொடுப்பதே அவருடைய மதுரைக்காரச் சம்பந்திதான். போக்குவரத்துத் துறையில் தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு இனிப்பு வழங்க ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது. இதில், ‘முப்பது சதவிகிதம் கமிஷனைக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஆர்டர் வழங்கப்படும்’ என்று தெனாவெட்டாகச் சொல்கிறார்கள் துறையின் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள். பால்வளத்துறையில், உபரியாகும் பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதற்குச் சமீபத்தில் இரண்டு டெண்டர்கள் விடப்பட்டன. அக்டோபர் 20-ம் தேதி மாலை 3 மணிக்கு டெண்டர் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, அடுத்தநாள் காலை 11 மணிக்கெல்லாம் டெண்டருக்கான கால அவகாசத்தை முடித்துவிட்டார்கள். 24 மணி நேரம்கூட அவகாசம் அளிக்காததால், சிறிய நிறுவனங்கள் ஏதும் கலந்துகொள்ள முடியாத நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பிட்ட சிலர் மட்டும் லாபம் பார்ப்பதற்கு, இப்படி அவசரகோலத்தில் டெண்டர் மூடப்பட்டதற்குக் காரணமே துறையின் வாரிசு பிரமுகரின் கைங்கர்யம்தான். இப்படி அமைச்சர்கள் தரப்பிலிருந்து ஒவ்வொரு வகையிலும் அள்ளிக் குவிப்பது கனஜோராக நடக்கிறது” என்றனர்.

அமைச்சர்களின் இந்த கமிஷன் அலங்கோலம் ஒருபக்கம் வெடித்துக் கிளம்பியிருக்கும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா என்பவர், போக்குவரத்துக் காவல்துறை காவலர் முத்துகுமாரைக் கன்னத்தில் அறைந்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. தன்னுடைய கார் நிறுத்துவது தொடர்பான தகராறில், காவலரைத் தாக்கியிருக்கிறார் கிருபா. இது குறித்துக் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யாத்ரி நிவாஸ் கட்டடப் பணிகளைப் பார்வையிட சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கடந்த வாரம் காஞ்சிபுரம் வந்திருந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, தி.மு.கழக எம்.எல்.ஏ எழிலரசன் ஆகியோரும் வந்திருந்தனர். வாகனங்கள் நிறுத்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதைப் பார்த்ததும் டென்ஷனான எழிலரசன், “யாருய்யா இங்க வண்டிய நிப்பாட்ட சொன்னது. ஒழுங்கா எடுக்கச் சொல்லு... இல்லைன்னா...” என்று சில தரக்குறைவான வார்த்தைகளோடு அறநிலையத்துறை அதிகாரி தியாகராஜனை பார்த்துக் கத்தினார். அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையிலேயே ஓர் அரசு அதிகாரியை தி.மு.கழக எம்.எல்.ஏ இப்படிப் பேசியது கடும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
வெண்மைத்துறையின் அமைச்சர் தொகுதியில் காலியாக இருந்த டவுன் பிளானிங் இன்ஸ்பெக்டர் பதவியை நகராட்சி அதிகாரிகள் நிரப்பியிருக்கிறார்கள். இதில் ஆத்திரமடைந்த அமைச்சர் வாரிசு, ‘எங்களுக்குத் தெரியாமலேயே நியமனம் பண்றீங்களா?’ என்று தங்கத்தின் பெயரைக்கொண்ட அதிகாரியை ஒருமையில் பேசியிருக்கிறார். உடனடியாக டவுன் பிளானிங் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது போன்ற அட்ராசிட்டிகள் பல துறைகளிலும் அரங்கேறிவருகின்றன.
“தி.மு.க ஆட்சியை ‘க்ளீன் கவர்ன்மென்ட்’ அடையாளத்துடன் கொண்டுசெல்லத் திட்டமிடுகிறார் முதல்வர் ஸ்டாலின். பத்து வருடப் பசியோடு வந்திருக்கும் அவர் சகாக்களிடம் அந்த எண்ணமிருப்பதாகத் தெரியவில்லை. கிடைப்பதையெல்லாம் ஒருபக்கம் அள்ளிக் குவித்துக்கொள்வதோடு, பொறுப்பற்ற வகையில் அட்ராசிட்டி செய்துவருகிறார்கள். முதல்வர் சுதாரிக்கவில்லையென்றால், தேசிய அளவில் அவர் கட்டமைக்க நினைத்திருக்கும் ‘சிறந்த முதல்வர்’ பிம்பமெல்லாம் பஸ்பமாகிவிடும்” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். முதல்வர் சுதாரிப்பாரா?